Wednesday, December 5, 2012

முடிவில்லா மூடம்

முடிவில்லா மூடம்
 
நீரோட்டம் இல்லாமல் நிலத்தை நம்பி
.. நீள்துயரில் உழுதொழிலார் நலியும் போதில்
தேரோட்டம் தேவனுக்குத் தேவை என்று
.. தேதியிலே திருவாரூர்த் தெருக்கள் தோறும்
போராட்டம் நடத்துவதாய் காலம் நேரம்
.. பொசுக்குவதில் அரசியலில் கட்சி மோதல்!
வேரோட்டச் சிந்தனைகள் ஆழம் சென்றால்
.. விளைவுஆலின் விழுதுகளாய் மனிதம் தங்கும்!
 
பூனைஒன்று தன்னெதிரே குறுக்கே ஓட
.. புறப்பட்ட மனிதனவன் புத்தி கெட்டு
போனாலும் காரியங்கள் நடவாதென்று
.. பொசுக்கென்று தன்போக்கை மாற்றிக் கொள்வான்
ஆனைவரும் மணியோசை நல்லதென்பான்
.. அதுமதத்தால் ஓடிவந்தால் எதிர்செல்வானா?
பானையிலே தண்ணீர்க்கொண்டொருத்தி வந்தால்
.. பாழ்சகுனம் எனும்மனக்கூன் நாய்வால் தானா?
 
ஆண்டவனின் பேர்பாடி ஒற்றைப் பார்ப்பான்
.. அவன்போக்கில் எதிர்வந்தால் சகுனம் தீதாம்!
மூண்டவஞ்ச நெஞ்சோடு நாட்டை ஏய்க்கும்
.. முனைப்புள்ள தலைவன்முன் போகலாமா?
தீண்டாதோர் நோண்டிவைத்த கிணற்று நீரும்
.. தீர்க்குந்தான் தாகத்தை! தொட்டால் தீட்டா?
பூண்டிஏரி வாஸ்துவழை அமைந்ததாலா
.. பொதுமக்கள் குடிநீராய்ச் சேறும் இங்கே?

Tuesday, December 4, 2012

இழப்பில் எழுந்த எண்ணம்

இழப்பில் எழுந்த எண்ணம்
 
விரல்களுக்குக் கனமேற்றும் மோதிரங்கள்
.. விதவிதமாய்ச் செல்வந்தர் அணிவதுண்டு
குரலெடுத்துப் பேசுங்கால் கையை நீட்டி
.. குறிப்பாகப் பலர்கண்கள் மேய வைப்பார்
ஒருவிரலில் பலவாகா வாய்ச்சொற் கேற்ப
.. ஒயில்நடன அசைவுகளாய்க் கையோ டாடி
எரிகின்ற விளக்கொளியில் கற்கள் மின்ன
.. எழில்சேர மதிப்புறுவார் பொன்னால் அன்னார்!
 
பொன்னணிகள் ஏதுமின்றி இருந்தேன் ஏதும்
.. போடாமல் விரலியல்பாய் இருக்க விட்டேன்
என்றாலும் உணவள்ளும் விரலில் பொன்னின்
.. இலேசான உரசலினால் நன்மை என்றே
சொன்னவர்கள் சொற்கேட்டுச் சபலம் கொண்டேன்
.. சுத்ததங்க பஸ்பமுண்ண என்னால் ஆமா?
என்னயிது? இவ்வயதில் பொன்னாசையா?
.. எனையிடித்துத் துணைவியவள் மகிழ்ந்த துண்மை!
 
சென்றவாரம் மூன்றுதினம் காய்ச்சல் கண்டு
.. செயலொடுங்கி இருக்கவுடல் இளைத்த தாலே
என்விரலை விட்டுவிடு தலையாய்க் கீழே
.. எங்கேயோ தொலைந்(து)ஆழி வருத்தம் உண்மை!
அன்றாடம் காலைநடைப் பொழுதில் எங்கோ
.. அதுநழுவிப் போனதனால் இழப்பென்றாலும்
நன்றாமே ஓரேழைக் கண்டெடுத்தால்
.. நலிவுக்கும் மெலிவுக்கும் உதவும் தானே!

Monday, December 3, 2012

பாடுகவே பாவேந்தர் பாட்டு

பாடுகவே பாவேந்தர் பாட்டு
 
செஞ்சொல்லில் கவியின்பம் தரவே - புரட்சி
செய்தோரே பாவேந்தர் காப்பியங்கள் பெறவே
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - கவிதை
சாற்றுகிற தேனமுதே சத்துமிகு ஊறல்
நெஞ்சுணரப் புரட்சிக்கவி கூறல் - பெரும்
நெருப்பாகப் பகையழித்துத் தடுக்கும் எல்லை மீறல்
அஞ்சாத வீரத்தாய் காதை - அரசி
அழித்தனளே ஆய்ந்தறிந்தே அயலவரின் சூதை
 
மாந்தோப்பில் மணங்கூட்டும் காதல் - ஒத்த
மனம்முறிக்கத் துணிந்தோரின் குணம் பணிந்தா சாதல்?
தீந்தமிழர் வாழ்வியலில் பெருமை - பாவாய்த்
தீட்டியதோர் ஓட்டநடைத் தெளிவெண்ணல் அருமை
ஏந்திவரும் தமிழுணர்வின் சாறு - யாப்பில்
ஏறிவர ஊறிடும்நா இனிக்குமெனக் கூறு
மாந்திடவே அமுதமென ஆறாய் - வேந்தர்
மணிக்கவிதை இனநலத்தின் வெள்ளமெனப் பாராய்
 
பெண்ணுக்கு நீதி சொல்ல வாசி - பெண்மை
பேணுவதும் போற்றுவதும் பெருமை என்றோசி
கண்ணிருந்தும் கைம்மை வரவேற்போர் - அவர்தம்
கற்றறிவை உற்றறிந்தும் யாரவரை ஏற்பார்?
மண்ணகத்தைத் தாயென்றே உரைப்பார் - குலத்தின்
மரபுதனை வளர்ப்பவனை மதியாமல் மிதிப்பார்
எண்ணற்ற வகையிழிவைச் செய்வார் - தம்மை
ஏலாது விழிப்புறவே ஏற்றிடடா கவிப்போர்!

Sunday, December 2, 2012

நகைப்பாய் நெஞ்சே!


நகைப்பாய் நெஞ்சே!
 
வசதியுள்ளோன் வாய்திறந்து கொட்டுகின்ற
.. வார்த்தையெல்லாம் கவிதையென்பார் நாணமின்றி
பசப்புமொழி பகல்வேடப் போர்வை என்று
.. பகுத்துணரார் இன்சொல்லே என்றுரைப்பார்
கசப்புணர்வுக் காரணத்தால் கருத்தை எட்டிக்
.. காயிலிதில் என்னசுவை என்பார்; காய்ச்சல்
வசமானோர் நிசமுணர்ந்தும் நிழலே என்பார்
.. வாழிடமே பாழிடந்தான்! நகைப்பாய் நெஞ்சே!
 
கலைவல்லார் அரங்கத்தில் கீழிருக்கக்
.. கவர்ச்சியுடை யாளொருத்தி மேடை யேறி
அலைவிழியைச் சுழற்றியங்குக் காலை ஆட்டும்
.. அவலத்தை ரசிப்பானோ அறிவு ஜீவி
கலைவல்லார் குழுவுனிலே கலந்து கொள்ளக்
.. கடுகளவு பகுத்தறிவும் இல்லாம் கட்சித்
தலைவனுக்குத் தோல்கொடுப்பேன் என்று பேசும்
.. தமிழ்க் கொலைக்கும் தட்டும்கை! நகைப்பாய் நெஞ்சே!
 
படம்பிடித்தால் முகங்காட்ட பறந்து சென்று
.. பார்த்தாங்கே முதல்வரிசை அமர்ந்து கொள்ள
இடமில்லை எனத்தெரிந்தும் மேடை யுள்ள
.. எவருக்கோ தெரிந்தவர்போல் விரைந்து சென்றே
அடமாக அவரோடு பேசும் போக்கில்
.. அங்கேஒளிப் படத்தில்தான் விழுந்த பின்னே
குடத்தேனைக் குடித்த மகிழ்வோடு காணும்
.. குறுமதியோர் நடிப்புதனை நகைப்பாய் நெஞ்சே!

Friday, November 30, 2012

இல்லை

இல்லை
 
தொல்லையென நினைப்போர்க்குச் சொந்தம் இல்லை
.. தொலைவென்று தயங்குவோன்முன்னேறிச்செல்லான்!
இல்லையெனக் கிடப்போர்க் கெந்நாளும் தொல்லை
.. எதிர்பார்த்தே வாழ்வோர்க்கே மாற்றம் என்றும்
சொல்லளந்து பேசுவோர்க்குக் குழப்பம் இல்லை
.. சோர்ந்திருளில் அழுவோர்க்கு விடிவே இல்லை
வில்லுக்கு வளையாமல் வேகம் இல்லை
.. வீம்புக்கும் வெறுப்புக்கும் விவேகம் இல்லை!
 
தரைதொடுமுன் மழைத்துளிக்கு நிறமே இல்லை
.. தாங்குங்கோல் உளுத்துவிடின் பாழாம் பந்தல்
உரைப்பதிலே பொருளின்றேல் உளறல் ஆகும்
.. ஊமையென இருந்துவிடில் உண்மை பொய்யாம்
கரையிடுதல் காத்தலுக்கே அழகு மட்டும்
.. காட்டுவதானாலதுவும் ஓட்டைச் சட்டி
அரைகுறைகள் அடங்காமல் ஆர்பரித்தால்
.. அழகில்லை! அறிவீனம் ஆண்மை யாமோ?
 
முள்வேலி தனைத் தாண்டி ஓடும் ஆடு
.. முட்டியுடைபட்டதனை நினைத்தல் இல்லை
எள்ளில் நெய் நசுக்காமல் கிடைப்பதில்லை
.. எலும்பின்மேல் தசையின்றேல் உருவம் இல்லை
கள்ளுக்குப் போதையின்றேல் மதிப்பே இல்லை
.. கடமைக்குக் கையூட்டால் பெருமை இல்லை
தள்ளுபடி விலைப்பொருள்கள் தரத்தில் இல்லை
.. தகர்த்திடுதல் தீமையெனில் குற்றம் இல்லை!

Thursday, November 29, 2012

எண்ணத் துளிகள்

எண்ணத் துளிகள்
 
உறவைப் பெருக்கும் உணர்வில் சிறக்கும்
திறமே ஒழுங்கின் திடம்
 
திடத்தை உடல்கொண் டிருத்தலின் மேலாம்
நடத்தையில் சீர்மை நவில்
 
நவிலும் நலம்பல நாளும்மேற் சேர்ந்தும்
அவிக்கும் அழுக்கா(று) அறை
 
அறையில் ஒழுங்கின்மை அம்பலம் வந்தால்
இறைதடுத்தும் ஓங்கும் இழிவு
 
இழிவில் விழுந்தோரை இவ்வையம் தூற்றும்
ஒழியும் உளதும் உணர்
 
உணராதான் நூலறிவும் உண்மையில் வீணாம்
பிணத்துக்கும் உண்டோசொல் பீடு?
 
பீடில்லாப் பெற்றோர்க்கும் பிள்ளையால் பேறெனில்
நாடவரை வாழ்த்துதல் நன்று
 
நன்றெனினும் அன்றெனினும் நற்பண்பில் ஓங்கிடும்
அன்புடையார்க் கில்லை அவம்
 
அவமதிப்பை எண்ணி அகங்குன்றாப் பேதை
சவமென்றே சாற்றல் சரி
 
சரியாத் தடந்தான் சமநிலை காக்கும்
பரிவில் தவறிடின் பாழ்

Wednesday, November 28, 2012

ஒவ்வா நிலை

ஒவ்வா நிலை
 
வேர்களுக்கு நீரில்லாது
.. வெள்ளமெங்கே போச்சு?
வீணர்களும் கொள்ளையரும்
.. பகிர்ந்திடப் பாழாச்சு!
பார்பதவித் தேரினிலே
.. கொள்ளையிடும் வீச்சு!
படித்தவர்க்கும் பாமரர்க்கும்
.. பயம் நடுங்கும் மூச்சு!
 
வேண்டிநின்ற சுதந்திரத்தின்
.. விளைவு சிலர்க்கே உச்சம்!
விளம்பரத்தில் தான் வளர்ச்சி
.. ஏழைகண்ட மிச்சம்!
மீண்டுமொரு சுதந்திரப்போர்
.. வேண்டுமிந்த நாட்டை
மீட்டெடுத்துச் சமத்துவத்தேர்
.. ஓட்ட, வெற்றி நாட்ட!
 
சாதிமத பேதங்களும்
.. சதிச்செயலும் நாளும்
சகுனம் வாஸ்து சோதிடங்கள்
.. ஆருடங்கள் நீளும்!
ஓதுகின்ற அறிவியலுக்
.. கொவ்வா நிலை போலும்!
ஊழல்களே வேரழித்தால்
.. ஒழுக்கமென்று மீளும்?