Tuesday, July 31, 2012

கதி மாறும் கவிதை

கதி மாறும் கவிதை
 
பிழையாக எழுதியதைச் சுட்டிக் காட்ட,
.. பெருங்கோபம் கொள்பவனும் கவிஞன் தானா?
அழைப்பதற்கோர் அடைமொழியைத் தானே சொல்லி
.. ஆனந்தப் படுவதன்றிப் பிழையை மாற்றான்!
தழைத்துள்ள மொழியறிவை வளர்த்துக் கொள்ளல்
.. தகும்தானே! அப்போதே கறந்த பாலை
வழியத்தான் காய்ச்சியது கெட்டுப் போனால்
.. வடிகட்டிக் குடிப்பாரா? கொட்டு வாரா?
 
கவித்துவத்தை நாம்கறந்த பாலாய்க் கொண்டால்
.. காட்டுமதில் மொழிக்கலப்போ பிழையோ நன்றோ?
செவிக்கினிய சொற்களினால் பொருள் பொருந்தச்
.. செய்யாமல் நயபாவ எழிலுமின்றி
அவியலெனக் காட்டுதலே புதுமை என்றே
.. அதிமேதைத் தனமாக அகந்தை யோடு
குவிக்கின்றேன் கட்டுகோப் பெதற்காம் என்பார்
.. குழப்புதலும் கவித்திறத்தின் புதுமை யாமோ?
 
இலக்கணம் என்பதன்பொருளே அழகு தானே?
.. இதைமறுப்போர்க் கேற்பட்ட இன்னல் யாதோ?
பலமொழியார் பாராட்டும் குறளைத் தந்தான்
.. பாட்டனவன் ஈரடியால் உலக ளந்தான்
நலம்கூடும் கருத்தெதனைப் புதிதாய்ச் சொல்ல
.. நான்வேண்டேன் இலக்கணக் கட்டுப்பாடென்பான்!
சில ஆண்டு கடந்தாலும் என்றோ வந்த
.. சேதிசொல்லும் உரைநடையும் புதுப்பா தானே?

Sunday, July 29, 2012

செம்மொழிக் கவியின்பம் - தாய்ப்பால்

செம்மொழிக் கவியின்பம் - தாய்ப்பால்
 
தன்னினத்தைத் சாய்ப்பதற்கு வெட்டுக் கத்தி
.. தன்பிடியாய் அதேமரத்துக் கிளையின் கொம்பு
தன்மொழியைச் சிதைப்பதற்குச் சிலர் துணிந்து
.. தகுதியிலாப் புனைவுகளைப் புதுமை என்பார்!
அன்னியரின் மொழிச்சொற்கள் திணித்து வைப்பார்;
.. அவியலுக்குக் கவிதையெனும் பெயரும் சூட்டிப்
புன்னகைப்பார்! பொன்னைவிட மின்னும் போலி
.. புதுமெருகும் ஒதுங்கிவிடச் சிரிக்கும் உண்மை!
 
வெண்திரையில் கரும்புள்ளி கவனம் ஈர்க்கும்!
.. வெண்மதிமேல் குவிமேகம் வெளிச்சந் தின்னும்!
புண்சீழாம் செங்குருதிச் சீர்கேட் டாலே
.. புரையோடும் பெருங்குற்றம் புடைத்து வீழ்த்தும்!
கண்ணைப்பொய் மயக்குவதைப் பழக்கம் நீக்கும்!
.. கனிச்சுவையில் காரமிட்டுச் சுவைப்பார் உண்டோ?
பண்ணிசையே பாடுபொருள் மாற்று மானால்
.. பாழாகும் பாடலுடன் படைத்தோன் பேரும்!
 
வண்ணங்கள் ஓவியத்தின் பொலிவைக் கூட்டும்
.. வளர்கவிதை உணர்வுகளின் தெளிவைக் காட்டும்
எண்ணங்கள் பிறமொழியின் சொற்கூட்டங்கள்
.. என்றானால் பலவீட்டுப் பிச்சைச் சோறே!
விண்ணூற்றாம் மழைநீரின் வெள்ளந்தன்னில்
.. விழிமிடத்தின் மண்நிறமும் சுவையும் சேரும்!
தண்டமிழ்த் தாய் மொழிப்பாலில் கலப்பைச் சேர்ப்போர்
.. தம்சேய்க்கு நோய்சேர்க்கத் தயங்கா தோரே!

Saturday, July 28, 2012

செம்மொழிக் கவியின்பம் - செம்மொழிப் பொங்கல்

செம்மொழிக் கவியின்பம் - செம்மொழிப் பொங்கல்
 
பூமிவிளை பொருள்களினால் பொலிவை ஏற்கும்
.. புத்தாண்டு தைமுதல்நாள் பொங்கல் வைப்போம்!
நாமுழைத்துப் பெறுமின்பம் நாட்டு மக்கள்
.. நலமுறவே செய்துமன நிறைவை ஏற்போம்!
தேமதுரத் தமிழொலியே விண்ணை முட்டி
.. திசையெங்கும் பொங்கலொலி எழுப்பிச் சேர்ந்து
பூமணத்துப் பொழிலிடையே இயற்கை யன்னைப்
.. புகழ்பாடி மகிழ்ச்சியிலே திளைப்போம் நாமே!
 
கதிரவனின் ஒளிவெப்பம் காற்று வானம்
.. கரத்தளிக்கும் அமுதமெனும் மழையும் ஓடும்
நதிநீரும் வெள்ளத்தைத் தேக்கும் ஏரி
.. நன்செயென்றும் புன்செயென்றும் உயிர்கள் வாழ
அதிவளங்கள் அளிக்கிற அன்னை பூமி
.. அகங்குளிர உழைப்பேற்கும் உழவர் வாழ்க!
கதிமாறிப் போயுலகில் எங்கோ வாழ்ந்தும்
.. கனித்தமிழர் மறவாப்பண் பாட்டுப் பொங்கல்!
 
மணம்காண இருக்கின்ற மக்கள் நெஞ்சில்
.. மலர்கின்ற கற்பனையில் மகிழ்ச்சிப் பொங்கல்
மணம்கொண்டோர் மருமருக்க ளாக மாறி
.. மறுவீட்டில் புது உறவில் அன்புப் பொங்கல்!
குணமுள்ள துணையோடு மனைய றத்தில்
.. குறைநிறைகள் தாண்டியேதம் மக்கள் சொந்தம்
இணங்கிவரும் நட்புடனே குலவும் பொங்கல்!
.. இனியகவி பொங்க உணர்வேற்றும் தானே!
 
சிந்தைநலச் சிறப்புடையோர் மாட்டுப் பொங்கல்!
.. செந்தமிழைச் செம்மொழியாய்க் காணும் பொங்கல்!
சொந்த இனம் நாடுநலம் செழிக்கத் தொண்டு
.. சோர்வின்றிச் செய்தவர்க்கு வெற்றிப் பொங்கல்!
நந்தமிழர் ஆட்சிமுறை பெரியார் கொள்கை
.. நம்மறிஞர் அண்ணாவின் தடத்தில் சென்று
இந்தியநா டிதற்கேற்ற எடுத்துக் காட்டாய்
.. இயங்கிடநாம் பெருமிதத்தில் பொங்கு வோமே!

Friday, July 27, 2012

செம்மொழிக் கவியின்பம் - தை பிறந்தால்...

செம்மொழிக் கவியின்பம் - தை பிறந்தால்...
 
சிற்றூரில் பேரூரில் தமிழினத்தார்
.. சிறப்பாகக் கொண்டாடும் தைப்பொங் கல்நாள்
உற்றதமிழ்ப் புத்தாண்டாய் உவக்கின் றோம்நாம்
.. உழுதுலகுக் குயிர்தருவார் நல்லு ழைப்பால்
பெற்றதனா லாம்விளைவைக் கண்டுவந்து
.. பெருமகிழ்வாய் பொங்கலெனும் விழாவெடுப்போம்!
கற்றோரும் மற்றோரும் கதிரோன் முன்னே
.. களிப்போடு படைத்திடுவார் பால்வெண் பொங்கல்!
 
கரும்புடனே இஞ்சிமஞ்சள் வெல்லம் எல்லாம்
.. கலயத்துப் பொங்கலுடன் இனிய காட்சி
தரும்விதத்தில் இல்லத்தில் பெறும் மகிழ்ச்சி
.. தாலியேற்றுச் சென்றமகள் துணைவனோடு
பெரும்மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளம் நீந்த
.. பெற்றோரின் விழிக்குளத்து வெள்ளம் காண்போம்!
வரும்மகிழ்ச்சி வதுவைக்குக் காத்திருப்போர்
.. வயதங்கே தைதைதை எனக் குதிக்கும்!
 
வழிபிறக்கும் தையிலென்று வரவேற்போடும்
.. வந்ததே தை சீர்செய்யச் செலவுக் கென்று
விழிபிதுங்கி நிற்போரும் வீணே காலம்
.. விரைகிறதே ஆண்டுகளாய் வயதும் என்றே
அழுகின்ற மௌனத்துக் காட்பட் டோரும்
.. அவதியுறும் நிலையில் துன்பத்தை மீறிக்
குழந்தைபெற மகள்வருகைக் குதூகலிப்பில்
.. குறைமறந்து குதிப்போரும் கொண்ட தையே!

Thursday, July 26, 2012

செம்மொழிக் கவியின்பம் - புத்தாண்டு நன்னாள்

செம்மொழிக் கவியின்பம் - புத்தாண்டு நன்னாள்
 
புத்தாண்டுத் தமிழருக்குத் தைமுதல் நாள்
.. பூரிப்பாய்க் கதிரவன்முன் பொங்கல் வைப்போம்!
புத்தரிசி பானையிலே பொங்கும் போது
.. பொங்கலோ பொங்கல் என்றே நன்றி பொங்க
சத்தான விளைபொருளை வயல்கொழிக்கச்
.. சார்பான ஒளிவெப்பக் கதிரோன் தன்னை
முத்துப்போல் மழைத்துளிகள் ஈந்த வானை
.. மொத்தமுமாய் இயற்கையினைப் போற்றுகின்றோம்!
 
மாந்தருடன் வயல்வெளியில் சேர்ந்து ழைத்த
.. மாடுகளை நன்றியுடன் மறுநாள் போற்றி,
மாந்ததற்கு மகிழ்ச்சியினை மனத்துள் பொங்கும்
.. மாட்டுப்பொங் கல்நாளில் கொண்டாட் டத்தில்
நீந்துகின்ற மக்களுடன் உறவும் சேர
.. நெடுஞ்சாலை தனில் வண்டி மாடும் ஓடும்!
பூந்துளிர்போல் வளர்ந்துள்ள கன்னிப் பெண்ணும்
.. பொங்கிடும்நாள் மறுநாளாம் கன்னிப் பொங்கல்!
 
கன்னிபொங் கல்காணும் பொங்கல் என்று
.. காரணங்கள் பலவாக மூன்றாம் பொங்கல்
இன்பமுடன் கொண்டாடும் தமிழர் பண்பில்
.. இல்லத்தில் காணவரும் உறவை நட்பை
அன்போடு வரவேற்று விருந்த ளிப்போம்
.. அகம்மகிழக் காணுதற்கும் வெளியே செல்வோம்!
தன்னுள்ளம் கவர்ந்தவரை ஓரக் கண்ணால்
.. தாக்குதற்கும் பருவத்தேர் ஓடும் நன்னாள்!

Wednesday, July 25, 2012

செம்மொழிக் கவியின்பம் - வாழ்த்தி யருள்க

செம்மொழிக் கவியின்பம் - வாழ்த்தி யருள்க
 
நாவேந்திப் புலவரெலாம் நல்லறங்கள் மொழிவதனால்
.. நாடோறும் வளரும் தமிழே!
நஞ்சனையார் வஞ்சனையால் நலிவுறவே செய்தாலும்
.. நலம்பெருகித் திகழும் தமிழே!
 
மூவேந்தர் மூச்செனவே முத்தமிழாய் இத் தரணி
.. முழுமையுமாய் ஒளிர்ந்த தமிழே!
முறைதவறும் போதரசர் மூளையிலே தெளிவேற்ற
.. முன்புலவர் மொழிந்த தமிழே!
 
பூவேந்தும் தேனினிமை புகன்றிடுவோர் வாய்மொழியாய்ப்
.. புத்துணர்வைப் பொழியும் தமிழே!
புதுமைநலம் தினம்பெருக பழைமைவளம் மனம் குளிரப்
.. புவனமெலாம் உலவும் தமிழே!
 
பாவேந்தர் தன்மானப் பண்பாட்டுப் பாக்களினால்
.. பண்டைநிலை கண்ட தமிழே!
பண்படவே பயின்றிடுவோர் பாப்புனைவில் தேர்ச்சியுறப்
.. பற்றுடனே வாழ்த்தி யருளே!

கவிமாமணி பூவை அமுதன்

கவிமாமணி பூவை அமுதன்

பூவை அமுதன் பற்றிய குறிப்பு:

ஏறக்குறைய 350 நூல்களுக்கு மேல் எழுதியுள்ள பூவை அமுதன் அவர்களின் நூல்களில் பரிசு பெற்றவைகளின் விவரம் வருமாறு:

1. நமது உள்ளம் (உளவியல் நூல்)
தமிழக அரசு - 1970

2. பல்லவ நாட்டுச் சிறுவர்கள் (சிறுவர் நாவல்)
கோவை எல்லப்பா ரெங்கம்மாள் அறக்கட்டளை - 1994

3. முத்து நம் சொத்து (சிறுவர் நாடகம்)
ஆனந்தாச்சாரி அறக்கட்டளை - 1995

4. கிராமத்துப் பையன் (சிறுவர் நாடகம்)
ஏ வி எம் அறக்கட்டளை - 1995

5. உயிர் உறவு (எயிட்ஸ் விழிப்புணர்வுக் காப்பியம்)
திருப்பூர் தமிழ்ச் சங்கம் - 1999

6. விழுந்ததும் எழுந்ததும் (கவிதைத் தொகுப்பு)
பாரத ஸ்டேட் வங்கி - 2002

7. உணர்வுகள் (கவிதைத் தொகுப்பு)
பாரத ஸ்டேட் வங்கி - 2005

8. அமுத ஊற்று (கவிதைத் தொகுப்பு)
கல்லாடன் கல்வி அறக்கட்டளை - 2007

குறிப்பிடத்தக்கவை:

- தெய்வமகள் (புதினம்) சென்னைப் பல்கலைக் கழகப் பட்ட வகுப்புப் பாடநூல்
- உயிர் உறவு, கவி முரசு, விழுந்ததும் எழுந்ததும் (கவிதைத் தொகுப்புகள்) கல்லூரிகளில் பாடல்நூல்

பெற்ற விருதுகள்:

1. பாரதி பணிச் செல்வர் - அ.இ.த. எழுத்தாளர் சங்கம்

2. திருக்குறள் உரைச்செம்மல் - உலகத் திருக்குறள் மையம்

3. வள்ளியப்பா இலக்கிய விருது - வள்ளியப்பா இலக்கிய வட்டம் (27/11/99)

4. சாதனையாளர் விருது - 'முகம்' இதழ் (21/11/99)

5. கவிஞர் திலகம் - தாய்மண் இலக்கியக் கழகம் (26/12/99)

6. குழந்தை இலக்கிய மாமணி - குழந்தை எழுத்தாளர் சங்கம் (27/11/99)

7. கண்ணதாசன் விருது - கவியரசர் கண்ணதாசன் இலக்கிய மன்றம்
(18/12/2000)

8. சிறுவர் இலக்கிய சீர்மணி - சிறுவர் இலக்கியச் சிறகம் (21/4/2009)

9. கவிமாமணி - பாரதி கலைக்கழகம் (20/12/2009)

10. திருக்குறள் மாமணி - திருவள்ளுவர் இலக்கியக் கழகம் (2005)

11. பாரதி புரஸ்கார் பட்டயம் - பாரதி யுவகேந்திரா (2003)

12. திருக்குறள் மாமணி - உலகத் திருக்குறள் வாழ்வியல் நெறிச் சங்கம் (30/7/2007)

முகவரி:

கவிமாமணி பூவை அமுதன் அவர்கள்
(எஸ் ஆர் கோவிந்தராஜன் MA BT)
மனை எண் 142, இரண்டாம் தெரு
பாஸ்கர் காலனி, சென்னை 600092
தொலைபேசி: 9884449989