Sunday, September 30, 2012

மழலைப்பேறு

மழலைப்பேறு
 
குலம்வளர் வித்து
குடும்பத்தின் சொத்து
நலம்நிறை மகிழ்ச்சி
நடமிடும் எழில்தேர்
வலம்வரும் வான்மதி
வாழ்க்கைப் பயன்நிதி
உலவிடும் ஓவியம்
உறவுணர் காவியம்!
 
உயிர்வளர் அமுதம்
உளக்குளக் குமுதம்
உயர்தரு நிதியம்
உறவுகள் பதியம்
பயன்பல பதியும்
பயனுறும் இதயம்
இயலிசைக் கூத்தின்
இனிமையின் சாறு!
 
(வேறு)
 
பேசிடும் செல்வமாகப்
பெருமைகள் சேர்ப்பதாக
மாசிலா இன்பம் வாழ்வில்
மண்டியே சுரப்பதாக
வீசிடும் தென்றல் தம்மை
விளங்கிடும் அன்பைக் கொண்டே
ஆசையில் அணைப்பதாக
அமைவதே பிள்ளைச் செல்வம்!
 
கோடியாய்ப் பணத்தைச் சேர்த்து
குவித்துள மாடி வீட்டில்
ஓடியே ஆடிப் பாடும்
ஒரு மகவில்லை என்றால்
வாடிடும் நிலைமை அன்றோ
வளர்ந்திடும் வாழ்நாள் எல்லாம்!
கூடிவாழ் குடும்பம் தன்னில்
குழந்தையால் குலவும் பாசம்!
 
தழைத்திடும் மரக்கிளைகள்
தரைதொடும் விழுது பெற்றால்
பிழைத்திடும் ஆயுள் நீளும்
பெருகிடும் இனவளர்ச்சி!
மழலைவாய்மொழி மணக்கும்
மனமெலாம் பூக்காடாகும்
குழந்தையின் விழிவெளிச்சம்
குடும்பத்தில் ஒளி யளிக்கும்!

Saturday, September 29, 2012

நாள் என் செய்யும்?

நாள் என் செய்யும்?
 
மானத்தைப் பெரிதாக மதித்த காலம்
.. மலர்ந்திடுமா மீண்டுமெனும் எதிர்பார்ப் பேக்கம்
போனதையே பெருமையாகப் பேசிக் கோன்டு
.. பொழுதோட்டும் போக்கினிலா புதுமை பூக்கும்?
ஏன்நாமும் முன்னைவிட சிறப்புற் றோங்கி
.. இருக்கின்றோம் அறிவியலில் பெருமை தானே?
ஊன்பொதிக்கா உயிர்பெற்றோம்? ஊருக்கென்றும்
.. ஒருநன்மை செய்யாக்கால் நாளென் செய்யும்?
 
மனம் பெருத்தோர் வாழ்ந்திருந்த காலம் அன்று!
.. மாசாசை மலைபோன்று வளரவில்லை
பணம்பெருத்தோர் பேராசைப் பெருக்கினாலே
.. பஞ்சையரின் உயிர்வாழ்வு பாழாய்ப் போகக்
குணம்கொண்டோம் தாம்மட்டும் பதுங்கிக் கொள்ள
.. குற்றங்கள் திறமைகளாய் மதிக்கும் போக்கில்
கணத்துக்குக் கணமழிவில் உலகம் சாயக்
.. கடனாற்றும் கருத்தின்றேல் நாளென் செய்யும்?
 
இந்தநாளில் நம்வாழ்க்கை முறைதான் நன்றா?
.. இதைஎண்ணிப் பின்வருவோர் போற்றுவோரா?
சொந்தபந்தம் சுகதுக்கம் பொதுவே யார்க்கும்!
.. சுயநலத்தைப் பெரிதாக எண்ணாச் சாறோர்
எந்தநாளில் வாழ்ந்தாலும் வரலாறாவார்!
.. எல்லாமும் தமக்கென்பார் இழிந்தே சாவார்!
வந்தவழி எனும்நினைப்பே வீண்நாள் ஆக்கும்
.. வாழ்வித்து வாழ்கின்ற நாளே நன்னாள்!

Friday, September 28, 2012

யாரை? எங்கே?

யாரை? எங்கே?
 
தூக்கிவிடக் காசள்ளிக் கொடுத்தால் தங்கள்
.. தோள்களிலே சுமந்துயர வைக்கும் மக்கள்
வாக்கருமை நன்குணர்ந்தாலன்றிப் பொல்லா
.. வஞ்சகர்கள் பதவித்தேர் ஏற அஞ்சார்!
போக்கற்றோர் தவறுகளைப் புரிந்தே செய்யும்
.. புன்மைநிலை அறிவாற்றல் அழிக்க வானால்
ஆக்குதற்காம் அறிவாற்றல் அழிக்க வானால்
.. அவலங்கள் பெருக்கத்திற் களவும் உண்டோ?
 
உண்பதற்கும் உடுப்பதற்கும் உறைவதற்கும்
.. ஓயாமல் உழைப்போன் இல்லத்தில் கண்ணீர்!
கண்மூடித் தூங்கி விடாக் கவலை வாட்ட
.. காட்டுகிற பணம் ஆசைத் தீயை மூட்டும்
எண்ணத்தில் அன்றையநாள் தேவை நிற்கும்
.. ஏமாற்றப் பின்விளைவின் திரையாய் வஞ்சம்!
மண்செழிக்கப் பாட்டாளி உழைப்புத் தேவை
.. மாண்புகளின் தேரிழுத்தல் பின்நாள் சேவை!
 
ஏற்றிவிட்டோர் தலைகுனித்து நிற்கும் நேரம்
.. இருமாந்து விம்மிஎழும் நெஞ்சில் போதை
காற்றிலேறிக் கலசத்தில் தங்கும் கந்தல்
.. கட்டிவைத்த கொடிபோல அசைந்து காட்டிப்
போற்றுதலை எதிர்பார்த்தல் அகந்தை தானே?
.. பூசைப்பூ வாடியபின் போவதெங்கே?
நேற்றின்று நாளைவாக்குறுதி எல்லாம்
.. நினைவிருந்தும் கேட்பதெனில் யாரை, எங்கே?

Wednesday, September 26, 2012

சிந்திப்போமா?

சிந்திப்போமா?
 
பொழுதெல்லாம் புழுதியிலே கிடப்போனுக்குப்
.. பூமணமும் ஒவ்வாமை நோயுண்டாக்கும்
அழுதிருப்போன் போல் முகத்தை வைத்திருப்போன்
.. அகமகிழ்ச்சி நிறைந்தவனாய் இருக்கக்கூடும்!
விழுதுகளே சிலமரத்தை வேர்போல் தாங்கும்
.. விடியாத இருளினிலும் விளக்கம் தோன்றும்!
முழுதுணர்ந்தோர் சிறுபிழையில் சிக்கக் கூடும்
.. மூளியில்லா முழுமையெனல் முயற்கொம்பே தான்!
 
கழுதையது மிக அதிகம் பொதிசுமுக்கும்
.. கனவேகக் குதிரையும்தான் குழியில் தள்ளும்!
பழுதுகளும் பாராட்டப் பலரைச் சேர்க்கும்
.. படித்தவர்க்கும் பணம்பெருகக்குணங்கள் சாகும்!
உழுபவர்கள் அழுதாலும் கண்ணீர் இல்லை
.. ஊரேய்ப்போர் தன்னலத்துக்(கு) அழுதும் ஏய்ப்பார்!
பழுப்பதற்குள் பறித்துவிடப் பதைப்போர் உண்டு
.. பண்பாட்டில் மண்ணிடுவோர் பாரை ஆள்வார்!
 
இயற்கையிலே உள்ளஒவ்வொன்றும் தத்தம்
.. இயல்பினிலே பலவாறாய்ச் சார்ந்து வாழச்
செயற்பாட்டில் மனிதன் ஏன் சேர்ந்து வாழும்
.. சிந்தனைசெய் மனமிருந்தும் சிதைவே எங்கும்!
வயலுழுவோன் வாடுகின்றான் உழைத்துழைத்து
.. வயிற்றுக்குச் சோறிடுவோன் வாய்க்குத் தாகம்!
முயற்சியின்றி ஒருசிலரே முடிமன்னர்போல்
.. முன்னேற்றம் காண்பதுவா? சிந்திபோமா?

Tuesday, September 25, 2012

எண்பதாண்டு நிறைவு விழா

சென்னை பாரதி கலைக் கழகம் 23/9/12 அன்று நடத்திய கவிமாமணி பூவை அமுதன் அவர்களின் எண்பதாண்டு நிறைவு விழாவில் வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதைகள்:
 
1) வாசல் எழிலன் வழங்கிய பாராட்டுக் கவிதை
 
பொன்னைப் போலே ஒளிரும் உள்ளம்
.. புவியைப் போலே தாங்கும் எண்ணம்
மண்ணைப் போலே தாங்கும் நெஞ்சம்
.. மழையைப் போலே வழங்கும் நோக்கம்
விண்ணைப் போலே பரந்த கொள்கை
.. வித்தைப் போலே எழுந்திடும் ஆர்வம்
கொண்ட கவிஞர் பூவை அய்யா
.. கோலம் புகழ்ந்திட வாழ்த்துவோமே!
 
சாதனை பலவாய்ச் செய்வதற்கே
.. சங்கத் தமிழைப் பருகு கின்றார்
வேதனை போக்கும் விருப்பத் தாலே
.. வெல்லும் கவிதை அருந்து கின்றார்
தீதினை ஒழிக்க வேண்டு மென்றே
.. தேனாய் நூல்கள் ஆக்குகின்றார்
நாதனாம் பூவை அமுதனாரை
.. நாடே போற்றச் செய்வோம் நாமே!
 
இலக்கினைக் கொண்டே வாழுகின்ற
.. இளமை நெஞ்ச மாக்குவதற்கே
இலக்கிய நூல்கள் இயம்புகின்ற
.. இனிய நீதிக் கருத்தை எல்லாம்
கலக்கமே இல்லாக் கவிதை ஆக்கிக்
.. கனியாய் நமக்குத் தருவதாலே
இலக்கிய தூதர் இவர்தான் என்றே
.. எவரும் கூறி வாழ்த்த லாமே!
 
2) குமரிச் செழியன் வழங்கிய பாராட்டுக் கவிதை
 
இமயம் போலே எழுவதற்கே
.. இவரும் போற்றும் எழுச்சிக் கவிதை
சமயம் சாதி சாத்திரக் குப்பைச்
.. சடங்குகளெல்லாம் ஒழிவதற்கே
இமையாய்ப் போற்றும் கதைகள் நாளும்
.. இனிதாய் வாழ நாடகம் என்றே
அமுதன் அய்யா தருவதாலே
.. அன்னைத் தமிழாய் வாழ்த்து வோமே!
 
எழுத்தை மூச்சாய்க் கொண்டிருந்தே
.. என்றும் கருத்துரை செய்தே வாழும்
பழுத்த இலக்கிய வாதி நல்ல
.. பண்ணைப் போற்றும் பரிதியின் சோதி
செழித்தே என்றும் நிற்க போற்றும்
.. சிந்தை வளத்தைப் பெருக்க எங்கும்
வழியைக் காட்டக் அமுதன் அய்யா
.. வாழ்க இன்னும் எண்பதாண்டே!

Monday, September 24, 2012

செய்வாயா?

செய்வாயா?
 
ஆங்கிலேயர்க் கடிமையாக இருந்த நாளில்
.. ஆர்வமுடன் இளைஞரணி தலைவர் பின்னே
ஓங்கியபே ருணர்வோடு கிளர்ந்தெழுந்தார்
.. ஒன்றுபட்டு நாட்டுரிமைக்காக நின்றார்!
நீங்கியதே அடிமைவாழ்வே எனுங்கொண்டாட்டம்
.. நீடிக்கும் நிலையுளதா? ஏழைவாழ்வுக்(கு)
ஏங்குகிறார் கொள்ளையராய்ச் சொந்த நாட்டார்
.. ஏய்ப்பூழல் கொடுஞ்சுரண்டல் தொடர்கின்றாரே!
 
திரைப்படங்கள் மிகைப்படுத்தும் ஆட்டம் பாட்டம்
.. திசைமாற்றி வைக்க இங்கே ஒழுக்கம் ஓட்டம்
நரைமறைத்து நடிகனவன் இளையபெண்ணை
.. நளினமின்றித் தீண்டிவிளையாடக்கண்டு
முறைதவறி நடப்பதற்கு துறுதுறுக்கும்
.. மூளையில்லார் கூட்டத்தில் இளைஞர் முந்தி!
குறைகண்டால் சீற்றமுடன் களைவதற்குக்
.. கூரறிவின் செயல்திறனைக் காட்டுவாயா?
 
பெற்றவர்கள் கற்றவனாய்ப் பொலிவுண்டாக்கப்
.. பெரும்பாட்டின் அருமையினை அறிவா யாநீ?
மற்றவர்போல் நீயின்றி உன்னைச் சான்றாய்
.. மதித்துப்பின் தொடர்ந்திடவே பல்லாற்றானும்
பற்றுமொழி நாட்டின்முன்னேற்றம் என்றே
.. பணியாற்றும் அணியொன்றைக் காண்பாயா நீ?
முற்றுமிந்த நாடுனைப்போல் இளைஞர் தம்மை
.. முன்னிறுத்தி முன்னேற வழிகாண்பாயா?

Sunday, September 23, 2012

மறப்பார் யாரோ?

மறப்பார் யாரோ?
 
நாடுகாக்க வந்தவராய் வரலாற் றேட்டில்
.. நாம்காணும் தலைவர்தாம் உண்மைக் கொள்கைப்
பீடுடனே மக்களுக்குப் பணியை ஆற்றிப்
.. பெருமையடைந்தவராகச் சொல்லப் போமோ?
காடுமேடு வளைத்தவற்றைக் காத்துக் கொள்ள
.. கட்சிஒன்றை பற்றி நிற்கக் காண்கின்றோமே!
கூடிநிற்கும் தொண்டருக்குக் கையசைப்பே
.. குதூகலத்தைக் கொடுக்குமென்ப தவரின் கொள்கை!
 
சிந்திக்கும் பழக்கமின்றிச் சினமடக்கிச்
.. சீரழியும் பாட்டாளிக் கூட்டம் என்றும்
வந்தனை செய்தேவாடும் அவலம் தீர்க்க
.. வழிகாட்டி முன்நடந்து மாற்றம் கண்ட
அந்தவர லாறெல்லாம் காந்தி காலம்
.. அதன்பின்னெ வந்ததேசபச்சோந்திக் கோலம்
மந்தைகளாய் இருப்பவர்க்கு வந்து சேரும்
.. மரியாதை ஐந்தாண்டுக் கொருநாள் தானே!
 
எப்படியோ சிலநாள்கள் பசியைப் போக்கி
.. இருந்திடவும் வழிவாய்த்த தென்று தானே
தப்பேன்றோ சரியென்றோ வாக்கை விற்கும்
.. தராளம் வறியவரின் நெஞ்சில் ஊறும்
அப்படியே அவர்வாழ்க்கை இருந்தால் தானே
.. அடுத்தமுறை பதவித்தேர் ஏறிப்போவார்
இப்படியே எந்நாட்டில் குடிகள் ஆட்சி
.. இருக்கின்ற தெனும் வியப்பில் அதிர்ச்சி யுண்டோ?

Saturday, September 22, 2012

பிழையா, பேறா?

பிழையா, பேறா?
 
ஊர்வம்பை வளர்ப்பதற்கு விருப்பம் உள்ளே!
.. உத்தமராய் நடிப்பதற்கு வெளியே வேடம்!
சேரிடத்துக் கேற்றாற்போல் சிந்தை மாற்றிச்
.. சேறுகண்டு சாறு என்று சொல்வர் உண்டு!
யாரிடத்தும் யாசிக்கத் தன்மானத்தை
.. எப்போதும் தொலைத்திழிவில் மகிழ்வோர் கூடப்
பேரெடுத்தோர் வரிசையிலே நிற்கக் கண்டும்
.. பிழைசேர்த்த பெருமையினைப் பேறென்போமா?
 
வாய்ப்பந்தல் பொய்நிழலில் குளிர வைப்போர்
.. வாழிடமே பாழிடந்தான் எனத்தெரிந்தும்
தாய்போலப் பரிவுடையார் என்று பின்னே
.. தாளமிடும் கூட்டத்தைத் தன்னலத்தின்
பேய்ப்பிடித்தே ஆட்டுவதாய் எண்ணிக் கொண்டே
.. பேசாமல் குற்றத்தைப் பெருக்கலாமா?
காய்சினத்தீயது புரட்டர் தோலுரித்துக்
.. காட்டாமல் இருப்பதுவும் புரட்சி யாமோ?
 
புதுமைஎனப் போலிகளைப் புகழும் போக்கைப்
.. புறம்சொல்லிப் பிழைப்போர்மேல் இரக்க நோக்கை
துதிப்பதற்கு மட்டுமேகை தூக்கும் பேர்க்கும்
.. துளியளவும் உழைப்பின்நீர் சிந்தா தோர்க்கும்
மதிப்பளிப்போர் பெரியமனம் படைத்தோர் என்னும்
.. மாசுடையார் செல்லாத காசாய்ப் போகக்
கதிமாற்றும் விதியாக்கச் செய்கை விட்டுக்
.. காலத்தை வீணாக்கல் மடமை தானே?

Friday, September 21, 2012

நாம் செய்வோமா?

நாம் செய்வோமா?
 
சிறப்புற்றோர் சிந்தனையைச் செயல்படுத்தச்
.. சிலரேனும் வாய்ப்பந்தல் தவிர்த்துழைத்தால்
அறப்பணியாய் அறிவார்ந்த தொண்டாய் ஓங்கும்
.. அவர்வழியே சிலரேனும் உண்மையான
திறத்தோடும் மறத்தோடும் உணர்வினோடும்
.. திருப்பங்கள் காண்பதற்கு விருப்பம் கொள்வோம்
மறக்க முடியாதபடி மாந்தர் நேயம்
.. மலர்வதற்கு மனம் கொண்டு நாம்வாழ்வோமே!
 
புயல்வேகத்துடன் பெருமை பேசிக்கொண்டே
.. புறநானூற்றுக்காலம் புதுக்குவோமோ?
அயலவனை விஞ்சிய நம் அறிவைப் பற்றி
.. ஆர்ப்பரித்துப் பேசியிங்கே ஆனதென்ன?
செயல்மறந்து வாழ்த்திகொண்டிருக்கத்தானா
.. சிறந்தபணியாற்றியேநம் முன்னோர் சென்றார்?
வயல்கண்ட செழுமையெலாம் எங்கே காணோம்?
.. வளர்கின்ற வரலாற்றை வடிப்போமா நாம்?
 
பாரதிக்கு விழாவெடுத்துப் புகழைச் சேர்ப்போம்
.. பாரதியின் கவியை மனப்பாடம் செய்வோம்
பேருரத்துக் கூவியே நம் மூச்சே என்போம்
.. பெருமைகளை முத்தமிழில் மொய்க்கச் செய்வோம்
பாரதியின் சீர்திருத்தக் கொள்கை தம்மைப்
.. பயன்பாட்டு நடைமுறைக்குக் காட்டி வாழ்வோர்
ஊருக்குள் பெருகியுள்ளார் எனும்கணக்கின்
.. உண்மைநிலை உயர்ந்திடவே செய்வோமா நாம்?

Thursday, September 20, 2012

காலம் வருமா?

காலம் வருமா?
 
இயல்பாகப் பழுக்காத ஒன்றை நாமும்
.. இறுக்கியதை முன்னதாகப் பழுக்க வைக்கச்
செயற்கையிலே பலவந்தப் படுத்தும் போது
.. சேராது சத்தோடு சாறும் நன்றாய்!
சுயமாக அறிகின்ற சொந்த புத்தி
.. சொலக்கேட்டுத் தெரிந்தொள்வதற்கும் மேல்தான்!
முயலாமல் வெற்றிமுடி எட்டல் இல்லை!
.. முன்னேற்றம் இயல்பென்றால் மகிழ்ச்சி எல்லை!
 
முதிர்காலப் பக்குவத்தில் கதிர் அறுப்பார்
.. முற்றிவிட்டால் உதிர்ந்துவிடும் உழைப்பின் வெற்றி!
எதிர்நோக்கும் காலத்தில் தெளிவு தேவை
.. என்றாலும் புதிராகச் சரிவும் நேரும்!
நதிநீர்போல் திரும்பாமல் ஓடும் காலம்
.. நழுவவிட்டுத் திகைப்போரை நலிவில் ஆழ்த்தும்
விதிமுறைகள் மீறாமல் விரையும் காலம்
.. வீணாகப் போக்காத விவேகம் நன்று!
 
மனிதநிலை மாறவைக்கும் எண்ணம் யாவும்
.. மண்ணாகப் போகவேண்டும் இருக்கும் ஒன்றின்
புனிதத்தை இழிவாக்கும் புத்தி சக்தி
.. பொசுங்கியவை சாம்பலாகி மறைய வேண்டும்!
இனிப்பாகவே பேசி இழிவைச் சேர்ப்போர்
.. இல்லையென்னும் நிலை எல்லாத் துறையும் வேண்டும்!
தனியொருவன் தலைநிமிர்ந்து வாழும் தன்மை
.. தரத்தோடு நிலவவரும் காலம் என்றோ?

Wednesday, September 19, 2012

நடக்குமா?

நடக்குமா?
 
மண்வளரும் செடிகளிலே
மலர்ந்திருக்கும் பூக்களவை
மணம் வீச வண்டுகளால்
மகரந்தம் இனம் பெருக்கும்
கண் அவனுக்கென்பவளின்
கனிவு மனம் ஆசை யெனும்
கனலணைக்கும் குலம் பெருக்கும்
கலையெனவே இனித்திருக்கும்
 
பண்ணறிந்தா பறவையினம்
பலவிதமாய் இசை எழுப்பி
தன் துணையின் அன்புறவால்
பலநிறமாய் வளர்க்குமினம்?
எண்ண எண்ண விந்தைமிக
ஏராளமாய் உயிர்வகைகள்
பண்ணுகிற விழைவுகளின்
பொழிவுகளோ எழில்வையம்?
 
பிள்ளைபெற வில்லையென்று
பெண்டாட்டிதனை ஒதுக்கும்
பேதையர்தம் ஆண்மையுண்மை
மறைத்திடுதல் சாதனையோ?
உள்ளமதைக் கொள்ளையிடும்
உறவுகளின் உண்மைநிலை
உணர்வடங்கிப் போன்பின்னும்
ஒட்டிக் கொண்டே இருந்திடுமோ?
 
கள்ளமணக் கற்பனையால்
கவர்ச்சிதரும் காரணங்கள்
கட்டுகின்ற போலியர்க்கா
கருத்தழியும் காலம் வரும்
வெள்ளையுடை வெளிச்சமிடும்
வேடதாரி வஞ்சகரின்
விருப்பங்கள் பரப்பளவு
விரிவடைந்தா விடம் சொரியும்?
 
மதியிருந்தும் இழிசெயலை
மனமறிந்தே புரிந்திடுவோர்
மண்புமிகு தலைவரென
மதிப்பிடுவோர் மானிடரோ?
விதிப்பயனே எனப்பிறரின்
வேதனையை இழித்திடுவோர்
வீரநடை போட்ட்டிடவோ
விளக்குமிந்த நாட்டுவளம்?
 
சதியதனைச் சரியெனவே
சாதிப்போர் முகத்திரையைச்
சந்தியிலே கிழித்தெரியும்
சந்ததியர் தோன்றுவரோ?
கதியற்றுக் கிடப்போரைக்
காத்திடவே கருணையுள்ள
காவலர்கள் ஆவலுறும்
காலந்தான் வாய்த்திடுமோ?

Tuesday, September 18, 2012

ஒழிக்கப்பட வேண்டியது எது?

ஒழிக்கப்பட வேண்டியது எது?
 
விருத்தத்தில் புகழ்பெற்ற கம்பனுக்கு
.. விழாக்களை நாம் எடுக்கிறோம் கவியரங்கில்
வருத்தத்தை வளர்க்கின்ற நிலைதான் இன்று
.. வரப்பில்லா வயலாகப் புதுமை யென்று
புகுத்துவதாய் மரபுதனை மறுத்தும் மாய்த்தும்
.. புறபோக்குத்தனமாக உரையொடிப்பார்!
மிகுத்துவரும் மீறல்கள் மாற்றம் என்று
.. மேல்மட்டம் பறைகொட்டிச் செக்கிழுக்கும்!
 
அளவில்லா எண்ணங்கள் அகத்தே தோன்ற
.. அளவுக்கு மீறாத அமைப்பில் சொற்கள்
வளமாக வெளிப்பட்டால் வனப்பாய்ப் பூக்கும்
.. வண்ணத்தால் கவிதையென மதிப்பை ஏற்கும்!
களமெதுவாய் இருந்தாலும் கட்டுக்கோப்பில்
.. கறைதோன்றாக் காட்சியதே கலையாய் ஆகும்!
குளத்துக்கும் ஆற்றுக்கும் கரைகள் உண்டு
.. கூறுகவிக் கில்லையென்றால் கறையாகாதோ?
 
இப்படித்தான் கவியிருக்க வேண்டும் என்றார்
.. எப்படியும் இருந்திடலாம் என்பார் இன்று!
எப்படியோ இருக்கட்டும் எடுத்துச் சொல்லும்
.. இயல்பினிலே ஒலி ஒழுங்கும் ஒழிதல் நன்றா?
தப்பிதமாய்க் கவித்துவத்தில் தலையைக் கண்டால்
.. தமிழ்ச்சொற்கள் பிறமொழிக்குள் தவிக்கும் கோரம்!
ஒப்புகின்ற பொருள்விளங்கச் செய்யும் பாங்கில்
.. ஒத்துழையாமை இயக்கம் தலைஏன் காட்டும்?
 
தனக்காக வாகவிதை எழுதுகின்றான்?
.. தள்ளுபடியாகும் சொல் தமிழா பாட்டில்?
மனம்போன செயலுக்கு மதியெதற்கு?
.. மரபென்றால் தொன்றுதொட்டுத் தொடரும் நல்ல
சுனைநீராய்த் தூய்மையுடன் சுவைக்கக் கண்டும்
.. துப்பிடுமாறுள்ளதையா ஒப்ப வேண்டும்?
தினமாற்றும் வினைவிளைவில் புதுமையோடு
.. திகழ்கின்ற பொதுமரபைப் போற்றுவோமே!

Monday, September 17, 2012

ஒரு தாயின் வாழ்த்து

ஒரு தாயின் வாழ்த்து
 
அழுதுகொண்டே பிறந்தாய் பெற்றோர் நெஞ்சில்
.. அமுதமழைப் பொழிந்தெம்மைச் சிரிக்க வைத்தாய்!
உழுதவரின் வயல்பசுமை உறுதல் கண்டே
.. உவப்புறுமந் நிலையிலவர் உள்ளம் பொங்க
பொழுதெல்லாம் மணக்கின்ற பூவாய் வந்தாய்!
.. பூமிபெற்ற பொன்பொருள் எல்லாமுங் கூட
குழந்தையுனக் கீடாகக் கூறப் போமா?
.. குலக்கொடிநீ முழுநிலவுக் கொடி தந்தாயோ?
 
தவழ்ந்தெழுந்து தடுமாறித் தத்தித் தத்தித்
.. தாய்மடியில் விழுந்து அவளின் தாடை தட்ட
புவனமிதையே பெற்ற பூரிப்புற்றேன்
.. பூங்கையின் விரல்விரித்துப் பொத்து வாய்வாய்
கவனமுடன் கேட்பதுபோல் கண்கள் பூத்துக்
.. காதுமடல் விரித்தென்றன் கொஞ்சல் கேட்பாய்
அவனியிலே நான் தாயாய் உயர்வை யுற்றேன்
.. அருங்குழவி மழலைத்தேன் அமுதைப் பெற்றேன்!
 
தாய்மண்ணின் தனிப்பெருமை யாவும் காக்கும்
.. தகுதிகளில் தக்கபடிப் பயிற்சி ஏற்கும்
வாய்ப்புனக்குத் தருகின்ற சூழல் இங்கே
.. வளர்ந்திருக்க வேண்டுமதை நல்லோர் செய்வார்
போயெங்கும் பொருள்தேடி அலையாமல் நீ
.. பொன்னாடாய் உள்நாட்டை முன்னேற்றத்தான்
நோய்நொடிகள் அண்டாமல் காப்பேன் உன்றன்
.. நுண்ணறிவால் வழிகாட்டியாக வாழ்க!
 
விண்ணுலவும் கதிர்நிலவு காற்று மேகம்
.. விளைவிக்கும் செடிகொடிகள் மரங்கள் குன்றம்
மண்ணகத்தை வளமாக்கும் ஏரி ஆறு
.. மண்டியுள செழிப்பெல்லாம் பொதுமை யாகும்
கண்டிப்பாய் வருங்காலம் பிறந்தோர் யாரும்
.. கடுமுழைப்பின் பலன்கண்டு வாழ்வர் என்னும்
உண்மைநிலை யுருவாகக் குழந்தை நீயும்
.. உத்தமனாய்ப் பிறர்க்குதவ உயர்ந்தே வாழ்க!

Sunday, September 16, 2012

எனக்கொரு காதலி

எனக்கொரு காதலி
 
எனக்கொரு காதலி இருக்கின்றாள்! - அவள்
என்மனம் அவளென உரைக்கின்றாள்!
உன்னை நடத்திட நான் என்பாள்! - என்றன்
உண்மை நிழல் அவள்தான் என்பாள்!
 
களித்திடும் செயல்முறைக் கூட்டுகிறாள் - இருட்
கவலையில் ஓளியினைக் காட்டுகிறாள்!
புளிப்பையும் இனிப்பையும் பகுக்கின்றாள்! - மனம்
புண்கொளா வழிகளை வகுக்கின்றாள்!
- எனக்கொரு காதலி இருக்கின்றாள்!
 
நெஞ்சில் நினைவு தூய்மையுற - செயல்
நிகழ்வினால் பிறரும் நேயமுற
அஞ்சிடும் வினைவெகு சேய்மைசெல - நா
அசைத்திட ஒலிதரும் வாய்மை பல
- எனக்கொரு காதலி இருக்கின்றாள்!
 
அவள்பெயர் நீங்களும் அறிந்ததுவே - என்
அகவொளி அவளால் பிறந்ததுவே!
எவர்க்கும் அவள்துணை சிறந்ததுவே - உயிர்
எனக்கவள் அவள் பெயர்தான் அறிவே!
- எனக்கொரு காதலி இருக்கின்றாள்!
 
அறிவெனும் காதலி என்வழியை - நலம்
ஆக்கிட அண்டிடேன் ஒரு பிழையை
செறிவெனும் நிறைவினில் நடைமுறையே - பிறர்
சிறப்பெனச் செப்பிடப் பகழ் வரவே!
- எனக்கொரு காதலி இருக்கின்றாள்!

Thursday, September 6, 2012

ஏனடி ஏன்?

ஏனடி ஏன்?
 
மெழுகே அழியவோ நீ பிறந்தாய்? - அன்பே
அற்றவர் யாருக்கோ மனம் திறந்தாய்
விதியே அழகென ஏற்றிருந்தாய்? - நேரம்
வேடமாய் மாறுமே ஏன் மறந்தாய்?
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?
 
நெருப்பை உறவாடிக் கொண்டிருந்தாய் - உன்னை
நெருங்கிட ஆவியை நீ துறந்தாய்
விருப்பம் ஒளிவிட நீ உயர்ந்தாய் - அந்த
வேதனை கரைத்திட நீ சிறந்தாய்
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?
 
முற்றுமாய் உயிர்த்திரி ஒளிர்ந்திடவே - உன்னை
முற்றுகை யிட்டிட நீ பறந்தாய்
சத்தியம் அவனுக்காய்க் காத்திருந்தாய் - இந்தச்
சரித்திரம் வளரவோ நீ கரைந்தாய்!
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?

Wednesday, September 5, 2012

நெகிழ்வு

நெகிழ்வு
 
எல்லாமும் எதனாலே நடக்கின்றதோ - மனம்
ஏனென்று புரியாமல் துடிக்கின்றதோ?
மதிவிதிக்கின்றதோ?
எது சிதைக்கின்றதோ? - இங்கே
வேடமிட்டே எல்லாமும் நடிக்கின்றதோ?
- எல்லாமும் எதனாலே நடக்கின்றதோ?
 
மலை கொண்ட கல்லெல்லாம்
சிலை செய்யவோ? - உன்றன்
மனம் எண்ணும் எல்லாமும் முடிகின்றதோ?
இலைகூட பூஜைக்கு ஏற்கின்றதே - பூத்து
இருந்தாலும் சில வீணாய் மடிகின்றதே!
 
மரம் விட்ட காயெல்லாம் கனியாகுமோ? - அவை
மண்ணுக்குள் விதையாகிச் செடியாகுமோ?
விரல் ஐந்தும் ஒருகையில் பல தோற்றமே - அந்த
வேஏறுமை பொருள்பற்றும் பிடிமாற்றுமா?
 
மதி விதிக்கின்றதொ?
எது சிதைக்கின்றதோ? - இங்கே
வேடமிட்டே எல்லாமும் நடக்கின்றதோ?
- எல்லாமும் எதனாலே நடக்கின்றதோ?

Tuesday, September 4, 2012

நஞ்சும் எனக்கமுதம்!


நஞ்சும் எனக்கமுதம்!
 
தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?
தீயில் என்னை வாட்டிடவோ என்னைத் தொட்டாய்?
நெஞ்சத்தில் நீயிட்ட நஞ்சும் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ நிற்பதை ஏன் மறந்துவிட்டாய்?
- தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?
 
என்னை இருள் சூழ்ந்திடவோ
.. எங்கோ சென்றாய்? - நீ
இருட்டினிலே குருடனைத்தான்
.. ஏங்க விட்டாய்
என் மனத்தில் வாழ்ந்திடவோ
.. உறவைக் கொண்டாய்? - அடி
இறந்தவன் மேல் இடி போட்டு
.. நீதான் கெட்டாய்
- தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?
 
நீயும் நானும் சேர்ந்திருந்த
.. நேரம் கொஞ்சம் - உன்னைத்
தேன் நிலவென்றேன் - நீயோ
.. பாழிருளில் தள்ளிவிட்டாய்!
 
பாயுமின்பப் பௌர்ணமிக் கேன்
.. என்மேல் வஞ்சம்? - அடி
பகலினிலும் கனவுலகில் தவிக்க விட்டாய்
.. நெஞ்சத்தில் நீயிட்ட நஞ்சும் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ நிற்பதை ஏன் மறந்து விட்டாய்?
- தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?

Monday, September 3, 2012

ஒற்றைக் குயிலே...

ஒற்றைக் குயிலே...
 
ஒற்றைக் குயிலே பாடாயோ? - உன்றன்
உயிர்த்துணை எங்கே தேடாயோ?
 
உள்ளம் கவரும் உன் பாடல் எல்லாம் ஒழிந்ததோ?
இன்பம் நாடாயோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?
 
தென்றலே மென்மையை ஏன் பகைத்தாய்? - வண்ணத்
தேன்மலர் நீயுமே கூடாயோ?
தீயுடன் பஞ்சுக்கு ஏன் உறவு? - உன்
துயருக்கு விடிவெது தேடாயோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?
 
வெண்ணிலா விஷத்தைச் சிந்துவதேன்? - என்றன்
வேதனை கூறிட ஓடாயோ?
கண்ணிலார் வண்ணங்கள் அறியாரே - நெஞ்சு
கனவிலும் அமைதியைக் கூடாதோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?

Sunday, September 2, 2012

எங்கும்... எப்போதும்...

எங்கும்... எப்போதும்...
 
கண்கள் விழித்திருந்தேன் - புவி
காட்சி மறந்திருந்தேன்
எங்கும் தனித்திருந்தேன் - உன்னை
எண்ணி இனித்திருந்தேன்
 
உண்ண வெறுத்திருந்தேன் - வேறு
உடையும் மறுத்திருந்தேன்
உன்னை மதித்திருந்தேன் - கொடிய
உறுத்தலிலும் துதித்திருந்தேன்
- கண்கள் விழித்திருந்தேன்...
 
சுமைகள் மறந்திருந்தேன் - எந்தச்
சுவையும் துறந்திருந்தேன்
இமைகள் துறந்திருந்தேன்
இமைகள் திறந்திருந்தேன் - வானில்
இணைந்தே பறந்திருந்தேன்!
- கண்கள் விழித்திருந்தேன்...