Tuesday, September 25, 2012

எண்பதாண்டு நிறைவு விழா

சென்னை பாரதி கலைக் கழகம் 23/9/12 அன்று நடத்திய கவிமாமணி பூவை அமுதன் அவர்களின் எண்பதாண்டு நிறைவு விழாவில் வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதைகள்:
 
1) வாசல் எழிலன் வழங்கிய பாராட்டுக் கவிதை
 
பொன்னைப் போலே ஒளிரும் உள்ளம்
.. புவியைப் போலே தாங்கும் எண்ணம்
மண்ணைப் போலே தாங்கும் நெஞ்சம்
.. மழையைப் போலே வழங்கும் நோக்கம்
விண்ணைப் போலே பரந்த கொள்கை
.. வித்தைப் போலே எழுந்திடும் ஆர்வம்
கொண்ட கவிஞர் பூவை அய்யா
.. கோலம் புகழ்ந்திட வாழ்த்துவோமே!
 
சாதனை பலவாய்ச் செய்வதற்கே
.. சங்கத் தமிழைப் பருகு கின்றார்
வேதனை போக்கும் விருப்பத் தாலே
.. வெல்லும் கவிதை அருந்து கின்றார்
தீதினை ஒழிக்க வேண்டு மென்றே
.. தேனாய் நூல்கள் ஆக்குகின்றார்
நாதனாம் பூவை அமுதனாரை
.. நாடே போற்றச் செய்வோம் நாமே!
 
இலக்கினைக் கொண்டே வாழுகின்ற
.. இளமை நெஞ்ச மாக்குவதற்கே
இலக்கிய நூல்கள் இயம்புகின்ற
.. இனிய நீதிக் கருத்தை எல்லாம்
கலக்கமே இல்லாக் கவிதை ஆக்கிக்
.. கனியாய் நமக்குத் தருவதாலே
இலக்கிய தூதர் இவர்தான் என்றே
.. எவரும் கூறி வாழ்த்த லாமே!
 
2) குமரிச் செழியன் வழங்கிய பாராட்டுக் கவிதை
 
இமயம் போலே எழுவதற்கே
.. இவரும் போற்றும் எழுச்சிக் கவிதை
சமயம் சாதி சாத்திரக் குப்பைச்
.. சடங்குகளெல்லாம் ஒழிவதற்கே
இமையாய்ப் போற்றும் கதைகள் நாளும்
.. இனிதாய் வாழ நாடகம் என்றே
அமுதன் அய்யா தருவதாலே
.. அன்னைத் தமிழாய் வாழ்த்து வோமே!
 
எழுத்தை மூச்சாய்க் கொண்டிருந்தே
.. என்றும் கருத்துரை செய்தே வாழும்
பழுத்த இலக்கிய வாதி நல்ல
.. பண்ணைப் போற்றும் பரிதியின் சோதி
செழித்தே என்றும் நிற்க போற்றும்
.. சிந்தை வளத்தைப் பெருக்க எங்கும்
வழியைக் காட்டக் அமுதன் அய்யா
.. வாழ்க இன்னும் எண்பதாண்டே!

No comments:

Post a Comment