Wednesday, September 19, 2012

நடக்குமா?

நடக்குமா?
 
மண்வளரும் செடிகளிலே
மலர்ந்திருக்கும் பூக்களவை
மணம் வீச வண்டுகளால்
மகரந்தம் இனம் பெருக்கும்
கண் அவனுக்கென்பவளின்
கனிவு மனம் ஆசை யெனும்
கனலணைக்கும் குலம் பெருக்கும்
கலையெனவே இனித்திருக்கும்
 
பண்ணறிந்தா பறவையினம்
பலவிதமாய் இசை எழுப்பி
தன் துணையின் அன்புறவால்
பலநிறமாய் வளர்க்குமினம்?
எண்ண எண்ண விந்தைமிக
ஏராளமாய் உயிர்வகைகள்
பண்ணுகிற விழைவுகளின்
பொழிவுகளோ எழில்வையம்?
 
பிள்ளைபெற வில்லையென்று
பெண்டாட்டிதனை ஒதுக்கும்
பேதையர்தம் ஆண்மையுண்மை
மறைத்திடுதல் சாதனையோ?
உள்ளமதைக் கொள்ளையிடும்
உறவுகளின் உண்மைநிலை
உணர்வடங்கிப் போன்பின்னும்
ஒட்டிக் கொண்டே இருந்திடுமோ?
 
கள்ளமணக் கற்பனையால்
கவர்ச்சிதரும் காரணங்கள்
கட்டுகின்ற போலியர்க்கா
கருத்தழியும் காலம் வரும்
வெள்ளையுடை வெளிச்சமிடும்
வேடதாரி வஞ்சகரின்
விருப்பங்கள் பரப்பளவு
விரிவடைந்தா விடம் சொரியும்?
 
மதியிருந்தும் இழிசெயலை
மனமறிந்தே புரிந்திடுவோர்
மண்புமிகு தலைவரென
மதிப்பிடுவோர் மானிடரோ?
விதிப்பயனே எனப்பிறரின்
வேதனையை இழித்திடுவோர்
வீரநடை போட்ட்டிடவோ
விளக்குமிந்த நாட்டுவளம்?
 
சதியதனைச் சரியெனவே
சாதிப்போர் முகத்திரையைச்
சந்தியிலே கிழித்தெரியும்
சந்ததியர் தோன்றுவரோ?
கதியற்றுக் கிடப்போரைக்
காத்திடவே கருணையுள்ள
காவலர்கள் ஆவலுறும்
காலந்தான் வாய்த்திடுமோ?

No comments:

Post a Comment