Friday, September 28, 2012

யாரை? எங்கே?

யாரை? எங்கே?
 
தூக்கிவிடக் காசள்ளிக் கொடுத்தால் தங்கள்
.. தோள்களிலே சுமந்துயர வைக்கும் மக்கள்
வாக்கருமை நன்குணர்ந்தாலன்றிப் பொல்லா
.. வஞ்சகர்கள் பதவித்தேர் ஏற அஞ்சார்!
போக்கற்றோர் தவறுகளைப் புரிந்தே செய்யும்
.. புன்மைநிலை அறிவாற்றல் அழிக்க வானால்
ஆக்குதற்காம் அறிவாற்றல் அழிக்க வானால்
.. அவலங்கள் பெருக்கத்திற் களவும் உண்டோ?
 
உண்பதற்கும் உடுப்பதற்கும் உறைவதற்கும்
.. ஓயாமல் உழைப்போன் இல்லத்தில் கண்ணீர்!
கண்மூடித் தூங்கி விடாக் கவலை வாட்ட
.. காட்டுகிற பணம் ஆசைத் தீயை மூட்டும்
எண்ணத்தில் அன்றையநாள் தேவை நிற்கும்
.. ஏமாற்றப் பின்விளைவின் திரையாய் வஞ்சம்!
மண்செழிக்கப் பாட்டாளி உழைப்புத் தேவை
.. மாண்புகளின் தேரிழுத்தல் பின்நாள் சேவை!
 
ஏற்றிவிட்டோர் தலைகுனித்து நிற்கும் நேரம்
.. இருமாந்து விம்மிஎழும் நெஞ்சில் போதை
காற்றிலேறிக் கலசத்தில் தங்கும் கந்தல்
.. கட்டிவைத்த கொடிபோல அசைந்து காட்டிப்
போற்றுதலை எதிர்பார்த்தல் அகந்தை தானே?
.. பூசைப்பூ வாடியபின் போவதெங்கே?
நேற்றின்று நாளைவாக்குறுதி எல்லாம்
.. நினைவிருந்தும் கேட்பதெனில் யாரை, எங்கே?

No comments:

Post a Comment