Wednesday, October 31, 2012

காலத் தேர்

காலத் தேர்
 
ஓராண்டு வாழ்ந்திடவே மலர்கின்ற காலப்பூ
.. உலகெங்கும் போற்றிடவே உதிக்கின்ற ஞாலப்பூ!
போராட்ட வாழ்வினர்க்கோ புதுவிடியல் எதிர்பார்ப்பு!
.. பொதுவாக எல்லோர்க்கும் ஒருவயதே அதிகரிப்பு!
தேரோட்டும் பதவியினைத் தேய்க்கின்ற வருடப்பூ!
.. தீயவர்கள் வெறியாட்டத் திளைப்புக்குத் தேடும்பூ!
ஏராளம் சேமித்தும் ஏய்த்திருப்போர்க் காசைப்பூ!
.. எப்போது பணிகிட்டும் என்றலைவோர்க்கோ வெறுப்பு!
 
காலத்தேர் ஓட்டத்தின் கணக்காகும் புத்தாண்டே!
கடனாற்ற நீயாரின் கட்டளைக்குக் காத்திருப்பாய்?
மடமையினால் உனைமாய்த்து விதிஎன்பார் மதிஎன்னே!
 
காலம்கண் பொன்னென்றே கழறிடுவார் என்றாலும்
.. களிப்புக்கே நேரத்தை வீணாக்கிக் கழிக்கின்றார்!
வேலையில்லை வறுமையெனும் வேதனையில் பலரிருக்க
.. வெறும்பேச்சே கலையாக வளர்ப்பவர்தான் சிறக்கின்றார்!
மேலைநாட்டு மேன்மைகளை மேல்மூச்சு வாங்கிடவே
.. மேடையிலே முழங்கிடுவார் மேனிக்குப் பொன்னாடை!
மாலையிருள் கவிந்தபின்பும் மண்வேலை செய்வோர்க்கு
.. மலராது மனமகிழ்ச்சி புலராது புதுவிடியல்!
 
காலத்தேர் ஓட்டத்தின் கணக்காகும் புத்தாண்டே!
கடனாற்ற உனக்குலகில் கட்டளையை யிடுவார்யார்?
உடனிருந்தே உனைஏவும் வினைசெய்ய நினைப்பவர்யார்?
 
இடுக்கண்கள் வெல்வதற்கு வேண்டுமென்றார் இதழ்ச்சிரிப்பு
.. இன்மையினால் காலூன்றி எழவேண்டும் பேருழைப்பு
கொடுப்பதற்குக் குணம்கொள்ள மனம்தூண்டும் பெரும்பிடிப்பு
.. குறைகளையே எப்போது கூறுவார்க்குள் கடும்வெறுப்பு
படுத்துறங்கப் பஞ்சணைகள் பலதேடும் பணக்கொழுப்பு
.. பசித்திருப்போர் கண்ணயரப் போதுமோலைப் பாய்விரிப்பு
மிடுக்குநடை யிலாதவனை வீரரெனல் அவமதிப்பு
.. மேன்மைஎங்கும் நிலவுமெனில் மேவிடுமே குதூகலிப்பு!
 
புத்தாண்டே நீநடந்து புதுமைகளை வளர்க்கின்றாய்!
புழுவுந்தன் வாழ்க்கைக்குப் புழுங்காமல் நகர்கிறதே!
பிழையின்றி உனக்கிணங்கி ஒழுகவரும் செழுமைகள்!

Tuesday, October 30, 2012

இயற்கை அன்னை


இயற்கை அன்னை
 
மண்வளத்தின் மாண்புகளை அறிந்து கொள்ள
.. மரம்செடிகள் கொடிவகையாய் இயற்கை அன்னை
எண்ணிறந்த வகைகளிலே எங்கும் காண
.. எழில்பொங்கக் குலுங்குகிறாள்! மாந்தர் தங்கள்
கண்களுக்கு விருந்தாகப் பசுமைக் கோலம்
.. காட்டுகிறாள் காய்கனிகள் தழைகிழங்கு
வண்ணத்தில் பலவகையாய் மலர்கள் என்று
.. வாழ்வோர்க்கு வழங்குகிறாள் வஞ்சமின்றி!
 
உண்பதற்கும் உணவாகி உற்ற நோய்க்கும்
.. உரிய அருமருந்தாகி உயிர்வளர்க்கும்
அன்னையவள் இன்னருளை ஏற்றுக்கொண்டே
.. அவள்படைப்பை அழித்திடவும் முனையும் மாந்தர்
கண்ணிருந்தும் தானிருட்டில் குருடராகக்
.. கயமையிலே பழுத்தவராய் அலைகின்றாரே!
பண்பாட்டில் தேர்ந்தபழம் தமிழர் என்போம்
.. பாதகராய் இயற்கைஎழில் சிதைக்கின்றோமே!
 
'தா, வரத்தை!' எனநோற்றுப் பக்தர் கேட்டால்
.. தயங்காமல் தந்திடுமா தெய்வம் ஐயம்!
தாவரமோ தம்மியல்பாய் வானினின்று
.. தரும்மழையைத் தயங்காது வேண்டும் முன்பே!
நாவினிக்கச் சுவையளிக்கும் விளைபொருள்கள்
.. நம்மியற்கைத் தாயளிக்கும் நல்வரங்கள்!
காவிலுள்ள மூலிகைகள் நோயைத் தீர்க்கும்
.. கண்டறிந்து கொண்டவர்க்கே மண்டும் இன்பம்!

Monday, October 29, 2012

அன்புப் பாலம்

அன்புப் பாலம்
 
அன்பெனும்சொல் நிலைக்கேற்ப அர்த்தம் கொள்ளும்
.. அது இரக்கம் நட்புபாசம் காதல் பக்தி
என்றுபல பேர்கொள்ளும் இடத்துக் கேற்ப
.. யாவுக்கும் அடிப்படையாய் அமையும் நெஞ்சம்
தன்கீழே பணிபுரிவோர் தவிப்பைக் கண்டு
.. தன்னருளால் சுரப்பதனை இரக்கம் என்பார்
என்மனைவி என்மக்கள் என்னும் பாசம்
.. என்மொழியே சிறந்ததென என்னும் பற்று!
 
ஒன்றுபடும் இருவுள்ளத் துணர்வே காதல்
.. உயர்ந்தவரை வணங்கும்பேரன்பே பக்தி
என்றுபல வாறாக அன்பில் பாய்ச்சல்
.. இணைக்கின்ற உறவுக்குப் பாலம் ஆகும்
நன்றுசெய்வோர் தமைச்சுற்றி ஓங்கும் நட்பு
.. நயமதுவும் அன்பினது விரிவே என்போம்
வென்றுவிடும் பகையினையும் அன்பின் ஆற்றல்
.. விரிவாக்கும் நேயத்தைத் தூய்மை யாக்கும்!
 
ஒற்றுமையை உண்டாக்கும் அன்பு நன்று
.. ஓரிழிவோ ஓரழிவோ அன்பில் இல்லை
பெற்றுக்கொள்வதில்காட்டும் அன்பு போலி
.. பேசாமல் வளர்கின்ற அன்புக்காழம்!
கற்றகல்வி என்றென்றும் மறவாமைபோல்
.. கருத்தொன்றும் அன்பு காலம் கடந்துவாழும்!
வெற்றுரையில் வெளிப்படுத்தும் அன்பு வேடம்!
.. விருந்துவைத்து விளம்பரிக்கும் அன்போ ஓடும்!
 
அன்பொன்றே பொதுமைநிலை அணைத்தி ணைக்கும்
.. அவதிதரும் அகப்பணிக்கு நன்மருந்து
அன்புள்ளோர் வறுமையிலும் பண்பில் செல்வர்
.. அடக்கமுடன் ஈந்துமகிழ்வின்பம் உச்சம்!
பன்னலமும் வாய்த்திருந்தும் அன்பில்லாரைப்
.. பகைமைத்தீ சுட்டெரிக்கும்; அன்பு வெள்ளம்
தன்னகத்தே தேக்கியுள்ளோர் அழிவில் சிக்கார்
.. தழைக்கட்டும் அன்பெங்கும் செழிக்கும் வையம்!
 
அன்புசெய்யப் பணமேதும் தேவையில்லை
.. அளவின்றி அகம்சுரக்கும் கொடுத்துவப்போம்
பண்பாக நாம்பழகிக் கொள்வோம் நாளும்
.. பகைபொறாமை வெறுப்பெரிச்சல் யாவும் மாளும்!
ஒன்றுபட மொழிநாடு தடையே இல்லை
.. உயர்வுதாழ்வோடினம் பதவி யாவும் தாண்டி
வென்றுநிற்க அன்புக்கு வீரம் உண்டு
.. விதிசதியை மதிவெல்லத் தூண்டும் அன்பே!

Sunday, October 28, 2012

குருவும் சீடரும்

குருவும் சீடரும்
 
சிந்தனையாளர் தம்முள் மூத்தாராகச்
.. செப்புகின்றோம் கிரேக்க ஞானி சாக்ரடீசை
எந்தஒன்றும் ஏனென்று வினா எழுப்பி
.. ஏற்றவிடை காணவேண்டும் என்று சொன்னார்!
சொந்தமதியால் ஆய்ந்து முடிவு கண்டால்
.. சூழ்ச்சிவலை பின்னிடுவோர் மின்னுவாரா?
அந்தவழி தொடர்ந்தவர்கள் அறிஞர் பல்லோர்
.. அகிலம்போற்றும் பிளேட்டோ அவரின் சீடர்!
 
குருவினது கொள்கைவழி குறிக்கோளோடு
.. கோணாது சீர்த்திருத்தப் பணியை ஏற்று
பெருந்தொண்டை ஆற்றிய சிந்தனையாளர்கள்
.. பிறந்ததந்த நாட்டுமக்கள் பேறேயாகும்!
வரும்போகும் செல்வத்தில் மூழ்கிப் போவோர்
.. வரலாற்றில் புகழுச்சி ஏறி நில்லார்
தெருவோரம் வதிகின்ற ஏதிலாரின்
.. திறமுணர்ந்து வழிகாட்டிச் சிறந்தோர் சான்றோர்!
 
ஆசிரியராய்ச் சிறந்தோர் திறமை போற்றி
.. ஆர்வமுடன் ஆற்றல்கள் வளர்த்துக் கொள்ளும்
மாசில்லா மாணாக்கர் சான்றாய் நிற்பர்
.. மதிஒளியில் நிதிஒலியின் மகிமை மங்கும்
வீசுகின்ற தென்றலிலே புகழை ஏற்றி
.. விடுவதற்குக் குருமாரே உருவானார்கள்
பேசுதலைக் குறைத்திங்கே கடமை பேணும்
.. பெருங்குணத்தைப் பெறக்குருவின் துணை கொள்வோமே!

Saturday, October 27, 2012

மான மனம்

மான மனம்
 
முக அழகைப் பார்த்ததுமே விழிகள் தாழ்ந்து
மூடியுள்ள மேடுபள்ளம் பாய்ந்து மொய்க்கும்
அகத்தினிலே கிளுகிளுப்போ கிளர்ச்சி தானோ
அதிகரிக்கும் இதில்வயது பேதம் இல்லை!
அகவைமுதிர்ந்தோர் நினைவில் பழங்கதைகள்
ஆசையிலாழ் நெஞ்சுக்குப் பலவீனந்தான்!
தகவுடையார் தனியாளாய்ச் சென்ற போதும்
தாங்கியுள்ள மான மனம் தவறா செய்யும்?
 
பேதையரைப் பிடித்துவிட்டால் மேதை என்பார்
பெரும்பான்மை ஆசைமனம் பேதலிக்கும்
தீதையெலாம் நலமென்று திரித்துரைப்போர்
திறமையினைச் சூதெனலே நீதி நேர்மை
போதைவர கிடைப்பதனைக் குடித்து வைப்போர்
போய்ச்சேரும் தூரம் காத தூரம் இல்லை
பாதையிலே அதிவேகம் உபாதை சேர்க்கும்
பண்புடைமை எனில் பகையும் போற்ற வேண்டும்!
 
அடக்கமென்றால் சொரணையற்றுக் கிடப்பதன்று
ஆர்வமொன்றால் அடைவதிலே வேகம் தானா?
நடத்தையில்காண் சுறுசுறுப்பா நன்னடத்தை?
நாகரிகம் பாசங்கின் பற்றுக்கோடா?
திடநெஞ்சு தடந்தோளின் வலிமை ஏற்றும்!
திசை அறியான் காற்றுக்குப் பேர் வைப்பானா?
மடம் உடலின் வனப்பாகும்; நெஞ்சில் கேடே!
மானம்கால் கொள்ளாத மனமே பாழாம்!

Friday, October 26, 2012

உன்னால் முடியும்!

உன்னால் முடியும்!
 
உன்னால் முடியும் உறுதி இது - எந்த
.. உழைப்பு மில்லாமல் வருவதெது?
தன்மனை மக்கள் தாய்தந்தை - அவர்
.. தகுநலம் காத்திடக்கொள் சிந்தை!
 
உழைப்பை ஏற்பவன் உயர்ந்தவனே! - ஊரை
.. உறிஞ்சிக் கொழுப்பவன் தாழ்ந்தவனே
பிழைக்கும் நாயும்தெரு பொறுக்கி - உழைத்து
.. பிறரையும் பேணுதல் உயர்விருப்பு!
 
கைகளே இல்லாதவர் கூட - நம்பிக்
.. கைகளால் உயர்ந்தே இருக்கின்றார்
பொய்களால் கொழுப்பதா? அது வீக்கம் - எந்தப்
.. பொறுமலும் வேண்டாம் அது ஏக்கம்!
 
இலவசத் துக்காய்ப் பறக்காதே - எந்த
.. இழிவிலும் துணிவினைத் துறக்காதே
பலப்பல வழியுண்டு மறக்காதே - எதற்கும்
.. பயந்திடும் வாழ்க்கையே சிறக்கதே!
 
உழைப்பின் பலனே தரும் பெருமை - இரவில்
.. உறக்கமும் நிம்மதியாய் வருமே!
தழைத்திடும் வெட்டிய மரக்கிளையும் - கிளைகளை
.. தாங்கியே வளர்ந்து தரும் விளைவும்!

Thursday, October 25, 2012

தன்னிரக்கம்

தன்னிரக்கம்
 
பார்வையா ளனாயமர்ந்து படிக்கட்டாகும்
.. பழக்கத்தால் பாழாகிப் போனேனாநான்?
ஆர்வத்தொடெனக்கேநான் விளம்பரத்தை
.. ஆக்கிக்கொள்ளாமையும் என் அறியாமையோ?
சோர்வின்றி எழுதுவது பதிப்போர் சொத்தாய்ச்
.. சுகம்பெருக்கும் வித்தாகக் கொள்ளத் தானா?
யார்வந்தென் இயல்புதனை மாற்றல் ஒல்லும்?
.. இப்படியா எழுபத்தெட் டாண்டை யுற்றேன்?
 
உள்ளத்தில் ஊறுகின்ற உணர்வைப் பேச்சில்
.. உரைப்பதிலே மழுப்புதலை என்று கற்றுக்
கொள்ளத்தான் போகின்றேன்? எனக்கிருக்கும்
.. கொள்கைகண்டு பிறர்முகங்கள் சுருங்கும் போது
வெள்ளைமனம் விரும்புதல்யார் நல்லதென்பார்?
.. வெளுத்தமுடித் தலைவழுக்கை யின்மை சொத்தா?
குள்ளனுக்கும் பெருமையுண்டு நெட்டையர்கள்
.. குனிந்தன்றோ அவனிடத்தில் பேசுகின்றார்?

Wednesday, October 24, 2012

கொடுப்பதும் கொள்வதும்

கொடுப்பதும் கொள்வதும்
 
சிலர்வாழ்க்கை பலருக்குச் சான்றாய் ஓங்கும்
.. சிறப்பான தொண்டுகளால் புகழைத் தாங்கும்
மலர்மணத்தால் மணம் மகிழும் மூக்கின் தொண்டால்!
.. மதிநலத்தால் உளம்குளிரும் உறவாம் நட்பால்
நலம்புரிதல் என்பதொன்றே நாட்டமானால்
.. நாள்களெலாம் பயனுள்ள வகையே செல்லும்
குலம்சாதி மதம்பேதம் கொள்ளா நெஞ்சால்
.. குற்றத்தைக் களைபவரால் மனிதம் வாழும்!
 
உண்மைக்குப் பலநேரம் சோதனைகள்
.. ஒன்றன்பின் ஒன்றாக நிலைகுலைக்கும்
திண்மையுள்ள கொள்கைக்கோட்பாட்டில் நிற்போர்
.. திகைத்தாலும் தடம்மாறிச் செல்லமாட்டார்
கண்ணெதிரே வஞ்சங்கள் கவர்ச்சிக் காட்டக்
.. காணாதோற் போலவே நேர்வழியில் செல்வார்!
எண்ணத்தால் தெளிவோடு நேர்மை உந்த
.. ஏறுநடை உடையோர்முன் வீழும் சூழ்ச்சி!
 
வெள்ளைஉடையால் நெஞ்சக் கறுப்பை மூடும்
.. வேடமிட்டே அலைந்திடுவோர் ஒருநாள் வீழ்வர்
துள்ளுநடை முதுமையிலும் தளராத் தன்மை
.. தோல்விவெற்றி எதனிலுமே நிலைமை மாறா
உள்ளத்தில் ஊற்றாக ஒழுக்கம் பொங்கும்
.. ஊர்நலத்தைக் கெடுப்போர்க்கே உவகை மங்கும்!
கொள்வதினும் கொடுப்பதுவே குணமாய்க் கொண்டோர்
.. குறள்கூறும் பெருமைகளுக் குரியோர் தாமே!

Tuesday, October 23, 2012

நன்றி பயவா வினைகள்

நன்றி பயவா வினைகள்
 
புன்மதியோன் என்றறிந்தும் பொன்மொழிகள் கூறிப்
.. புத்தியினைத் தெளிவாக்கும் முயற்சியெலாம் வீணே
தன்னறிவைப் பெரிதாகத் தான்வியந்து பேசும்
.. தன்னலத்தார் நெஞ்சுநடு நிலைக்காணல் கானல்!
கொன்றுண்ணல் உயிரழிக்கும் கொடுமையென்றே எண்ணாக்
.. குணக்கேடர் பாலிரக்கம் கல்லில்நார் காணல்!
மன்றத்தில் பணிவின்றி மாசுகளைச் சான்றோர்
.. மனஞ்சுளிக்கப் பேசுபவன் சாம்பலின்கீழ் தீயே!
 
என்றேனும் நலம்தன்னைத் தேடிவரும் என்றே
.. எண்ணத்தை வளர்த்திருக்கும் மடியுடையான் ஆற்றல்
புன்மதியால் வன்முறையால் பொதுச்சொத்தை நாசம்
.. புரிசெயலோன் தோள்வலியும் முகப்பொலிவும் மற்றும்
முன்னோர்கள் மொழிந்தவற்றைப் பிறர்க்கெடுத்துச் சொல்வோன்
.. முன்நடக்கும் வழிகாட்டி ஆகாமை போன்று
நன்றிபயவா வினைகள் நாடோறும் செய்வோர்
.. நல்லவர்போல் நடிப்பதனால் நாட்டுக்கென் நன்மை?
 
சென்றுவிட்ட மாண்புகளைச் செப்பியேநாள் ஓட்டும்
.. செயலினிலே ஆக்கத்துக்(கு) ஊக்காமை மேலோ?
வென்றிடுதல் ஒன்றேதான் வீரமென்றே நாடி
.. வெட்கமின்றி விதிமீறி விரைந்திடுதல் கீழ்மை!
குன்றினைப்போல் செல்வத்தைக் குவித்தின்னும் சேர்க்கக்
.. கூடாரை நாடுவோனைக் கேடுவந்து தாக்கும்!
என்றுமெனக் கழிவில்லை என்னுமாண வத்தில்
.. இன்புறுவோர் இருள்வினைகள் நன்றிபயவாவே!

Monday, October 22, 2012

இருள் மனம்

இருள் மனம்
 
உலகத்தில் ஆண்பெண் என்றிருபாற் கூறாய்
.. உள்ள உயிர் வகையிரண்டை ஆய்ந்து நோக்கின்
பலவிதத்தும் வன்மையுடன் மென்மை சேர்ந்து
.. பருவத்தேர் ஓட்டத்தில் இயைந்து கூடிக்
குலவுதலில் இனம்பெருகி வாழ்க்கை என்னும்
.. கூட்டுறவுத் தொடர்ச்சியது நீண்டு வையம்
நிலவுநிலையாதல் உண்மை! ஆண்பெண் வாழ்க்கை
.. நீள்பயணம் செய்ய இருசக்கரங்கள்!
 
பெண்ணீனத்தின் மேன்மையினைப் பேணிக் காக்கப்
.. பிறந்தவர்கள் பெயர்விளங்கக் கண்டும் ஏனோ
பெண்சிசுவைக் கள்ளிப்பால் இட்டுக் கொல்வார்
.. பேதையர்வாய் நெல்லிட்டும் ஊரழித்து
மண்ணுக்குள் மறைக்கின்றார் குப்பைத்தொட்டி
.. மறைவினிலே வீசுகின்றார் அந்தோ அந்தக்
கண்மணிகள் வாழ்ந்திருந்தால் தியாக வீரக்
.. காவியத்து நாயகியராகக் கூடும்!
 
தீரர்களாய்த் தியாகிகளாய்த் தேசம் எங்கும்
.. திகழ்பெருமை நாட்டுதற்குத் தேர்ச்சி செய்யும்
ஈரமனம் வீரமனம் தாய்க்குத் தானே!
.. ஏனிந்த தாய்க்குலத்தை நசுக்குகின்றார்?
தாரமாகத் தாயாகப் பாட்டியாகத்
.. தக்கமதி யுணர்த்திவழி காட்டுவோரைப்
பாரமெனல் பகுத்தறிவோ? குலவிளக்கைப்
.. பாதகத்தால் அழிக்குமுளம் கும்மிருட்டே!

Sunday, October 21, 2012

குணக்கோணல்

குணக்கோணல்
 
உன்முடிவை நானேற்க வேண்டுமென்றால்
.. உந்துதலைப் பலமாக்க முயலும் நண்பா
என்னிடமும் சிந்திக்கும் மனமிருக்க
.. ஏனிதனை அடியோடு மறந்து போனாய்?
நன்மையெனில் பொதுவாக அனைவர்க்கும் தான்
.. நாசமெனில் இழந்தவர்க்குத் துன்பம் தானே?
தன்வலிவால் இன்னலினை இழப்போன் வாழ்க்கைத்
.. தரத்தினிலே உயர்வதுதான் மானக்கேடு
 
கிளைஒடிந்தும் துளிர்க்கின்ற மரங்கள் உண்டு
.. கீழ்ப்படுத்தி வைத்திருந்தும் எழுச்சி காணும்
உளமுள்ள சிலருயர்வைக் கண்டபின்னும்
.. உரம்பெற்றும் முயலாதோர் தலையெழுத்தின்
விளைவின்றி வீறின்றிக் கிடந்துதானே
.. வெகுகாலமாய் அடிமைநிலையில் உள்ளார்
களைசிலவும் விளைபயிரில் ஓங்கி நிற்கும்
.. காண்பதற்கு அதன்சாயல் மயங்க வைக்கும்
 
காணாத நிலையினிலும் மணம் நுகர்ந்து
.. கணத்தினிலே மலரின்பேர் சொல்லல் ஒல்லும்
தூணெந்த மரத்தாலே ஆனதென்று
.. தூர இருந்தேகூறத் துணிவோர் உண்டோ?
வீணாக வார்த்தைகளைக் கொட்டுவோர்க்கு
.. வேகமாகக் கைத்தட்டல் அடக்கத் தானா?
கோணலுள்ள சிலவற்றை நிமிர்த்தத் தோற்போம்
.. குக்கலுடற் கூறுசிலர்க் குணத்துக் குண்டே!

Saturday, October 20, 2012

குறுமதியாளன் குறிக்கோள்

குறுமதியாளன் குறிக்கோள்
 
அடியாளாய் வாழ்ந்தாலும் பரம்பரைக்கே
.. ஆனமட்டும் சேர்த்துக் கொள்ளாது போனால்
தடிமாடாய்த் திரிந்தவனாய் அடிமாடாகத்
.. தான்போக நேர்ந்துவிடும் எந்தக் கொள்கைப்
பிடிமான அரசியலாம் தேரில் ஏறும்?
.. பேசாது தலையாட்டிக் கொண்டு பின்னே
கொடிதூக்கி நடந்தாலே கோடி நன்மை
.. குறிஎன்ன குறையின்றி வாழ்தல் தானே?
 
படிதாண்டாப் பத்தினியாய் நடிப்பதற்குப்
.. பரத்தையிடம் யார்பாடம் பயிற்ற வேண்டும்?
இடிதாங்கி அழிவதற்கா பிறந்தேன் நானும்?
.. இழிவஞ்சிக் கிடப்பவர்கள் என்ன கண்டார்?
முடிசூட்டி உலாவருவோர் கண்முன்னாலே
.. முண்டியடித்தோடி முன்னால் மண்டியிட்டுப்
படிகின்ற மண்ணுடலைப் பார்த்துதானே
.. பசையுள்ளோன் பரிதாபம் என்மேல் தங்கும்!
 
பத்தினியாய் வாழ்பவர் பட்டினியால் வாட
.. பார்த்துத்தான் இப்பாடம் கற்றுக் கொண்டேன்
சொத்தென்ன போயிற்று சுகமாய் வாழ
.. சுயநலத்தில் ஆழ்ந்திட்டால் குடியா மூழ்கும்?
உத்தமமாய் வாழ்வதற்குப் பாதை ஒன்றே
.. ஊரேய்த்து வாழ்வதற்கு வழிகள் நூறு
செத்துக்கொண்டிருப்போரின் சித்தாந்தத்தைச்
.. செவிமடுப்போர் வாழ்க்கையிலே சொத்தா சேரும்?

Friday, October 19, 2012

நாணம்

நாணம்
 
நாகரிகப் பண்பாகும் நாணம்; என்றும்
.. நல்லதல்லாச் செயல்நிறுத்த எச்சரிக்கும்!
தாகத்தைத் தீர்க்கமது அருந்தப் போமா?
.. தகாமுறையில் கனியவைத்துப் புசிக்கலாமா?
வேகத்தில் சிந்தனைதன் வீழ்ச்சி காணும்!
.. விருந்திடுவோர் வஞ்சமறிந் துள்ளம் நாணும்!
மோகத்தைநாண் ஏற்றி வீழ்த்தா விட்டால்
.. மூளிருளில் குடும்பநலன் மூழ்கிடாதா?
 
பரிவதனால் பரிசுபெற நாண வேண்டும்
.. பணம்கொடுத்துப் புகழடைதல் பண்ட மாற்றா?
புரிசெயலால் புகழடைதல் போற்ற லாகும்
.. பொய்யுரைத்தே மெய்வளர்த்தல் வெட்கக் கேடு!
கரிசனமில்லா நேர்மை காண வேண்டும்!
.. கண்ணோட்டல்பண்பணியைப் பூண வேண்டும்!
விரிவுரையில் விளக்கமொளி வீச வேண்டும்
.. வீம்புக்கு நிற்போரே நைந்த தாம்பு!
 
அறிவுடையார் அஞ்சுகின்ற செயலைச் செய்யா(து)
.. அகல்வோர்க்கு நாணமணி கலனாய் ஆகும்
செறிவறிந்தும் குறைகூறல் முறையா என்னும்
.. சிந்தனையில் திருத்துகின்ற நாணம் வேண்டும்
நிறைவுதனை எப்படியோ பெருக்கிக் கொள்ள
.. நெஞ்சத்தில் நாணுடைமை காவல் வீரன்!
மறையும்நாள் வரை பிறழா முறையில் வாழும்
.. மனச்சான்றாம் நாணுடைமை மாண்பே யன்றோ?

Thursday, October 18, 2012

சிரிக்கலாமே!

சிரிக்கலாமே!
 
நாவென்றால் நல்லதையே சுவைக்க வேண்டும்!
.. நாநயத்தில் உண்மையொளி சுடர வேண்டும்!
வாவென்று சிரங்குக்கை வழங்க நீண்டால்
.. வஞ்சகத்தை யுணர்ந்தும் கையேந்தலாமா?
தாவென்று கெஞ்சுதலே தலைமைப் பண்பாய்த்
.. தாங்குவதோ ஏங்குவதோ தகுதியாமோ?
சீஎன்றே சிறந்தவர்கள் இழித்துப் பேசும்
.. சிறுமதியார் அறங்கூறின் சிரிக்கலாமே!
 
தமிழெழுத்தின் வகையறியான் இலக்கணத்தைத்
.. தான்கற்றுத் தருவேனென் றுரைத்தல் நெல்லின்
உமிதனக்குப் பறந்திடவே தெரியும் என்றே
.. உரைப்பதைப்போல் நகைப்புக்கே இடமுண்டாக்கும்!
குமிழ்கன்னக் குழந்தைக்கு முத்தம் வைக்கக்
.. கொலைநாற்ற வாயுடையோர் முந்தலாமா?
திமிரேறும் தெளிவில்லாச் சிந்தை கொண்டோர்
.. தேர்ந்தவராய்த் தமைஎண்ணச் சிரிக்கலாமே!
 
மக்களது தீர்ப்புகளால் மனம் வெதும்பி
.. மாசென்றும் தூசென்றும் ஏசுவோர்க்குத்
தக்கவைத்துக் கொள்ளஒரு தகுதி இல்லை!
.. தலைக்கனத்தை வளர்ப்பதிலே காலம் ஓட்டிப்
பக்கதுணையாய்ப் பகையை நம்பி ஒட்டும்
.. பச்சோந்திகளின் நடுவே நானே என்று
கொக்கரித்தால் நகைக்காமல் என்ன செய்வோம்?
.. கூகைநன்றாய் இசைக்குமென்றால் சிரிக்கலாமே!

Wednesday, October 17, 2012

உண்மைகள்

உண்மைகள்
 
விருந்தோம்பல் தேவையுள்ள எளியோர் தம்மை
.. விருப்பமுடன் வரவேற்றுப் பசியை ஆற்றல்
பொருள்கொடுத்துப் புகழ்த்தேடி அழையாப் போக்கைப்
.. புறந்தள்ளிக் கடமையெனச் செய்தல் ஈகை!
அருளென்றால் இயல்பாக நெஞ்சின் ஊற்றாய்
.. ஆவனசெய்தணைப்பதற்குச் சுரக்கும் அன்பாம்!
இருள்நீக்கி நெஞ்சத்தில் ஒளிவிளங்க
.. எண்ணம்சொல் வினைத்தூய்மைக் குந்தல் கல்வி!
 
உண்மைதனை நிலைநாட்ட அச்சம் கொள்ளா
.. உள்ளத்தின் சீரொழுங்கே வீரம் என்றார்
எண்ணத்தில் இடராமல் தேர்ந்து செய்தும்
.. இறுதியிலே தோல்வியெனில் ஏற்றல் ஆற்றல்!
மண்ணகத்தின் மாண்பங்கே வாழும் மாந்தர்
.. மானமுடை வாழ்க்கைமுறை காட்டும் உண்மை
கண்போல மொழிநாடு இனத்தைப் பேணும்
.. கடமைகளில் தவறாமை பேராண்மையாம்!
 
பழம்பெருமை பேசிடத்தான் மேடை என்னும்
.. பழக்கத்தில் ஆழ்ந்தேநாம் மறந்தோம் பண்டைச்
செழுமையினைப் பலதுறையும் காணவேண்டும்
.. செயல்முறையில் இழிவென்றால் நாணவேண்டும்
ஒழுக்கந்தான் இயக்கத்தின் உயர்வாம் என்னும்
.. உரம்நெஞ்ச நிலம் கொள்ளும் வித்தாய் வேண்டும்
தொழுதற்கே தலைகைகள் என்றே வாழ்வோர்
.. துணிவில்லார் துணையாகித் துயர்மாய்ப்போமா?

Friday, October 12, 2012

அவன் போக்கு!


அவன் போக்கு!
 
குறையா நிறையா தெரியவில்லை - அவன்
கொள்கை தவறா புரியவில்லை!
 
நியாயந் தன்னைக் கொல்வோரை
நேரில் கண்டால் கூசுகிறான்
நேர்மை வழியே செல்வோரை
நெருங்கிச் சென்று பேசுகிறான்
- குறையா...
 
தியாகம் என்பதை விரிவாகத்
தெரிய உரைப்பார் மேடையிலே
வியாபாரந்தான் அரசியலோ?
விளங்கிக் கொண்டு விலகிடுவான்
- குறையா...
 
கைகள் தட்டும் கூட்டத்தில்
கலந்திட மறுப்பவன் ஓட்டத்தில்!
பொய்யாய்ப் புகழ்புகை மூட்டத்தில்
புகுந்தால் புழுங்குவான் வாட்டத்தில்
- குறையா...
 
உயர்த்தித் தூக்கிப் பேசிடுவோர்
உதறித் தூர வீசிடுவார்
பயத்தில் ஒதுங்கும் விழிப்புணர்வைப்
பலமாய்க் கொள்வான் வழித்துணையாய்
 
சரியா தவறா தெரியவில்லை - எதைச்
சாதிக்கப் போகிறான் புரியவில்லை!

Monday, October 8, 2012

முன்னும் பின்னும்

முன்னும் பின்னும்
 
சதுரத்துள் சிறுவட்டம் வரைதல் கூடும்
.. சதுரமதும் வட்டத்துள் சிறிதாய்க் காணும்
எதுவொன்றும் தனிமையிலே பெரிதாய் தோன்றும்
.. இயல்புக்கு மீறுவதா இயற்கை ஆகும்?
புதுமையென விதிமுறையை மீறல் புன்மை
.. புடலங்காய் சுரைக்காய் போல் பெருக்க லாமா?
பதமான தாள்களிலே வண்ணப் பூக்கள்
.. படைத்துமணம் தெளித்திறைக்குச் சூட்டுவாரா?
 
முருங்கையிலைக் கீரையிலே சத்துண்டென்றால்
.. முறியுமதன் கிளையெடுத்தா கூரை வேய்வார்?
இருப்பதுவே புனிதமென்று துளசிதன்னை
.. இருட்டறையில் வைத்தெவரும் வளர்க்க மாட்டார்
விருந்தென்று பல்சுவையில் உணவுப் பண்டம்
.. வேகாத நிலையென்றால் வயிறென்னாகும்?
மருந்தான மூலிகைகள் கசக்குமென்றே
.. மாற்றாகத் தேன்கலக்க அளவும் உண்டு!
 
நடைமுறைகள் பலகாலம் பயின்று பின்னே
.. நன்முடிவைத் தேர்ந்தேதான் பயன்பாட்டுக்குத்
தடையில்லை எனமுன்னோர் எதையும் செய்தார்
.. தற்கால அறிவியல் முன்னேற்றம் என்று
விடைகொடுத்தாம் எளிமையது பழைமை என்று
.. வீம்புக்கு நாகரிகப் போக்காய்க் காட்டும்
உடை உணவுப் பழக்கங்கள் நோய்க்கிடங்காய்
.. உடல் உள்ளம் உருமாற உவப்பா வாழ்வு?

Sunday, October 7, 2012

வெற்றி

வெற்றி
 
வல்லமையால் பொல்லாங்கில் வாகை சூடல்
.. வாழ்த்துகிற வகைமாண்பு கொள்வதில்லை
சொல்செயலால் சிந்தனையால் தன்னலத்தைச்
.. சொந்தமாக்கிச் சேமிக்கும் சொத்தும் குப்பை
கல்லாதார் வஞ்சமின்றிக் கடமையாற்றிக்
.. காட்டுகிற சிறுசெழிப்பும் மாசில் வெற்றி!
நல்லவர்போல் நடித்திடுவோர் நாநயத்தால்
.. நம்பவைத்துக் கெடுத்தடையும் வெற்றி போலி!
 
வெற்றியென்றால் நல்லுளத்தோர் விரும்பிப் போற்றும்
.. விவேகத்தின் பதிவாக விளங்க வேண்டும்
குற்றத்தை மறைத்ததனை வினைநலத்தில்
.. கொண்டவெற்றி யெனப்போற்றக் கூட்டம் சேர்த்தால்
பெற்றவளே தன்வயிற்றை நொந்து கொள்வாள்!
.. பெருமைதரும் வெற்றியது நற்றாய்ப் பிள்ளை!
மற்றவர்கள் விதைப்பைத்தன் வெற்றி என்று
.. மலர்முடியைத் தலையேற்றல் மடமை உச்சம்!
 
கடும்முயற் சியும்தோல்வி யடைதல் கண்டு
.. கலங்காது படிக்கட்டாய்க் கருத்திற் கொண்டு
தடுமாற்றம் இல்லாமல் தொடர்வோர்க் குத்தான்
.. தாளாண்மை வெற்றிக்கனியினிக்கும்!
படுத்துகொண்டே வெற்றி படைப்பேன் என்னும்
.. பகற்கனவு தோல்வியிலே தோய்த்துக் காண்போர்
எடுத்துக்கொள்வதற்கேற்ற எச்சரிக்கை!
.. ஏற்கின்ற ஊக்கம்தான் உயர்த்தும் ஏணி!

Saturday, October 6, 2012

நல்லவரும் வல்லவரும்

நல்லவரும் வல்லவரும்
 
உருவத்தில் ஏறத்தாழ் விருந்த போதும்
.. உள்ளத்தில் உணர்வுகளில் பொதுநலத்தைக்
கருதுதற்கே பகுத்தறிவு மாந்தருக்கு!
.. கண்முன்னே பல உயிர்கள் பசியால் வாட
சிறிதும் சஞ்சலமின்றித் திரிவர் தீயர்
.. சிறுமதியோர் பெருகுவதே பூமி பாரம்
வறியநிலை மண்டையிலே கொண்டோர் இங்கே
.. வாழ்கின்ற காலமெலாம் உலகக் கேடே!
 
எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டும் என்னும்
.. எண்ணமிலார் தம்பெண்டு மக்கள் மட்டும்
செல்வத்தில் நீந்தும் பேராசை கொள்வார்
.. சீரழிப்பார் ஊரழிப்பார் சாகும் மட்டும்
நல்லவரே வல்லவராய் மாற வேண்டும்
.. நலிந்தவரின் துயர்நீக்க உதவ வேண்டும்
புல்கூட மருந்தாகிப் புண்ணை ஆற்றப்
.. பொதுநலத்தை ஏன்மனிதன் பொசுக்குகின்றான்?
 
வல்லமையால் சேர்ந்திருக்கும் வசதி யாவும்
.. வாழ்நாளின் இறுதிவரை உறுதி யாமோ?
பொல்லாதார் சமத்துவத்தைப் போற்ற மாட்டார்
.. போங்காலம் வரையில் தன்னலமாம் சேற்றில்
எல்லையிலா ஆசைகளை வளர்த்துக் கொண்டே
.. இடர்ப்பாட்டில் சிக்கி இழிநிலையில் வீழ்வார்
நல்லவராய் வாழ்ந்தவரின் வரலாறெல்லாம்
.. ஞாலமுள்ள நாள்வரைக்கும் புகழாய் வாழும்!
 
உள்ளத்தை மறைத்துரையில் பரிவைக் காட்டல்
.. ஊர்கெடுப்போர் ஏமாற்று வித்தை என்றே
பள்ளத்தில் இருப்பவர்கள் உணர்ந்து மீளப்
.. படும்பாடும் பாதகரால் பாழாய்ப் போகும்
கள்ளத்தை வளர்ப்பவர்க்கோ பகட்டாய் ஆடை
.. கடுமுழைப்பில் நடுங்குமுடல் சுற்றக் கந்தல்
கொள்ளையரின் உடற்பெருக்கம் இல்லா தோரின்
.. குடற்சுருக்கம் எனும் அவலம் ஒழிவதென்றோ?

Friday, October 5, 2012

புதியதோர் உலகம் செய்வோம்

புதியதோர் உலகம் செய்வோம்
 
புதியதோர் உலகம் செய்வோம் - இந்தப்
பூமியின் வளமெலாம் பொதுவெனச் சொல்வோம்
எதிரிகள் எவருமிங் கிலரே - என்னும்
இனிய நிலையினில் இருக்குமா இடரே?
 
விதியினைச் சொல்லியே ஏய்ப்பார் - ஏதோ
வேறுலகம் என மயக்கியே மாய்ப்போர்
சதியினால் எளியரைச் சாய்ப்போர் - இங்கே
சகலமும் தமக்கென வளைப்பதை மாய்ப்போம்
- புதியதோர் உலகம் செய்வோம்
 
மதியுளோர் தன்னலம் ஆசை - மற்றவர்
மார்க்கமே தவறென வளர்க்கிறார் மீசை
சதமெனச் சேர்க்கிறார் காசை - கள்ளச்
சந்தையில் உழல்பவர் முகத்திலேன் மீசை
- புதியதோர் உலகம் செய்வோம்
 
சிந்தியாமல் பின் தொடர்தல் - மக்கள்
சேவை என்போர் மனம் புகழிலே படர்தல்
வந்தனைக்காய் உடல் வளைதைல் - என்று
வயிறு வளர்ப்பவர் வளர்ச்சியைக் களைந்தே
- புதியதோர் உலகம் செய்வோம்
 
மந்தை ஆடாய்ப்பின் தொடர்தல் - ஏதோ
மாண்புளோன் என்பவன் தாள்சரண் அடைதல்
வந்தனை செய்யவே வளர்தல் - என்று
வாழ்ந்திடும் வறியவர் தாழ்நிலைக் களைவோம்
- புதியதோர் உலகம் செய்வோம்
 
அறிவியல் சிந்தனை தழைக்கும் - கல்வி
அளித்துப் பயிற்றலால் தாயகம் செழிக்கும்
நெறிமுறை நேர்மைகள் நிகழ்வாய் - இயங்கும்
நினைப்பிலே நீசரா பதவியில்? இகழ்வாய்!
- புதியதோர் உலகம் செய்வோம்
 
உழைப்பவர் உயர்வதே பெருமை - ஏய்ப்போர்
உடலிலே குருதியா? கழிநீர்! சிறுமை!
தழைகளும் மூலிகையாகி - உடலைத்
தாக்கிடும் பிணியற பணிசெயல் யோசி
- புதியதோர் உலகம் செய்வோம்
 
பேச்சிலும் மூச்சிலும் நாடு - மேன்மை
பெற்றிடப் பெரும்பணி ஆற்றிட நாடு
தீச்சுடர் போல் அழி கேடு - உண்மைத்
திறமையின் வலிமையைப் புகழுமே ஏடு
- புதியதோர் உலகம் செய்வோம்

Thursday, October 4, 2012

எழுக தோழா!

எழுக தோழா!
 
படைப்பவன் தினமும் படிப்பவனானால்
.. பதிந்திடும் பண்புகள் பலவும்
உடைபடும் கிளையும் உடனடி துளிர்த்தே
.. உதவிடும் குணத்தை நிலவும்
கொடுத்திடும் இயல்பினைக் கெடுத்தவன் அடையும்
.. குதூகுலம் வஞ்சகப் பலமா?
விடுத்தவன் ஒதுங்க அடுத்தவன் பிடிக்குள்
.. விரைவினில் சிக்குதல் நலமா?
 
விளம்பரம் தேடிக் களம்பல நாடும்
.. வேகத்தில் அலைந்திடல் மடமை
உளந்தனில் தூய்மை விளங்கிட வாய்மை
.. ஒன்றிடச் சிறந்திடல் கடமை!
செடிகளின் மலர்கள் கொடுத்திடும் மணத்தில்
.. சேர்ந்திடும் புத்துணர்வகத்தில்
நடைமுறை வாழ்வில் கடைபிடி ஒழுங்கை
.. நல்கிடும் பொலிவினை முகத்தில்
 
அடுத்தவர்க் குதவும் நடத்தையே சிறப்பு
.. அளித்திடும் நிறைமன இருப்பு
கொடுக்கிற நலத்தைத் தடுக்கிற விரைவு
.. கீழவர்க்கே உடன்பிறப்பு!
தொடுத்திடும் பூவே மாலையில் தொங்கும்
.. தொடர்ந்திடும் பெருமையே எங்கும்
விடுத்திடும் அம்பே விரைந்துமுன் பாயும்
.. வினைசெய எழுதுயர் மாயும்!

Wednesday, October 3, 2012

அநியாயத் தீ!

அநியாயத் தீ!
 
பதிப்பாளர் சிலரிடத்தில் படைப்பைத் தந்து
.. பணம்பெறவே நான்பட்ட பாடு நெஞ்சம்
கொதிப்படையும் கொடுமையினை நினைக்கும் தோறும்
.. குமறுவதைத் தடுத்திடவே முடியவில்லை
மதிகொண்டு மதிப்போடு வாழ்வதற்கு
.. மனமிருந்தால் போதாதே! நடப்பே வேறு!
நிதிசேர்த்துப் படைப்பாளி வெளியிட்டாலும்
.. நிம்மதியோ நூலகத்தார் ஆணை நோக்கி!
 
இலக்கியமும் உளவியலும் கற்று நெஞ்சில்
.. எழும்கருத்தை எழுத்துருவில் எழுப்பி நூல்கள்
பலதுறைகள் சார்ந்தவையாய் படைத்துக் காணும்
.. பலனான மனநிறைவைச் சொல்லப் போமோ?
சிலர்கதைகள் எப்படியோ? பலர்க்கு நேர்மைச்
.. செயல்முறையாய் இருப்பதனால் சிக்கல் நேரும்!
நலம்பொதுவா? தனிச்சொத்தா? உண்மை சொல்ல
.. நாம்நடக்கும் பாதையிலே யாரைக் கேட்போம்?
 
ஏமாற்றம் இதயத்தில் உரத்தை ஏற்றும்
.. இன்னலிலே இதையேற்போர் எத்துணைப்பேர்?
நாமார்க்கும் அஞ்சோம் என்றிருப்போர் கூட
.. நார்நாராய் கிழிபடுங்கால் என்செய் வாரோ?
தாம்தூம்தை எனக்குதிக்கும் தகுதி இல்லார்
.. தலைநிமிர்ந்தே நடக்குங்கால் தகவேன் தாழும்?
ஆம் இங்கே சூதுகளின் ஆதிக்கத்தில்
.. அநியாயத் தீவானில் சூழும் தானே?

Tuesday, October 2, 2012

படிப்பாய்! பிடிப்பாய்!

படிப்பாய்! பிடிப்பாய்!
 
படித்துக் கொள்ளடா தம்பி! - நல்ல
பண்பாடு பெறுதலை நம்பி - கருத்தைப்
பிடித்துக் கொள்ளடா தம்பி!
 
படித்துப் பெறுதலே பட்டம் - அதனைப்
பரிந்துரை தருவது மட்டம்
பிடித்தவர் அளித்திடும் பரிசு - அவர்கள்
பெருமைக்கே எனிலது தரிசு!
- படித்துக் கொள்ளடா தம்பி...
 
படிப்பும் பரம்பரைச் சொத்தா? - நல்ல
பண்புக்கவை தான் வித்தா?
பண்பே உயர்வின் வித்து - உண்மைப்
பகுத்தறிவே புகழ்ச் சொத்து
- படித்துக் கொள்ளடா தம்பி...
 
உறவுகள் உயர்ந்திடத் திட்டம் - அதையும்
உருவாக்கிட ஒரு வட்டம்
சிறப்பினை ஒதுக்குதல் காழ்ப்பு - தெரிந்தும்
சிறுமையைப் போற்றுதல் ஏய்ப்பு!
- படித்துக் கொள்ளடா தம்பி...
 
சிலையினைச் சிதைத்தல் சிறுமை - கொடிய
சீற்றமே நடத்தையின் கருமை
நிலையினை உயர்த்தலே பெருமை - ஒழுக்க
நெஞ்சினைக் கொள்வதுன் உரிமை!
- படித்துக் கொள்ளடா தம்பி...