Monday, September 3, 2012

ஒற்றைக் குயிலே...

ஒற்றைக் குயிலே...
 
ஒற்றைக் குயிலே பாடாயோ? - உன்றன்
உயிர்த்துணை எங்கே தேடாயோ?
 
உள்ளம் கவரும் உன் பாடல் எல்லாம் ஒழிந்ததோ?
இன்பம் நாடாயோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?
 
தென்றலே மென்மையை ஏன் பகைத்தாய்? - வண்ணத்
தேன்மலர் நீயுமே கூடாயோ?
தீயுடன் பஞ்சுக்கு ஏன் உறவு? - உன்
துயருக்கு விடிவெது தேடாயோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?
 
வெண்ணிலா விஷத்தைச் சிந்துவதேன்? - என்றன்
வேதனை கூறிட ஓடாயோ?
கண்ணிலார் வண்ணங்கள் அறியாரே - நெஞ்சு
கனவிலும் அமைதியைக் கூடாதோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?

Sunday, September 2, 2012

எங்கும்... எப்போதும்...

எங்கும்... எப்போதும்...
 
கண்கள் விழித்திருந்தேன் - புவி
காட்சி மறந்திருந்தேன்
எங்கும் தனித்திருந்தேன் - உன்னை
எண்ணி இனித்திருந்தேன்
 
உண்ண வெறுத்திருந்தேன் - வேறு
உடையும் மறுத்திருந்தேன்
உன்னை மதித்திருந்தேன் - கொடிய
உறுத்தலிலும் துதித்திருந்தேன்
- கண்கள் விழித்திருந்தேன்...
 
சுமைகள் மறந்திருந்தேன் - எந்தச்
சுவையும் துறந்திருந்தேன்
இமைகள் துறந்திருந்தேன்
இமைகள் திறந்திருந்தேன் - வானில்
இணைந்தே பறந்திருந்தேன்!
- கண்கள் விழித்திருந்தேன்...

Friday, August 31, 2012

நீயாக...

நீயாக...
 
நீயாக எனைத்தேடி வரவேண்டும் - என்றன்
நெஞ்சத்தில் முழுநிலவாய்ப் பால் ஒளியைத் தரவேண்டும்
ஓயாமல் உன் உறவைப் பெறத் தூண்டும் - என்றன்
உள்மனத்தில் உன்மனமும் ஐக்கியமுறவே வேண்டும்
- நீயாக எனைத்தேடி வரவேண்டும்!
 
கடலாம் எனக்கூட கருணை நதியாகி - தடைல்
கடந்திங்கே தனியாய் நீ வரவேண்டும்
உடலென்ன உயிரென்ன எவைபோனால் என்ன
ஒன்றுக்குள் ஒன்றாக இணைவோம் மீண்டும்
- நீயாக எனைத்தேடி வரவேண்டும்!
 
பிரித்தறிய முடியாத அணுவாய் வாழ்வோம் - பெரும்
பேதமுள்ள உலகமிது நாம் ஏன் தாழ்வோம்
சரித்திரமாய் மாறிடுவோம் சேர்ந்தே சாய்வோம் - காதல்
சங்கமத்தை உண்மை அன்பு ஒன்றே தூண்டும்
- நீயாக எனைத்தேடி வரவேண்டும்!

Thursday, August 30, 2012

ஊமை நாடகம்

ஊமை நாடகம்
 
கதிரவன் முகம் நோக்கிக் காத்திருந்தாய் - சூரிய
காந்தி மலரே நீ பூத்திருந்தாய்!
 
உன் ஊமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்
சொல்லாமல் ஏன் பேதை பார்த்திருந்தாய்?
 
தெப்பக் குளத்தில் அவன்
வெப்பம் தணிந்திடவே
தாமரை மேல் கரம் நீட்டக்
களித்திருந்தான் - நீ
எப்படி எல்லாம் பாவம்
இதயம் திறந்து வைத்தாய்
ஏனவனோ நீர்மகளோடு
இனித்திருந்தான் - அவன் இனி திருந்தான்!
 
உன் மடமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்?
சொல்லாமல் என் பேதை காத்திருந்தாய்?
 
தனக்குத்தான் அவன் என்று
தரைமீது தவம் செய்யும்
தாங்காத ஏமாற்றம் துக்கமடைந்தாய் - ஆசை
மனத்துக்குள்ளே நீயிட்ட
மாலையே சுருக்காச்சு
மகிழ்வாக நீரிலவன் பக்கமிருந்தான்!
 
உன் மடமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்?
சொல்லாமல் என் பேதை காத்திருந்தாய்?

Wednesday, August 29, 2012

நேசித்த நெஞ்சம்

நேசித்த நெஞ்சம்
 
நேசித்த நெஞ்சம் மறக்காது - மனம்
நேர்மையை யிழந்திடில் சிறக்காது
பூசைக்கு மென்மலர் ரோஜாவும் - முள்
பொருந்திடும் காவலைத் துறக்காது
- நேசித்த நெஞ்சம்...
 
வாசித்த பாடந்தான் மறக்காது - மனம்
வருந்திடும் போதிலும் மறுக்காது
யாசித்துப் பெறுவதோ உயிர்க்காதல் - அது
என்றைக்கும் என்றைக்கும் இறக்காது
- நேசித்த நெஞ்சம்...
 
அழுகையிலும் எனக்கு ஒரு சுகமே - அதை
அளித்தவன் நினைவினில் கனக்கும் அகமே
தொழுதிடுவேன் இன்பச் சுமையினையும் - ஒரு
துணையென வைத்ததை வெறுக்காது
- நேசித்த நெஞ்சம்...

Tuesday, August 28, 2012

இறவாப் புகழ்

இறவாப் புகழ்
 
உரம்நிறை உள்ளமே உயர்ந்ததை எண்ணும்
அரிதென மலைக்கும் அச்சம் விலக்கும்
பெரிதோ சிறிதோ பிறர்நலம் பேண
உரிதாய் இருத்தல் உயர்செயல் ஆகும்
சரி எனும் முடிவில் சலனமே இலையெனில்
முறையுடன் முயன்றால் முடிதரும் முடிவு!
 
நற்பணி ஆற்றிட முற்படும் உறுதியில்
பற்பல தடைகளும் பயந்தடி பணியும்
செயற்படு முன்னே சிந்தனை தெளிவுறின்
வயப்படும் வெற்றி! வாய்த்திடும் வாழ்த்து!
நம்செயல் நல்கிடும் நன்மையால் மற்றவர்
தம்மனம் மகிழ்வது நம்மன நிறைவாம்!
 
செல்வமும் பதவியும் சேர்த்திடும் சிறப்பினும்
நல்லவர் நெஞ்சில் இடம்பெறல் உயர்வாம்
பிறந்தவர் இறவாப் புகழ்பெறத் தேவைகள்
சிறந்த எண்ணமும் செயலில் நேர்மையும்!
விதியின் பயனாய்ச் சதியைச் சகிப்பது
மதியின் மயக்க கதியினால் தானே!
எதையும் ஆய்ந்தபின் ஏற்பதோ தவிர்ப்பதோ
விதிஎனக் கொள்ளலே இதய வீறாம்!

Monday, August 27, 2012

கவிக்கனல்

கவிக்கனல்
 
உலகத்தை பாதிக்கும் அவலம் எல்லாம்
.. உண்மையுள்ள நற்கவிஞன் மனம்கிழிக்கும்
நலம்நாடும் அறிவாற்றல் கொண்டோர் ஆக்கும்
.. நான்குவரிக்கவியெனினும் கனல்பறக்கும்
மலரதுவும் கனல்மணக்கும் என்றே சொன்னான்
.. மாக்கவிஞன் பாரதிதான் மரபின் மன்னன்
சிலர்பலவாய் மொழிக்கலப்பைச் செருகி வைத்துச்
.. செப்புகவி காகிதப்பூ செயற்கை வாசம்!
 
வல்லெழுத்துச் சொற்களினால் வார்த்தெடுத்து
.. வரும்சினத்தில் கொட்டுகவி கனலை வீசும்!
சொல்லுக்குச் சூடேற்றும் பொருள்பொதிந்த
.. சூழலிலே சுழல்மனத்தால் இயக்கப் பெற்ற
கல்லாரின் பேச்சுமொழிக் கவிதை கூட
.. கனல்பறக்கும் கருத்துகளைக் கொட்டும் வெட்டும்
பொல்லாத கண்ணேறு கொடிதென்கின்றார்
.. பொன்மனத்தார் சினக்கவியும் பொசுக்கும் தீயாம்!
 
நெஞ்சினிலே கவிக்கனலாய்ப் பொங்கும் போது
.. நேரடியாய்ப் பேரிடியாய்த் தாக்கம் உண்டாம்
வஞ்சிக்கப் பட்டதனால் வாழ்விழந்தோர்
.. வழிகாணாச் சுழித்தோடும் காட்டாறாக
விஞ்சிவரும் வேகமுடன் விடிவுக் காக
.. வினையாற்றத் தூண்டுகவி சமைக்கும் தீயாம்!
கொஞ்சிநிற்கும் எளியவரைக் கேலி செய்யும்
.. கெடுமதியைச் சுடும்கவிகள் தேவை யாம்தீ!
 
வழக்குரைத்த காதையிலே இளங்கோ கொட்டும்
.. வார்த்தைகளே கண்ணகிவாய்க் கனலைக் கக்கும்
முழக்கமென நெருப்பாறு பாயக் கண்டோம்
.. முடிசரிந்து மன்னவனும் வீழக் கண்டோம்!
வழக்கியவன் செங்கோலை இழித்துப் பேசும்
.. வகையில்தீ வழிந்ததனால் மதுரை சாம்பல்!
கொழுப்பேறிக் கொழுந்தனவன் துகிலுரித்தான்
.. கொதித்தமனப் பாஞ்சாலி சபதம் தீப்பா!
 
சீவகனின் எழுச்சியைச்சுந்தரனார் பாடல்
.. செருமுகத்தில் வீரமெனும் கனலைக் கொள்ள
மேவிடவே படைவீரர் புடைத்து நின்றார்!
.. மேலவர்கள் சினம்படைக்கும் கவிதைச் செந்தீ!
கூவியழைத்துப் பகையை எதிர்க்கும் தீரர்
.. குரல்வலிமை வஞ்சினமாய்க் கவிகொதிக்கும்!
நாவுக்கு விருந்தாகும் சொல்லால் சுட்டு
.. நல்லவற்றை ஒழிக்கும்தீக் கவிவேண்டாமே!
 
திருட்டுவகை பலவாகித் தீய்க்கும் நாட்டை
.. தீட்டும்பாவூட்டுமுணர்வோட்டும் கேட்டை!
மிரட்டுகிற மதம்சாதி பேதம் நீங்க
.. மேலான மருந்தாக கவிதை ஓங்க
புரட்டுப்பொய் சூதுவஞ்சம் ஏய்ப்பு நோய்கள்
.. புன்மையெலாம் பொசுக்கிவிட புதுமை பூக்க
வரட்டுவேதாந்தமெனும் மயக்கம் தீர
.. வருங்கால நலம்சமைப்போம் கவித்தீயாலே!