Thursday, August 30, 2012

ஊமை நாடகம்

ஊமை நாடகம்
 
கதிரவன் முகம் நோக்கிக் காத்திருந்தாய் - சூரிய
காந்தி மலரே நீ பூத்திருந்தாய்!
 
உன் ஊமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்
சொல்லாமல் ஏன் பேதை பார்த்திருந்தாய்?
 
தெப்பக் குளத்தில் அவன்
வெப்பம் தணிந்திடவே
தாமரை மேல் கரம் நீட்டக்
களித்திருந்தான் - நீ
எப்படி எல்லாம் பாவம்
இதயம் திறந்து வைத்தாய்
ஏனவனோ நீர்மகளோடு
இனித்திருந்தான் - அவன் இனி திருந்தான்!
 
உன் மடமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்?
சொல்லாமல் என் பேதை காத்திருந்தாய்?
 
தனக்குத்தான் அவன் என்று
தரைமீது தவம் செய்யும்
தாங்காத ஏமாற்றம் துக்கமடைந்தாய் - ஆசை
மனத்துக்குள்ளே நீயிட்ட
மாலையே சுருக்காச்சு
மகிழ்வாக நீரிலவன் பக்கமிருந்தான்!
 
உன் மடமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்?
சொல்லாமல் என் பேதை காத்திருந்தாய்?

No comments:

Post a Comment