ஆசையும் அவசரமும்
அவள்:
கதிரை அறுத்துச் சேர்த்துக்கட்டி
களத்துமேடு கோன்டு போயி
காவலுக்குப் போற மச்சான் காளிமுத்து - சூடா
கறியுஞ்சோறும் தின்னுட்டுப் போ மனசு ஒத்து
கதிரை அறுத்துச் சேர்த்துக்கட்டி
களத்துமேடு கோன்டு போயி
காவலுக்குப் போற மச்சான் காளிமுத்து - சூடா
கறியுஞ்சோறும் தின்னுட்டுப் போ மனசு ஒத்து
அவன்:
அப்பன் ஆத்தா அறியாமே
அக்கம் பக்கம் தெரியாமே
அவசரமா தூக்கி வந்த செல்லக்கண்ணு - தின்ன
ஆசையிருக்கு நேரமில்லே போடி பொண்ணு
அப்பன் ஆத்தா அறியாமே
அக்கம் பக்கம் தெரியாமே
அவசரமா தூக்கி வந்த செல்லக்கண்ணு - தின்ன
ஆசையிருக்கு நேரமில்லே போடி பொண்ணு
அவள்:
தாலி கட்டப் போற ஆளு
தவிக்கணுமா இத்தனை நாளு
வேலி ஓரம் கொஞ்சம் குந்த லாகாதா - மனசு
வைச்சிப்புட்ட என் கவலை போகாதா?
தாலி கட்டப் போற ஆளு
தவிக்கணுமா இத்தனை நாளு
வேலி ஓரம் கொஞ்சம் குந்த லாகாதா - மனசு
வைச்சிப்புட்ட என் கவலை போகாதா?
அவன்:
கொஞ்சம் பேச நின்னுப் புட்டா
கொஞ்சிக் கெஞ்ச வருவே கிட்டே
கஞ்சிக் கில்லா பய வருவான் செல்லக்கண்ணு - இருட்டுக்
காலம் நெல்லைக் கசக்கிப் போவான் சொன்னேன் பொண்ணு
கொஞ்சம் பேச நின்னுப் புட்டா
கொஞ்சிக் கெஞ்ச வருவே கிட்டே
கஞ்சிக் கில்லா பய வருவான் செல்லக்கண்ணு - இருட்டுக்
காலம் நெல்லைக் கசக்கிப் போவான் சொன்னேன் பொண்ணு
அவள்:
குளத்திலே நீ குளிச்சிருந்தே
குந்தியிருந்து நானும் பார்த்தேன்
கிளுகிளுப்பு கூடிப் போச்சு மச்சானே - எவன்
கிறுக்கு இந்தச் சிறுக்கிக்கின்னே வச்சானோ?
குளத்திலே நீ குளிச்சிருந்தே
குந்தியிருந்து நானும் பார்த்தேன்
கிளுகிளுப்பு கூடிப் போச்சு மச்சானே - எவன்
கிறுக்கு இந்தச் சிறுக்கிக்கின்னே வச்சானோ?
அவன்:
அத்தைமகன் தனக்குத் தான்னு
பித்தா ஒருத்தி காத்திருக்கா
சத்தியமா நீ தாண்டி எனக்குப் பத்தினி - எந்தச்
சந்தேகமும் வேணாம் இப்போ ஒத்து நீ
அத்தைமகன் தனக்குத் தான்னு
பித்தா ஒருத்தி காத்திருக்கா
சத்தியமா நீ தாண்டி எனக்குப் பத்தினி - எந்தச்
சந்தேகமும் வேணாம் இப்போ ஒத்து நீ
அவள்:
ஒத்திக்கத்தான் ஒளிஞ்சு வந்தேன்
எத்தனை நாள் காத்திருப்பேன்
செத்துப் போயிடுவேண்டா நானும் மச்சானே - வந்து
கொத்திப்போடா மொத்தம் உனக்கு நான் தானே
ஒத்திக்கத்தான் ஒளிஞ்சு வந்தேன்
எத்தனை நாள் காத்திருப்பேன்
செத்துப் போயிடுவேண்டா நானும் மச்சானே - வந்து
கொத்திப்போடா மொத்தம் உனக்கு நான் தானே
அவன்:
நெஞ்சா நினைவா நீ இருக்கே
நேரம் வரும்காத்திருக்கேன்
கொஞ்சம் கிளி அஞ்சிடாமே இருந்துக்கோ - நெல்லைக்
கொண்டு சேர்த்துக் காசு சேர்ப்பேன் பொறுத்துக்கோ
நெஞ்சா நினைவா நீ இருக்கே
நேரம் வரும்காத்திருக்கேன்
கொஞ்சம் கிளி அஞ்சிடாமே இருந்துக்கோ - நெல்லைக்
கொண்டு சேர்த்துக் காசு சேர்ப்பேன் பொறுத்துக்கோ
அவள்:
எந்த நிலமை எனக்குமிப்போ
வந்திருக்கு தெரிஞ்சுக்கோடா
சொந்த மாமன் புள்ளை அங்கே நிற்கிறான் - வந்துநீ
பந்தக்காலே சுருக்கா நட்டு வைக்கிறே
எந்த நிலமை எனக்குமிப்போ
வந்திருக்கு தெரிஞ்சுக்கோடா
சொந்த மாமன் புள்ளை அங்கே நிற்கிறான் - வந்துநீ
பந்தக்காலே சுருக்கா நட்டு வைக்கிறே
No comments:
Post a Comment