Tuesday, August 21, 2012

வழிகள்

வழிகள்
 
பொய்யில் வாழ்வோர் புரட்டே விதிவழி
கையில் காசுளோர் களிக்கச் சதிவழி
மெய்ப்பா டென்பது உணர்வின் துணைவழி
மென்மையும் வன்மையும் எண்ணம் பெறும்வழி
நன்மையோ தீமையோ நடத்தை தரும்வழி
அன்பும் அறமுமே அமைதியாம் நல்வழி!
 
தையில் படைப்போம் தனிவழி என்கிறார்
தனிவழி எனினும் இனிப்பதே தகுவழி
இனிபின் தொடர்வோர் இன்புறப் புகும்வழி
மாற்றம் தூயதாய் மாறிடும் வழியிலே
ஏற்றம் இருப்பின் போற்றுவர் அனைவரும்!
ஆற்றும் செயல்களோ தூற்றும் நிலைபெறின்
மாற்றம் (ஏ)மாற்றமே எனப்புவி சாற்றுமே!
 
தனிவழி இரகசிய வழியெனில் இழிவது
தகுந்தவர் தொடர்ந்திட வரும்பயன் நேர்வழி
புதுவழி எதுவெனின் பொதுநலம் மிகும்வழி
புவிவிழி மகிழ்வுடன் போற்றிப் பாடிடும் வழி!
 
நல்வழி நாடிடும் நாள்களே சிறந்தவை
விதிப்பயன் வழியிலே வெல்லலாம் எனல்புகல்
விதிமுறைப் படிச்செயின் வெற்றியாவதை மொழி!
செல்வழி சிறந்திடச் சிந்தையில் இழிவொழி!
அல்வழி உந்திடும் ஆவலை நீகழி!
 
எவ்வழி நல்வழி அவ்வழி நம்வழி
செவ்விதின் உரைத்தவை செயல்திறன் நுழைவழி
ஊக்கம் பெருக்கலே ஆக்கம் பெறும்வழி
பூக்களின் வாழ்நாள் பொழுது சிறிதே!
ஆக்கும் மணமும் அழகும் பெரிதே!
நோக்க மிலாத வாழ்க்கை வெறிதே
ஏக்கமும் தாக்கமும் நீக்குதல் மதியே!

No comments:

Post a Comment