Thursday, August 23, 2012

தீர்வு

தீர்வு
 
உணர்விருந்தால் தானதனை உடலம் என்போம்
.. உயிரிருந்தும் உணர்வின்றேல் சடலம் தானே!
மணமில்லை என்றாலும் மலர் வனப்பு
.. மகிழ்வூட்டும் மனம்பெற்ற மனிதனுக்குப்
பணத்துக்குத்தான் இயக்கம் எனும்நிலையில்
.. பழக்கத்தைக் கொண்டுவிட்டால் அவனை மாந்தர்
குணக்கேடன் எனக்கூறி ஒதுக்க வேண்டும்
.. குப்பையவன் செல்வமுடன் அவனுந் தானே!
 
கண்ணென்றால் இரக்கத்தைக் காட்ட வேண்டும்
.. கருதுமுளம் நலம்தீது கணிக்க வேண்டும்
திண்மையெனில் செயலாற்றல் துலங்க வேண்டும்
.. திருவாக்கும் அறிவாற்றல் திறமை வேண்டும்
வன்மையது விளம்பரத்தில் வனப்பிழக்கும்
.. வாழ்க்கைவழி வரலாற்றை வரைய வேண்டும்
உண்மையெனில் உலகொப்ப விளங்க வேண்டும்
.. உளஊற்றின் கனிவைத்தான் உலகம் ஒப்பும்!
 
இளைத்தவரை வன்முறையால் சாகடிக்கும்
.. இழிந்தவர்மேல் சினங்கொள்ளா இதயம் கல்லே!
முளைத்துவளர் பகைமுள்ளின் முனைமுறிக்கும்
.. முனைப்பின்றி இனப்பெருமை பேசி இங்கே
திளைக்கின்றார் தன்மானம் உடையோர் என்றே
.. திருடனுக்கும் முகம் அழகாய் இருப்பதுண்டு!
களைவளர்ந்து பயிரைவிட பசுமைத் தோற்றம்
.. காட்டுவதைக் கண்டுழவர் மகிழ்வதுண்டோ?
 
பாதரசப் பளபளப்பில் பதுங்கும் நஞ்சு
.. பார்த்தவுடன் புரிவதில்லை; பண்பட்டோர்நூல்
ஓதிவைத்த உண்மைகளை உளறல் என்போர்
.. ஊர்கொடுக்க உளம்மறைப்பார்! உணரும் நெஞ்சம்
சூதுதமைச் சுட்டெரிக்கு முன்பே நீங்கிச்
.. சொந்தமதித் தெளிவில்சூழ் நிலையை வெல்வார்!
தீதிழைப்போர் விதியனுப்பும் தூதர் என்றே
.. திடமாக நம்புவோர்க்குத் தீர்வே இல்லை!

No comments:

Post a Comment