Monday, August 6, 2012

மாறா மதிப்பீடு

மாறா மதிப்பீடு
 
படைப்பவன் தினமும் படிப்பவனானால்
.. பதிந்திடும் பண்புகள் பலவும்!
.. பலர்க்கிது தெரிந்தும் பதித்திட மனத்தில்
.. பற்றிட மறுப்பது நலமோ?
 
உடைபடும் கிளையும் உடனடி துளிர்த்தே
.. உதவிடும் கருத்தினில் நிலவும்!
.. உயர்த்திடும் உண்மை உறுதியில் நன்மை
.. உண்டெனக் கொண்டிடல் பலமே!
 
கொடுத்திடும் குணத்தைக் கெடுப்பவன் அடையும்
.. குதூகலம் வஞ்சகம் மடமை!
.. குறும்பினை விரும்பிக் குதர்க்கமாய் உரையில்
.. குறுக்கிடல் இழிவெனப் படுமே!
 
விடுத்தவர் மறைய அடுத்தவன் சதியில்
.. விபத்தெனச் சிக்குதல் கொடுமை!
.. விலைகொடுத் துயர்வை விரும்பியே பெற்று
.. வீரனாய் நடிப்பதும் கெடுமே!
 
விதிமுறை மீறிடும் சதிசெயல் யாவையும்
.. விளம்பர வெளிச்சமா மறைக்கும்?
.. வேற்றுமை வளர்ப்பவர் நாட்டிலே உயர்ந்திடும்
.. விந்தையா தீமைகள் குறைக்கும்?
 
நதியினில் பெருகிடும் நீரினைப் பதுக்கிடும்
.. நஞ்சினர் நெஞ்சிலா மேன்மை?
.. நலிந்தவர் உழைப்பினை நரியாய் உறிஞ்சிடும்
.. நயவஞ் சகர்க்கா ஆண்மை?
 
நிதிகொடுத் துயர்வை நேர்மை யிலாவழி
.. நேயமாய்ப் பெறுவது கொடுமை!
.. நீதி பொதுவென நினையா மனத்தினர்
.. நெருக்கமாய் நிற்பவர் அடிமை!
 
சதிசெயல் ஊழலில் சேர்த்திடும் பெரும்பணம்
.. சத்தமற் றிருக்க வோ நாடு?
.. சந்ததி வாழ்ந்திடச் சொந்தநா டேய்த்திடும்
.. சழக்கரால் நேர்ந்திடும் கேடு!

No comments:

Post a Comment