Wednesday, August 8, 2012

வாசிப்பு

வாசிப்பு
 
செலவழித்துத் தேடுபொருள் தாரா இன்பம்
.. சேர்க்கின்ற அறிவமுதின் திரட்டாய் உன்னுள்
பல அழியாப் பொருள்களுடன் பண்பை யூட்டிப்
.. பக்கத்தில் துணையிருந்து தக்க நேரம்
நலம்விளைக்கும் வளநிதியே! உளம்விரும்பும்
.. நன்மைதரும் அறிவுநூலே! மனமே மாறிச்
சிலபோதே உனைத்தீண்டா திருந்தாலும் நீ
.. சினவாமல் என்சிந்தை உறவா வாயே!
 
தாள்மீது விழிபாய்ச்சித் தகவல் சேர்த்துத்
.. தரமாக எழுதிடவும் மேடை யேறி
நாளெல்லாம் பேசிடவும் நற்கருத்தால்
.. நாடுபுகழ் நல்லறிஞனாக என்னைத்
தோள்சுமக்கப் பொன்னாடை பூவா ரத்தால்
.. துவளாமல் வாழ்த்தொலிகள் முழங்கக் கேட்கும்
ஆளாக்கி வைத்துமகிழ் வூட்டும் நூலே!
.. அறிவாழி, அறவாழி, என்வாழ்வேநீ!
 
கன்னிமரா நூலகத்தில் அறிஞர் அண்ணா
.. கைப்படாத நூலொன்றும் இல்லை என்பார்!
சொன்னயமும் பொருள்நயமும் சொட்டும் வண்ணம்
.. சொக்கவைக்கும் உவமைகளை எழுத்தில் பேச்சில்
பன்மணிசேர் மாலையாக அள்ளி வீசிப்
.. பாசநேரம் பரிமளிக்க அறிவோ டாற்றல்
மின்னலதன் கீற்றாய்ப்பொன் ஒளியைப் பாய்ச்சும்
.. மேனிலையுண் டாக்குபவை நூல்கள் தாமே!
 
பிணியுற்றுப் படுக்கையிலே இருந்த போதும்
.. பெருமிதமாய் தம்கையில் படித்த நூலைப்
பணிவோடு மருத்துவர்முன் நீட்டிக் காட்டிப்
.. படித்திடுவேன் இருநாளில் முற்றும் பின்னர்
துணிந்திடுவேன் அறுவைக்கே என்றார் அண்ணா!
.. தூயவர்க்கு நூற்படிப்பில் ஆர்வம் என்னே!
அணிமணிகள் அலங்காரம் சிறப்பே அல்ல!
.. அறிவுடையோர்க் கழகென்றும் நூல்வா சிப்பே!

No comments:

Post a Comment