Saturday, August 25, 2012

விடியல்

விடியல்
 
நல்லவர்க்கும் அல்லவர்க்கும் விடியும் போழ்து
நாள்கணக்கில் திங்களென ஆண்டாய் ஓடும்
செயல்முறையில் செயல்திறனின் மாந்தருக்குச்
சிறப்பென்றும் இழிவென்றும் பெயர் கொடுக்கும்!
வல்லவர்கள் வாழ்முறையால் வரலாறாகி
வருவோர்க்குச் சான்றாக நிற்பார் என்றும்
பொல்லாங்கில் புகழ்பூக்க அன்றன்றைக்குப்
புதுவிடியல் எழிற்பொழிலில் திகழும் பூமி!
சென்ற இருள் குவியவரும் முன்னே நேரச்
செலவழிப்பில் இயன்றவரை நலங்கள் செய்யின்
நின்றுவளர் பயன்பாட்டில் நிரம்பும் நெஞ்சம்
நிமிடங்கள் அத்துணையும் வைரம் பொன்னாம்
தின்றுவளர்ந்திருப்பதற்கா உயிர்சுமப்போம்?
திட்டமிடத் தானுடலில் திடமாய் நெஞ்சம்!
நன்றியினை எதிர்பார்த்தா வானம் பூமி
நலம் கொழிக்க உலவிடுமே புவியும் காற்றும்!
கதிர் இருளைக் கொன்றவெற்றிப் படையலாகக்
காண்கின்றோம் விடியலெனும் வெளிச்சப் பாய்ச்சல்
புதிர் எங்கோ போய் ஒளிய இருளும் அந்திப்
போதினிலே மீண்டிங்கே பொருள் மறைக்கும்
நிதம் இந்தப் போராட்டம் இயற்கை காட்டும்
நெஞ்சிருளை அகற்றிடவே ஒளியைக் கூட்டும்!
விதம்பலவாய் இருந்தாலும் நீதி நேர்மை
விதிமுறைகள் மீறுமெனில் விபத்து தானே!

No comments:

Post a Comment