Wednesday, August 22, 2012

வெற்றி எல்லை!

வெற்றி எல்லை!
 
பிறப்பிடத்தை வைத்துப்பேர் வருவதில்லை!
.. பெரும்பண்பே உயரிடத்தில் சேர்த்து வைக்கும்!
சிறப்பொருவர் விலைகொடுத்துப் பெறுவ தொன்றாய்ச்
.. சேர்த்திருக்கும் செல்வம்பேர் சீரழிக்கும்!
பறக்கின்ற பழங்கந்தல் கலச உச்சிப்
.. பற்றிக்கொண் டுயரத்தில் படபடக்கும்!
துறவிக்குத் துயில்கொள்ளத் துணையைத் தேடும்
.. துணிவென்றால் அவர்மடந்தான் தூய்மையாமோ?
 
தோகைமயில் ஆடுவதில் அழகு தோன்றும்
.. தோல்சுருக்கக் கிழவிநடம் துன்பம் சேர்க்கும்
வாகையினைச் சூடிவந்தோர் பணிவு நன்றாம்!
.. வாலிபத்தில் முடிநரைத்தல் வனப்பாகாதே!
ஈகையினால் வறியவனாய் ஈதல் துன்பம்
.. இணைந்தவரின் குணமறிந்தோர் இயக்கும் இன்பம்
போகுமிடம் தெரியாத புறப்பா டென்றால்
.. போயழுதால் வீணாண பொழுதா மீளும்?
 
எச்சரிக்கை விழிப்பிருந்தும் ஏமாற்றம்தான்
.. எப்படியோ வந்தணைத்தோர் இழப்பில் தள்ள
அச்சத்தில் அதன்விதியை நம்பிக் கொள்வான்
.. ஆனைக்கும் அடிசறுக்கும் எனத்தெ ளிந்தால்
உச்சியிலே இடிவிழுமென் றெண்ணிக் கைகள்
.. உயர்த்தியவாறொருநாளும் வெளியே செல்லான்!
துச்சமெனத் துன்பத்தைத் துப்பிச் செல்ல
.. துணித்தவரே துயர்கொள்வார் தொடுவார் வெற்றி!

No comments:

Post a Comment