Monday, August 13, 2012

குளத்து நீரில்...

குளத்து நீரில்...
 
தண்ணீரை எடுக்கப் பெண் ஒருத்தி வந்தாள்
.. தரைவளர்ந்த தென்னைமரம் குளத்து நீராம்
கண்ணாடி தன்னில்தன் குலையைக் காட்டக்
.. கண்டதும் தன்முந்தானை போர்த்திக் கொண்டாள்
எண்ணத்தில் சிலிர்ப்பேற நிமிர்ந்தாள் பின்னே
.. இளங்காளை சிரிப்போடு நின்றி ருந்தான்
கண்மூடிக் குடந்தன்னைக் கவிழ்த்தாள் நீரில்
.. கலங்கிய நீரிலவன் அசைந்தான் ஆடி!
 
இடுப்பணிந்த ஆடையினை மடித்துக் கட்டி
.. இருந்ததனால் மறையாத கால்ந டுங்கத்
திடுக்கிட்டாள் பின்னவனின் துடுக்குப் பேச்சு!
.. தேங்காய் நான்பறிக்க வந்தேன் என்றான்!
வெடுக்கென்று சிரிப்புவர அடக்கப் பார்த்தாள்
.. விழுந்துவிடும் முத்துமெனக் கேதான் என்றான்
அடுத்தகணம் பூத்தமுகம் உயர்த்தி நோக்க
.. அம்புவிழி அவனிதயம் துளைத்த தம்மா!
 
நீர்நிறைந்த குடந்தன்னை இடையில் வைத்து
.. நீந்திசெலும் அன்னமவள் பின்னே சென்றான்
கார்குழலில் தாமரையைச் செருகி விட்டான்
.. கனமான குடமிடைக்கு வலிக்கும் என்றான்
பார்வையவள் திருப்பாமல் தலையில் வைத்த
.. பாரம்பூ தானென்று தொட்டால் பின்னே
போராடும் நெஞ்சுக்குப் பொறுமை ஏற்றிப்
.. "போய்வாநீ! ஊர்பார பொழுதில்" என்றான்
 
நெஞ்செடுத்து போனவள்பின் நின்றான் மூச்சும்
.. நின்றுவிட்ட தோவென்று தொட்டான் மார்பை
கொஞ்சிடவா கொஞ்சிடவா வந்தான் அங்கே
.. குறிப்பறிந்து நடப்பதற்கு நேரம் நேரும்
வஞ்சியவள் வஞ்சனையே இல்லா நெஞ்சாள்
.. வாடியபூ முகம்சுருக்கித் திரும்பிப் பார்த்தாள்
துஞ்சிவிடும் ஊர்நேரம் வாய்க்கும் என்று
.. தூக்கியகை அசைத்தபின்னே நடந்தாள் முன்னே!
 
மாலையிருள் புணரவரும் போதை நோக்கி
.. மனம்விரைய அத்தினமோ மெதுவாய்ச் செல்ல
சோலையென்று சொலக்கூடா தோப்பின் பக்கம்
.. சுற்றுமுற்றும் பார்த்தபடி தனியே சென்று
மூலையிலோர் பெருமூங்கிற் புதரின் பக்கம்
.. மூளையினக் குழப்பியவா றிருந்த நேரம்
சீலையொலி எழுப்பாத படி நடந்து
.. சேர்ந்தாளைச் சேர்த்தணைத்தான்! இல்லை பேச்சு!

No comments:

Post a Comment