Wednesday, August 1, 2012

சிறுமையும் பெருமையும்

சிறுமையும் பெருமையும்
 
முத்திரையால் மதிப்புயர்ந்த ஐந்து ரூபாய்
.. முழுரூபாய் அரைரூபாய் பெரிதானாலும்
அத்தனையும் தனக்கடக்கம் எனச் சிரிக்கும்!
.. அழகான உடலமைப்புக் குள்ளே மூளை
சொத்தாக விளங்குவது தோற்றம் கொண்டா?
.. சுன்னத்தை அழகாகச் சுழித்திருந்தும்
பத்தென்ப(து) ஒன்றுமுழு எண்ணால் தானே!
.. பதவிக்குப் பெருமைமதி வெளிச்சம் தானே?
 
கத்துவதை உச்சயிசைப் பாட்டென் போரைக்
.. கலைஞானம் உள்ளவராய்க் கணித்தல் குற்றம்!
மெத்தசுகம் வேண்டுமெனில் உழைப்பை நாட
.. மேனிக்குச் சுளுகென்போன் மேன்மை யோனா?
சுத்தியலைச் செய் இரும்பு வலிமை தந்தால்
.. தூக்கியதைப் பயன்படுத்த மரம்தான் காம்பு!
சத்தமின்றி ஓடுகின்ற காலம் காட்டும்
.. சாதனைத்தில் மணிமுள்ளே குட்டை தானே!
 
உருவுகண்டே எள்ளாமை வேண்டும் என்பார்
.. உண்மைக்கு விசுவரூபம் தேவை யில்லை!
இரும்பென்றால் துருப்பிடிக்கும் என்று தானே
.. எடுத்துக்கூர் தீட்டிடுவார் பயன்படுத்த!
அரும்சுவையாம் உணவுவகை என்றாலும் நம்
.. அளவுக்கு மீறினது வழி திரும்பும்!
பெருமைக்குத் தோற்றந்தான் ஏதென் பாரின்
.. பெருமூளை அடக்கத்தைக் கருதல் நன்றே!

No comments:

Post a Comment