Friday, August 10, 2012

அவலக் கூத்து

அவலக் கூத்து
 
புதுக்கவிதை எனச்சொல்லி யாப்பைத் தள்ளும்
.. புன்செயலில் நமையெல்லாம் விருத்தம் என்னும்
மதுவினிலே மனமொன்றி மயங்க வைத்த
.. மாக்கவிஞன் கம்பனுக்கா பெருமை சேர்ப்பார்?
எதுவொன்றும் அளவுடனே அமைந்தால் தானே
.. இனிதாகும்; ஒலிஒளிக்கும் அளவுண் டன்றோ?
முதுமைதனில் இளவயதில் வளர்ச்சிக் கோலம்
.. முறைதவறல் முன்னேற்றம் எனச்சொல் வோமா?
 
உண்பதிலும் உடுப்பதிலும் ஒழுங்கை நாடும்
.. உணர்வுடையோர் உள ஒழுங்கைச் சிதைக்க லாமா?
கண்பதிவில் கவர்ச்சியெனல் அறிவின் மாட்சி
.. காட்டுதலில் நேர்மையுடன் கணித்த லாமே!
நண்பகலில் கோடையிலே நடக்கும் போழ்தில்
.. நடுங்குடுடல் பிணியிணைப்பைப் பேசும் தானே!
புண்படவே ஏசிடுவோர் நாவும் நாளும்
.. புன்மையுற நேர்ந்திடுதல் விந்தை யாமோ?
 
பகற்கனவை நனவென்பார் பலித்தல் கூடும்
.. பாடுபடா துண்ணுமுடல் ஏய்க்க ஓடும்
நகமழுக்கில் தோயாமல் நலங்கள் நாடும்
.. நஞ்சனையார் வஞ்சனையை யிகழும் ஏடும்!
சுகதுக்கம் பொதுவென்றால் உழைப்போர் மட்டும்
.. சோர்வினிலே கிடந்தழிதல் யாரின் சூச்சி?
தகவுடையார் மிகவுடைய தமிழ்நா டென்பார்
.. தக்கவழி காட்டியென யாரைச் சொல்ல?

No comments:

Post a Comment