Sunday, August 12, 2012

நிரம்பிய ஏரி நிரப்பிய மகிழ்ச்சி

நிரம்பிய ஏரி நிரப்பிய மகிழ்ச்சி
 
சிக்கராய புரத்துமலை மேலே ஏறிச்
.. செம்பரம்பாக் கத்தேரிக் கலங்கல் கண்டு
மிக்கமகிழ் வுற்றநாளை நினைத்தா லின்பம்!
.. மேற்கினிலே சூரியன்செங் கருமை மேகம்
பக்கத்தே யிருந்தொளியைப் பாய்ச்சி ஏரிப்
.. பரப்பின்மேல் பொன்வண்ணம் பூசிக் கொண்டு
தக்க இடம் எனநினைத்தே தண்ணீர்க் குள்ளே
.. தாவாமல் மிகமெதுவாய் அமிழ்ந்த காட்சி!
 
குன்றடுத்துத் தெரிகின்ற பெரிய ஊராம்
.. குன்றத்தூர் சேக்கிழாரின் பிறந்த ஊராம்
சென்றவ்வூர்த் தெருக்களிலே நடந்து நானும்
.. சிந்தமகிழ் வுற்றநாளை நினைக்கும் நெஞ்சு!
பின்புறத்தில் கீழ்த்திசையில் தெரியும் சிற்றூர்
.. பெருமைமிகு கோவூரின் பசுமைத் தோற்றம்
தென்புறத்தில் மலைமேலே கோயில் நன்று
.. தெரிகிறதே அதைத்திருநீர் மலை என்பார்கள்!
 
சுற்றிலும் என்கண்களுக்கு வயல்கள் தோப்பு
.. சூளைகளின் புகையிடையே மலையம்பாக்கம்
பற்றோடு மொழிவளர்த்தோர் தம்மூர்ப் பேரைப்
.. பைந்தமிழில் வழங்கியதை மகிழ்வேன் எண்ணி
சற்றேதான் தொலைவில்பூ விருந்த வல்லி
.. சார்ந்துள்ள ஊரேசெங் கழுநீர்க் குப்பம்
கற்றவரும் சான்றோரும் வாழ்ந்த ஊர்கள்
.. காற்றுவந்தென் உடல்தழுவும் மகிழ்ச்சி என்றும்!

No comments:

Post a Comment