Monday, August 20, 2012

சமத்துவம் செழிக்க...

சமத்துவம் செழிக்க...
 
ஒதுங்காமல் ஒதுக்காமல் ஒன்று சேரும்
.. உணர்வாலே உருவாகும் சமத்து வந்தான்!
பதுங்கலின்றிப் பாய்தலின்றிப் பயன்கொடுக்கும்
.. பணிசெய்தால் வரும்பலன்கள் மக்கட் கானால்
பொதுவான் நண்மைசமத் துவமாய்ப் பூக்கும்!
.. புவிஉயிர்கள் ஒன்றையொன்று சார்ந்தே வாழும்
எதுவும்தான் பெரிதென்றும் என்னால் ஆகும்
.. எல்லாமும் எனும் அகந்தை இழிவில் வீழ்த்தும்!
 
திறமையெனல் அவரவர்க்கு வெவ்வேறாகும்!
.. தெரிந்துகொள்ளும் பெரியமனம் போற்றும் வாழ்த்து!
பெருங்குணத்தால் பிறக்குதவப் பெருமை சேரும்
.. பெறுகிறவர் துயர்நீங்கப் பார்த்தல் இன்பம்!
வறுமைஎன்ப துள்ளத்தில் நினைப்பில் வேண்டாம்!
.. வாழவைத்து வாழ்பவரே வள்ளம் என்போர்
உரமுடலில் உள்ளத்தில் உயர்ந்திருந்தால்
.. ஓருயிர்க்கும் கேடுசெய்யார் மனித தெய்வம்!
 
தாழ்வுமனம் பொறாமையுடன் எரிச்சல் கொள்ளும்!
.. தன்னைப்போல் பிறர்வாழ நினைப்பான் மேலோன்
சூழ்ந்துவரும் இன்பதுன்பம் எதுவென்றாலும்
.. சொல்செயலில் தூய்மையுள்ளோன் எதிலும் எங்கும்
பாழ்நிலையைக் கண்டவுடன் பதைத்தொழிப்பான்
.. பண்பாட்டால் சமத்துவமாம் பயிர்செழிக்கும்!
ஊழ்வினையென் றேசாமல் உதவி வாழ்ந்தால்
.. உறவாகும் சமத்துவத்தேர் ஓடும் நன்றே!

No comments:

Post a Comment