Friday, August 24, 2012

விரும்பினால்

விரும்பினால்
 
விருப்பத்தை அளந்துரைக்கக் கருவி இல்லை
.. வெறுப்புணர்வை உறுப்பியக்கம் வெளிப்படுத்தும்!
இருப்புவைத்துச் செலவழிக்கப் பணமா அன்பு?
.. இல்லையென்ப தியலாமை காட்டும் போக்கு!
பொறுப்புள்ளோர் எவ்வுயிர்க்கும் அளவில் அன்பு
.. பொங்கிடவே விருப்பமுற்றால் எங்கும் நன்மை!
குறிப்புணரும் நல்லவர்கள் துலாக்கோல் போலக்
.. குறைநிறையை மதிப்பிடவே விரும்புவார்கள்!
 
விருப்பம்போல் பதவித்தேர் ஓட்டம் எங்கும்
.. விருப்பம்போல் வலுத்தவரின் ஆட்டம் நன்றா?
தரித்திரர்கள் விருப்பமெல்லாம் பசிக்குத் தீனி!
.. தன்மானம் விரும்பிடுவோர் தரத்தில் தாழார்!
விரும்பியது வெற்றியென்றால் போதை ஏறும்!
.. விரைகின்ற காலத்தை விரய மாக்கும்!
விருப்பம் போல் சாய்வதற்கு நேர்மை நெஞ்சம்
.. விரும்பாது நடுநிலையே நல்லோர் நாட்டம்!
 
கோடாமை எனும்கொள்கை கொண்டோர் வாழ்வில்
.. கொடுமைகளே சூழ்ந்திடினும் காற்றின் போக்கில்
ஆடாது கற்றூணாய் நிலைத்தே நிற்பார்
.. அப்பாவி என்றவரை இகழ்வார் பொல்லார்!
கூடாத ஆசைகளைக் குவித்துக் கொண்டு
.. கூன்மனத்தார் உடல்நிமிர்த்தி நிற்கும் போதும்
வாடாத புகழவர்க்கு வாய்த்திடாது!
.. வரலாற்றுப் பொன்னேடும் விரும்பிடாதே!
 
இருக்கின்ற குடும்பத்தில் அவரவர்க்கும்
.. எழுகின்ற விருப்பம் வெவ்வேறே என்றால்
சுரக்கின்ற பாசந்தான் பொறுப்பாய் எந்த
.. சூழ்நிலைக்கும் உறவுகளை இறுக்கி வைக்கும்
பெருத்துள்ளோர் வசதியெல்லாம் இல்லார் தம்மைப்
.. பேணுதற்கே எனவிரும்பி வாழ்தல் பேறே!
விருப்பம்போல் நடந்துபிறர் நலத்தைத் தீய்த்து
.. வேரறுக்க விரும்புவது கொடுமை தானே!

No comments:

Post a Comment