Thursday, August 16, 2012

உலக அமைதி

உலக அமைதி
 
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே
கலகம் அமைதியைக் கலைக்கும் குலைக்கும்
நிலவிடும் அன்பால் நீதியும் நியாயமும்
நிலைபெறும் என்பது நிச்சய உண்மை!
ஆக்குதல் அறிவின் ஆண்மைஎன் றானால்
போக்குதல் என்னும் புன்மையே போய்விடும்!
நல்லவர் வாழ்க்கையை வல்லவர் மாய்த்திடும்
தீத்திறம் ஒழிந்திடில் வாய்ப்பது நன்மையே!
செல்வமும் சிறப்பும் எல்லோர்க் கும்பொது
வல்லமை என்றால் வளர்ச்சியில் வேண்டும்
கூட்டிடும் செயல்களைக் காட்டலே ஆற்றல்
வையமோர் உடலெனில் வாழ்பல நாடுகள்
நாடி நரம்புகள் தசை எலும்பாகும்!
குருதியின் ஓட்டமே உறுப்புகள் இயக்கம்
ஒருநாட் டுதவியைப் பலநாடும் பெற
ஒருவன் ஆட்சியில் திகழுமே அமைதி
அதனதன் உயர்வை அனைவரும் மதித்தே
உதவவும் பெறவுமாய்ப் பொதுமை வளர்ப்போம்!
நிறமினம் என்னும் நிலைமைகள் தாண்டிப்
பரவிட வேண்டும் பண்புயர் பரப்பு!
சுட்டு விரலில் சுளுக்கென் றாலும்
சுகக்கே டென்றே அகம்துயர் உறுமே!
வையம் வாழும் மானிட சாதியில்
வாழ்வும் தாழ்வும் பொதுவென்றானால்
ஐயம் இன்றி அமைதியின் ஆட்சியில்
புவனம் தழுவப் பொங்குமே இன்பம்!
எம்மதம் சாரினும் நன்மதி விழைவெனில்
நிம்மதி வாழ்வினில் நிலவிடும் அமைதியே!
அழிக்கும் அலைகளை ஆக்கும் ஆற்றலாய்ச்
செழிப்புறச் செய்திடில் தழைக்கும் அமைதியே
வாழ்க மானுடம்! வாழ்க மானுடம்!

No comments:

Post a Comment