Tuesday, August 7, 2012

நூல்கள்

நூல்கள்
 
கைப்பிடித்து நடக்கின்ற உறவைப் போலக்
.. கட்டிலிலே திறந்தபடி பக்கம் காணப்
பைக்குள்ளே பத்திரமாய் இருக்கும் சொத்தாய்ப்
.. பலவின்பப் பொருளடக்கி அமைதி யாக
வைப்புநிதி எனமதிக்கும் மாண்பை ஒத்து
.. வைத்திருக்கப் பிறர்போற்றும் பெருமை யோடு
தைத்திடவே அறிவுறுத்தும் சான்றோர் ஞானத்
.. தடங்களைநாம் தொடர்ந்திடவே துணையாம் நூலகள்!
 
படித்தறிந்து பண்புகளை வளர்த்துக் கொள்ளும்
.. பயிற்சியினால் பார்போற்றும் பாங்கில் வாழ
முடியுமென்னும் சான்றுகளாய் முன்னோர் சென்ற
.. முறைமைகளின் தடம்பற்றிச் செல்ல வெல்ல
அடிப்படையாம் பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள
.. ஆர்வமுடன் பொருள்விளங்கப் படிக்கும் நூல்கள்
படிப்படியாய் எண்ணம்சொல் செயல்கள் யாவும்
.. பக்குவமாய்ப் பண்படுத்திச் சிறப்பைச் சேர்க்கும்!
 
பன்னாட்டு நல்லறிஞர் கருத்து வாழ்வு
.. பலதுறையில் வல்லுநர்கள் புலமை மேன்மை
பொன்மொழிகள் குறிக்கோள்கள் ஆய்வு நோக்கு
.. புதிர்களுக்குப் பொருத்தமுற விடைகள் வாழ்வின்
இன்பங்கள் இன்னல்கள் தாக்கம் நீக்கம்
.. என்றெங்கே என்னென்ன மாற்றம் சீற்றம்
வென்றபினும் நொந்தழியும் சிந்தை விந்தை
.. விதம்பலவாம் நிதம்படிக்க உதவும் நூல்கள்!

Monday, August 6, 2012

மாறா மதிப்பீடு

மாறா மதிப்பீடு
 
படைப்பவன் தினமும் படிப்பவனானால்
.. பதிந்திடும் பண்புகள் பலவும்!
.. பலர்க்கிது தெரிந்தும் பதித்திட மனத்தில்
.. பற்றிட மறுப்பது நலமோ?
 
உடைபடும் கிளையும் உடனடி துளிர்த்தே
.. உதவிடும் கருத்தினில் நிலவும்!
.. உயர்த்திடும் உண்மை உறுதியில் நன்மை
.. உண்டெனக் கொண்டிடல் பலமே!
 
கொடுத்திடும் குணத்தைக் கெடுப்பவன் அடையும்
.. குதூகலம் வஞ்சகம் மடமை!
.. குறும்பினை விரும்பிக் குதர்க்கமாய் உரையில்
.. குறுக்கிடல் இழிவெனப் படுமே!
 
விடுத்தவர் மறைய அடுத்தவன் சதியில்
.. விபத்தெனச் சிக்குதல் கொடுமை!
.. விலைகொடுத் துயர்வை விரும்பியே பெற்று
.. வீரனாய் நடிப்பதும் கெடுமே!
 
விதிமுறை மீறிடும் சதிசெயல் யாவையும்
.. விளம்பர வெளிச்சமா மறைக்கும்?
.. வேற்றுமை வளர்ப்பவர் நாட்டிலே உயர்ந்திடும்
.. விந்தையா தீமைகள் குறைக்கும்?
 
நதியினில் பெருகிடும் நீரினைப் பதுக்கிடும்
.. நஞ்சினர் நெஞ்சிலா மேன்மை?
.. நலிந்தவர் உழைப்பினை நரியாய் உறிஞ்சிடும்
.. நயவஞ் சகர்க்கா ஆண்மை?
 
நிதிகொடுத் துயர்வை நேர்மை யிலாவழி
.. நேயமாய்ப் பெறுவது கொடுமை!
.. நீதி பொதுவென நினையா மனத்தினர்
.. நெருக்கமாய் நிற்பவர் அடிமை!
 
சதிசெயல் ஊழலில் சேர்த்திடும் பெரும்பணம்
.. சத்தமற் றிருக்க வோ நாடு?
.. சந்ததி வாழ்ந்திடச் சொந்தநா டேய்த்திடும்
.. சழக்கரால் நேர்ந்திடும் கேடு!

Sunday, August 5, 2012

காலக் கணிப்பு

காலக் கணிப்பு
 
நில்லாமல் செல்லும் காலம் - நொடி
நிகழ்வுகளில் ஒன்றல் சீலம்
கல்லாமல் கடத்தும் காலம் - அது
கருத்துணர்வில் அழிக்கும் கோலம்
சொல்லாமல் விரையும் காலம் - அது
சுணக்கமிலாச் செயலின் மூலம்
வல்லாண்மை என்னும் காலம் - அதில்
வழுவாமை வெற்றி ஆளும்!
 
காலத்தின் நேர்மை கண்டு - நாம்
கடனாற்றின் நன்மை உண்டு
சீலத்தில் சிறந்தோர் என்போர்ச் - செயும்
சீர்பணி காலம் வெல்லும்
வேல்நுனிக் கூர்மை என்றால் - அதை
வீசுவோன் குறியே நன்றாம்
ஞாலத்தின் வரலாறெல்லாம் - பின்
நடப்போர்க்குப் பாடம் சொல்லும்
 
வளங்களை வகுக்கும் காலம் - ஒரு
வரையறை ஒழுங்கில் நீளும்
களங்களில் பொலிவை ஏற்றும் - அதன்
கதியிலே வளரும் மாற்றம்
காலத்தைச் சோதிடத்தால் - சிலர்
கணிப்பதுகண்கட்டு வித்தை
ஞாலத்தை வென்ற கவிஞன் - ச்சீ
சோதிடந் தனையிகழ் என்றான்!

Saturday, August 4, 2012

உண்மை வளர்க்கும் தண்மை

உண்மை வளர்க்கும் தண்மை

காணுதற்குக் கண்ணிருத்தல் போலே - இல்லறம்
பேணுதற்குப் பெண்ணிருப்ப தாலே
பூணுதற்கு நல்லொழுக்கம் அணியாம் - என்றும்
பொதுநலத்துக் குதவிடுவோன் மணியாம்
மனிதநேயம் தனைவளர்த்தல் சிறப்பு - அறத்தின்
மாண்புணர்ந்து பெருக்குதல் நல் பொறுப்பு
ஏந்துபுகழ் நிலைத்தலே நம் இருப்பு! - பிறரை
இழிவு செய்யும் மடமைக்கு நம் மறுப்பு!
கவிதை செய நல்லுணர்வே தூண்டும்! - புதுமை
கருத்துணர்த்தும் முறைமையிலே வேண்டும்!
செவிக்கு விருந் தளிப்பதிலே உண்மை - கூடச்
சிறப்பிருந்தால் சிந்தை சேரும் தண்மை.

Friday, August 3, 2012

கார்மேகக் காட்சி

கார்மேகக் காட்சி
 
உயர்வானில் கருமேகத் திரட்சி நெஞ்சில்
.. உருவாக்கும் சிந்தனைகள் வெவ்வேறாகும்
செயலேதோ நடக்கின்ற தோற்றம் காட்டும்
.. சிறுகுன்றின் மேல்மாட்டுமந்தை யென்பார்
புயலடித்ததால் பிய்ந்த குடிசைத் தோற்றம்
.. பூஞ்சோலைக் கிருள்மாலை போர்த்த காட்சி
துயர்தோய்ந்த குடும்பத்தார் உழைத்தலுத்துத்
.. துணியின்றித் துயில்காட்சி அவலம் என்பார்!
 
மார்பினிலே வேல்பாயப் போர்களத்தில்
.. மாண்டுகிடக்கும் மறவர் மனைவி மக்கள்
போர்வையெனக் கவிழ்ந்தபடி உடல்கள் மீது
.. பொங்கிவரும் கண்ணீரைச் சொரிந்தெழுந்தே
பாரந்தப் பகைவரது தலைகள் கொய்யப்
.. பாய்ந்துசெல என்மகனும் உள்ளான் என்றே
ஆர்த்தெழுந்து துடிக்கின்ற காட்சி என்றும்
.. அருங்கவிஞர் பாப்புனைய வைக்கத் தோன்றும்!
 
இரண்டுருளும் கருமேகம் பூமி நோக்கி
.. எப்போது பெருமழையாய்க் கொட்டும் என்று
மருண்டபடி மந்தைகளைக் கொட்டில் சேர்க்க
.. மனம்விரைய அதட்டியவா றோட்டிச் செல்லும்
சிறுவர்கள் பரபரப்பாய் இயங்குதற்குச்
.. சேர்ந்ததுவோ வான் திரைஅக் காட்சி என்றே
புருவத்தின் குடையாகக் கைவிரல்கள்
.. பொருந்திடவே வான்நோக்கி நின்றேன் நானே!

Thursday, August 2, 2012

அழகு

அழகு
 
விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போனதாய்ப்
பட்டுணர்ந் தோர்கள் பகரவே மாட்டார்
வீம்பென் றாலது விடமுடை பாம்பு!
விவேகம் சீறும் காளைக்குத் தாம்பு!
கண் அவனாகக் கருதிடும் மனைவியைப்
பெண் ஒளி விளக்காய்ப் பேணலே சிறப்பு!
மனநலம் மிக்க மனைவியைத் தக்க
மணம்கொளும் முன்னே மனமொன் றியவரின்
வினைகளே இன்ப துன்பத்தின் வித்தாம்!
கட்டிக் கொண்டவர் கட்டப் பட்டவர்
காதல் முன்னோ கடிமணம் பின்னோ
மோதல் இன்றேல் சாதனை தானே!
வேதனை யிருவர் விவேகமும் தடுக்கலாம்!
எதிர்ப் பார்ப்பென்பது இல்லறம் நல்லறம்
எனிலதில் ஏற்றத் தாழ்வுக் கிடமிலை!
வண்டியை யிழுப்பதில் சண்டித் தனமிலா
மாடுகள் தாமே வீடுபோய்ச் சேரும்!
மதித்தல் என்பது மனநலச் செயலே!
துதித்தல் என்பது பரிவின் விழைவே!
எதையும் சமமென ஏற்றிடும் பக்குவம்
சதையும் நகமுமாய்க் கதையை வளர்க்கும்
அதிகம் என்பது ஆபத்துக் கருகில்
அளவுடன் அமைவதே அழகாய் விளங்கும்
வண்ணப் பூச்சை வாரி யிரைத்த
சித்திரம் சிறப்பெனில் ஒத்துக் கொள்வோமா?
பெண்ணின் பெண்மையும் ஆணின் திண்மையும்
வண்ணம் அளவாய் வரைந்த நல்லோவியம்!
கண்ணில் வலம் இடம் காரணம் வைத்துப்
பார்வையின் சிறப்பைப் பகுத்தறி வாரோ?
வரம்பில் நிற்பதே வழங்கும் சிறப்பை!
இரும்போ துரும்போ எதற்கும் எல்லை
உண்டெனக் கொண்டிடில் உளநிறை வாமே!

Wednesday, August 1, 2012

சிறுமையும் பெருமையும்

சிறுமையும் பெருமையும்
 
முத்திரையால் மதிப்புயர்ந்த ஐந்து ரூபாய்
.. முழுரூபாய் அரைரூபாய் பெரிதானாலும்
அத்தனையும் தனக்கடக்கம் எனச் சிரிக்கும்!
.. அழகான உடலமைப்புக் குள்ளே மூளை
சொத்தாக விளங்குவது தோற்றம் கொண்டா?
.. சுன்னத்தை அழகாகச் சுழித்திருந்தும்
பத்தென்ப(து) ஒன்றுமுழு எண்ணால் தானே!
.. பதவிக்குப் பெருமைமதி வெளிச்சம் தானே?
 
கத்துவதை உச்சயிசைப் பாட்டென் போரைக்
.. கலைஞானம் உள்ளவராய்க் கணித்தல் குற்றம்!
மெத்தசுகம் வேண்டுமெனில் உழைப்பை நாட
.. மேனிக்குச் சுளுகென்போன் மேன்மை யோனா?
சுத்தியலைச் செய் இரும்பு வலிமை தந்தால்
.. தூக்கியதைப் பயன்படுத்த மரம்தான் காம்பு!
சத்தமின்றி ஓடுகின்ற காலம் காட்டும்
.. சாதனைத்தில் மணிமுள்ளே குட்டை தானே!
 
உருவுகண்டே எள்ளாமை வேண்டும் என்பார்
.. உண்மைக்கு விசுவரூபம் தேவை யில்லை!
இரும்பென்றால் துருப்பிடிக்கும் என்று தானே
.. எடுத்துக்கூர் தீட்டிடுவார் பயன்படுத்த!
அரும்சுவையாம் உணவுவகை என்றாலும் நம்
.. அளவுக்கு மீறினது வழி திரும்பும்!
பெருமைக்குத் தோற்றந்தான் ஏதென் பாரின்
.. பெருமூளை அடக்கத்தைக் கருதல் நன்றே!