Tuesday, August 21, 2012

வழிகள்

வழிகள்
 
பொய்யில் வாழ்வோர் புரட்டே விதிவழி
கையில் காசுளோர் களிக்கச் சதிவழி
மெய்ப்பா டென்பது உணர்வின் துணைவழி
மென்மையும் வன்மையும் எண்ணம் பெறும்வழி
நன்மையோ தீமையோ நடத்தை தரும்வழி
அன்பும் அறமுமே அமைதியாம் நல்வழி!
 
தையில் படைப்போம் தனிவழி என்கிறார்
தனிவழி எனினும் இனிப்பதே தகுவழி
இனிபின் தொடர்வோர் இன்புறப் புகும்வழி
மாற்றம் தூயதாய் மாறிடும் வழியிலே
ஏற்றம் இருப்பின் போற்றுவர் அனைவரும்!
ஆற்றும் செயல்களோ தூற்றும் நிலைபெறின்
மாற்றம் (ஏ)மாற்றமே எனப்புவி சாற்றுமே!
 
தனிவழி இரகசிய வழியெனில் இழிவது
தகுந்தவர் தொடர்ந்திட வரும்பயன் நேர்வழி
புதுவழி எதுவெனின் பொதுநலம் மிகும்வழி
புவிவிழி மகிழ்வுடன் போற்றிப் பாடிடும் வழி!
 
நல்வழி நாடிடும் நாள்களே சிறந்தவை
விதிப்பயன் வழியிலே வெல்லலாம் எனல்புகல்
விதிமுறைப் படிச்செயின் வெற்றியாவதை மொழி!
செல்வழி சிறந்திடச் சிந்தையில் இழிவொழி!
அல்வழி உந்திடும் ஆவலை நீகழி!
 
எவ்வழி நல்வழி அவ்வழி நம்வழி
செவ்விதின் உரைத்தவை செயல்திறன் நுழைவழி
ஊக்கம் பெருக்கலே ஆக்கம் பெறும்வழி
பூக்களின் வாழ்நாள் பொழுது சிறிதே!
ஆக்கும் மணமும் அழகும் பெரிதே!
நோக்க மிலாத வாழ்க்கை வெறிதே
ஏக்கமும் தாக்கமும் நீக்குதல் மதியே!

Monday, August 20, 2012

சமத்துவம் செழிக்க...

சமத்துவம் செழிக்க...
 
ஒதுங்காமல் ஒதுக்காமல் ஒன்று சேரும்
.. உணர்வாலே உருவாகும் சமத்து வந்தான்!
பதுங்கலின்றிப் பாய்தலின்றிப் பயன்கொடுக்கும்
.. பணிசெய்தால் வரும்பலன்கள் மக்கட் கானால்
பொதுவான் நண்மைசமத் துவமாய்ப் பூக்கும்!
.. புவிஉயிர்கள் ஒன்றையொன்று சார்ந்தே வாழும்
எதுவும்தான் பெரிதென்றும் என்னால் ஆகும்
.. எல்லாமும் எனும் அகந்தை இழிவில் வீழ்த்தும்!
 
திறமையெனல் அவரவர்க்கு வெவ்வேறாகும்!
.. தெரிந்துகொள்ளும் பெரியமனம் போற்றும் வாழ்த்து!
பெருங்குணத்தால் பிறக்குதவப் பெருமை சேரும்
.. பெறுகிறவர் துயர்நீங்கப் பார்த்தல் இன்பம்!
வறுமைஎன்ப துள்ளத்தில் நினைப்பில் வேண்டாம்!
.. வாழவைத்து வாழ்பவரே வள்ளம் என்போர்
உரமுடலில் உள்ளத்தில் உயர்ந்திருந்தால்
.. ஓருயிர்க்கும் கேடுசெய்யார் மனித தெய்வம்!
 
தாழ்வுமனம் பொறாமையுடன் எரிச்சல் கொள்ளும்!
.. தன்னைப்போல் பிறர்வாழ நினைப்பான் மேலோன்
சூழ்ந்துவரும் இன்பதுன்பம் எதுவென்றாலும்
.. சொல்செயலில் தூய்மையுள்ளோன் எதிலும் எங்கும்
பாழ்நிலையைக் கண்டவுடன் பதைத்தொழிப்பான்
.. பண்பாட்டால் சமத்துவமாம் பயிர்செழிக்கும்!
ஊழ்வினையென் றேசாமல் உதவி வாழ்ந்தால்
.. உறவாகும் சமத்துவத்தேர் ஓடும் நன்றே!

Sunday, August 19, 2012

பருவம்

பருவம்
 
இயல்பாகப் பழுக்காத ஒன்றை நாமும்
.. எழுமாசை மிகுதியினால் முன்ன தாகச்
செயற்கைவழி பலவந்தப் படுத்தும் போது
.. சேராது சாறோடு சத்தும் ஒத்து!
சுயமாக அறிகின்ற சொந்த புத்தி
.. சொலக் கேட்டுத் தெரிந்துகொள் வதினும் மேலாம்
முயலாமல் வெற்றியை நாம் எட்டல் இல்லை
.. முன்னேற்றம் இயல்பென்றால் மகிழ்ச்சி எல்லாம்!
 
முதிர்காலப் பக்குவத்தில் கதிர றுப்பார்
.. முற்றிவிடின் விழுந்துவிடும் உழைப்பே வீணாம்
எதிர்நோக்கும் காலத்தில் தெளிவு தேவை
.. என்றாலும் புதிர் இயறகை விதியும் மாறும்!
நதிநீர்போல் திரும்பாமல் ஓடும் காலம்
.. நழுவவிட்டால் அதுநம்மை நலிவில் தள்ளும்!
விதிமுறைகள் மீறாது விரையும் காலம்
.. வீண்செய்து பின் ஓலம் இட்டென் செய்ய?
 
காலம்பொன் போன்றதென்று மதிப்பாய்ச் சொல்வோம்
.. கையிலதைத் தக்கவைத்துக் கொள்ளல் ஆமா?
காலத்தைக் கருத்தாகக் கடைபிடித்துக்
.. கடனாற்றல் வாழ்க்கைக்கு வெற்றிச்  சேர்க்கும்
வேலாயு தம்கூர்மை சிதைந்திருக்க
.. விளங்காதவன் அதனை வீசல் வீணே
ஞாலத்தின் ஓட்டத்தில் பருவம் காணும்
.. நியதிக்கு மீறுவதும் நியாயம்தானா?

Saturday, August 18, 2012

சட்டமும் சத்தமும்

சட்டமும் சத்தமும்
 
சத்த மின்றியும் சட்டம் செயல்படும்
சத்தமாய்க் கத்துதல் சாதிக்கும் யுக்தியோ?
சட்டம் உடைந்த சுவர்படமாகச்
சத்தம் போடுவோர் சரியவும் கூடும்!
மௌனமும் உண்மையின் வலிமையை வாய்வழி
அமைதியாய் அழுத்தமாய் அம்பல மாக்குமே!
சிந்தனையின் திறன் செயலில் தெளிவாம்!
சத்த மிடுங்கால் சிந்தனை வருமோ?
ஓங்கிக் குத்தி ஒலியை எழுப்பினால்
தூங்குவோர் எழலாம்! துணிந்துபொய் சொல்லத்
துணைபலம் உள்ளோர் வழக்கு மன்றில்
நாணாப் பொய்யராய் நற்பெயர் பெறுவரோ?
சட்ட உண்மையைச் சாதிக்கவும் ஒலி
சத்தமாய் எழுப்பலாம் சிற்சில நேரம்!
சம்பா தனைக்காய்ச் சத்தம் போட்டு
நம்பவே நடிப்பது நாகரிகமா?
சக்தி யினாலும் சத்தம் போடுவான்!
சட்டம் மீறுதல் தண்டனைக் காட்படும்!
சத்தம் சீறலாய்ச் சரிவில் சாய்க்கும்
சட்டம் மதித்தல் சத்திய சாதனை
சத்தம் எழுப்பும் சந்தேகத்தையே!
சந்தேகம் நம் தேகத் தீமையே!
சத்தம் அறிவின் சத்துரு வாகும்!
சட்டம் அறிவு சார்ந்த ஆயுதம்!
சட்டம் பொதுவாய்ச் சமத்துவம் காக்கும்!
சத்தம் வேகமாய் அமைதியைப் போக்கும்!
சத்தம் எழுப்புதல் பலவீனம் தான்!
சத்தம் தடுத்திடச் சட்டமே உண்டு!

Friday, August 17, 2012

ஊருக்கு நல்லது

ஊருக்கு நல்லது
 
ஊருக்கு நல்லது சொல்வோன் - மன
உறுதியாய்ச் செயல்படும் உழைப்பினால் வெல்வான்!
பேருக்கும் புகழுக்கும் ஓடும் - இழி
பிறவியின் நெஞ்சமா பொதுநலம் நாடும்?
 
உழைப்பினால் பிழைப்பதே ஆண்மை - எனும்
உணர்வுகொண்டியங்குவோன் வாழ்க்கையே மேன்மை
விழைவுகள் ஒழுங்குறல் அடக்கம் - விதை
வீறுதான்! பாறையில் விழ எது முளைக்கும்?
 
யாருக்கும் பகை என நில்லான் - எனில்
யாவுமே சொந்தமாய் வளைப்பதில் வல்லான்!
வேருக்கு நீர்விடச் சொல்வான் - செடி
விடும் இலை காய்கனி தனக்காகக் கொள்வான்
 
உறவென நடிப்பது வஞ்சம் - பிறர்
உடைமையைக் கவர்வதில் துடித்திடும் நெஞ்சம்
மறந்திட நினைப்பது நன்றி - திரை
மறைவினில் வாழ்க்கையில் ஒழுக்கமே யின்றி
 
படிப்புநற் பண்புக்குத் தூரம் - எனப்
பார்க்கின்றோம் நடத்தையில் இது என்ன கோரம்?
நடிப்புக்குத் தானிங்கே ஆரம் - பொல்லா
நாநடை நளினம் நடத்திடும் சோரம்!
 
பகுத்தறிவு காட்டுவதே உண்மை - அந்தப்
பலத்தினால் பாதையை மாற்றலோ நுண்மை?
மிகுந்ததைப் பகுத்தீதல் இரக்கம் - வஞ்சம்
மெலிந்தோர யிகழவோ நெஞ்சினில் சுரக்கும்?
 

Thursday, August 16, 2012

உலக அமைதி

உலக அமைதி
 
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே
கலகம் அமைதியைக் கலைக்கும் குலைக்கும்
நிலவிடும் அன்பால் நீதியும் நியாயமும்
நிலைபெறும் என்பது நிச்சய உண்மை!
ஆக்குதல் அறிவின் ஆண்மைஎன் றானால்
போக்குதல் என்னும் புன்மையே போய்விடும்!
நல்லவர் வாழ்க்கையை வல்லவர் மாய்த்திடும்
தீத்திறம் ஒழிந்திடில் வாய்ப்பது நன்மையே!
செல்வமும் சிறப்பும் எல்லோர்க் கும்பொது
வல்லமை என்றால் வளர்ச்சியில் வேண்டும்
கூட்டிடும் செயல்களைக் காட்டலே ஆற்றல்
வையமோர் உடலெனில் வாழ்பல நாடுகள்
நாடி நரம்புகள் தசை எலும்பாகும்!
குருதியின் ஓட்டமே உறுப்புகள் இயக்கம்
ஒருநாட் டுதவியைப் பலநாடும் பெற
ஒருவன் ஆட்சியில் திகழுமே அமைதி
அதனதன் உயர்வை அனைவரும் மதித்தே
உதவவும் பெறவுமாய்ப் பொதுமை வளர்ப்போம்!
நிறமினம் என்னும் நிலைமைகள் தாண்டிப்
பரவிட வேண்டும் பண்புயர் பரப்பு!
சுட்டு விரலில் சுளுக்கென் றாலும்
சுகக்கே டென்றே அகம்துயர் உறுமே!
வையம் வாழும் மானிட சாதியில்
வாழ்வும் தாழ்வும் பொதுவென்றானால்
ஐயம் இன்றி அமைதியின் ஆட்சியில்
புவனம் தழுவப் பொங்குமே இன்பம்!
எம்மதம் சாரினும் நன்மதி விழைவெனில்
நிம்மதி வாழ்வினில் நிலவிடும் அமைதியே!
அழிக்கும் அலைகளை ஆக்கும் ஆற்றலாய்ச்
செழிப்புறச் செய்திடில் தழைக்கும் அமைதியே
வாழ்க மானுடம்! வாழ்க மானுடம்!

Wednesday, August 15, 2012

ஆசையும் அவசரமும்

ஆசையும் அவசரமும்
 
அவள்:
கதிரை அறுத்துச் சேர்த்துக்கட்டி
களத்துமேடு கோன்டு போயி
காவலுக்குப் போற மச்சான் காளிமுத்து - சூடா
கறியுஞ்சோறும் தின்னுட்டுப் போ மனசு ஒத்து
 
அவன்:
அப்பன் ஆத்தா அறியாமே
அக்கம் பக்கம் தெரியாமே
அவசரமா தூக்கி வந்த செல்லக்கண்ணு - தின்ன
ஆசையிருக்கு நேரமில்லே போடி பொண்ணு
 
அவள்:
தாலி கட்டப் போற ஆளு
தவிக்கணுமா இத்தனை நாளு
வேலி ஓரம் கொஞ்சம் குந்த லாகாதா - மனசு
வைச்சிப்புட்ட என் கவலை போகாதா?
 
அவன்:
கொஞ்சம் பேச நின்னுப் புட்டா
கொஞ்சிக் கெஞ்ச வருவே கிட்டே
கஞ்சிக் கில்லா பய வருவான் செல்லக்கண்ணு - இருட்டுக்
காலம் நெல்லைக் கசக்கிப் போவான் சொன்னேன் பொண்ணு
 
அவள்:
குளத்திலே நீ குளிச்சிருந்தே
குந்தியிருந்து நானும் பார்த்தேன்
கிளுகிளுப்பு கூடிப் போச்சு மச்சானே - எவன்
கிறுக்கு இந்தச் சிறுக்கிக்கின்னே வச்சானோ?
 
அவன்:
அத்தைமகன் தனக்குத் தான்னு
பித்தா ஒருத்தி காத்திருக்கா
சத்தியமா நீ தாண்டி எனக்குப் பத்தினி - எந்தச்
சந்தேகமும் வேணாம் இப்போ ஒத்து நீ
 
அவள்:
ஒத்திக்கத்தான் ஒளிஞ்சு வந்தேன்
எத்தனை நாள் காத்திருப்பேன்
செத்துப் போயிடுவேண்டா நானும் மச்சானே - வந்து
கொத்திப்போடா மொத்தம் உனக்கு நான் தானே
 
அவன்:
நெஞ்சா நினைவா நீ இருக்கே
நேரம் வரும்காத்திருக்கேன்
கொஞ்சம் கிளி அஞ்சிடாமே இருந்துக்கோ - நெல்லைக்
கொண்டு சேர்த்துக் காசு சேர்ப்பேன் பொறுத்துக்கோ
 
அவள்:
எந்த நிலமை எனக்குமிப்போ
வந்திருக்கு தெரிஞ்சுக்கோடா
சொந்த மாமன் புள்ளை அங்கே நிற்கிறான் - வந்துநீ
பந்தக்காலே சுருக்கா நட்டு வைக்கிறே