Tuesday, August 14, 2012

பொடியன் நானே!

பொடியன் நானே!
 
மாற்றாரை மதிக்கின்ற மாந்த நேயம்
.. மறுப்பினையும் நாகரிக மாக்கும் பேச்சு
வீற்றிருந்த பதவிக்கு மாண்பைச் சேர்க்கும்
.. வினைவலிமை மனம்காட்டும் தூய்மை வாய்மை
நேற்றிருந்த பெருமைகளை வெளிப்ப டுத்தும்
.. நினவாற்றலுடன் கவரும் கருத்து வீச்சு
தூற்றிடுவோ ருந்தொடர்ந்து கேட்கும் பேச்சின்
.. துணையிருந்த அண்ணாகைப் பொடியன் நானே!
 
எளியவரின் மனமேற்கப் புரியும் சொற்கள்
.. எள்ளிநகை யாடலிலும் துள்ளும் யின்பம்
புளியேப்பக் காரர்களின் புரட்டும் போக்கும்
.. புரியவைத்துத் தெளிவூட்டும் விரிந்த நோக்கு
துளியளவும் அகந்தைதனைக் கொள்ளா உள்ளம்
.. தொண்டரெலாம் அண்ணாவென் றழைக்கும் பாசம்
ஒளியேற்ற விரலிடுக்கில் அளவாய் நின்று
.. உறிஞ்சியபின் பொருள்பெருக்கும் பொடியன் நானே!
 
எழுத்தாலும் பேச்சாலும் எழுச்சி மூட்ட
.. எடுத்தபொடி அடுத்தபடி வேகம் கூட்டும்
அழுத்தமுடன் பெரியாரின் கொள்கைக் கொத்தே
.. ஆட்சியினை நடத்தியவர் மூக்குச் சொத்தாய்
நுழைந்தபெரும் பெருமைக்கே இருப்பானேன்நான்!
.. நுண்மதியின் சுறுசுறுப்பின் பொறுப்பும் ஆனேன்!
அழுக்கேற்றுவேன் எனினும் உடன்பிறப்பின்
.. அகந்தூய்மை செய்த அண்ணா பொடியன் நானே!

Monday, August 13, 2012

குளத்து நீரில்...

குளத்து நீரில்...
 
தண்ணீரை எடுக்கப் பெண் ஒருத்தி வந்தாள்
.. தரைவளர்ந்த தென்னைமரம் குளத்து நீராம்
கண்ணாடி தன்னில்தன் குலையைக் காட்டக்
.. கண்டதும் தன்முந்தானை போர்த்திக் கொண்டாள்
எண்ணத்தில் சிலிர்ப்பேற நிமிர்ந்தாள் பின்னே
.. இளங்காளை சிரிப்போடு நின்றி ருந்தான்
கண்மூடிக் குடந்தன்னைக் கவிழ்த்தாள் நீரில்
.. கலங்கிய நீரிலவன் அசைந்தான் ஆடி!
 
இடுப்பணிந்த ஆடையினை மடித்துக் கட்டி
.. இருந்ததனால் மறையாத கால்ந டுங்கத்
திடுக்கிட்டாள் பின்னவனின் துடுக்குப் பேச்சு!
.. தேங்காய் நான்பறிக்க வந்தேன் என்றான்!
வெடுக்கென்று சிரிப்புவர அடக்கப் பார்த்தாள்
.. விழுந்துவிடும் முத்துமெனக் கேதான் என்றான்
அடுத்தகணம் பூத்தமுகம் உயர்த்தி நோக்க
.. அம்புவிழி அவனிதயம் துளைத்த தம்மா!
 
நீர்நிறைந்த குடந்தன்னை இடையில் வைத்து
.. நீந்திசெலும் அன்னமவள் பின்னே சென்றான்
கார்குழலில் தாமரையைச் செருகி விட்டான்
.. கனமான குடமிடைக்கு வலிக்கும் என்றான்
பார்வையவள் திருப்பாமல் தலையில் வைத்த
.. பாரம்பூ தானென்று தொட்டால் பின்னே
போராடும் நெஞ்சுக்குப் பொறுமை ஏற்றிப்
.. "போய்வாநீ! ஊர்பார பொழுதில்" என்றான்
 
நெஞ்செடுத்து போனவள்பின் நின்றான் மூச்சும்
.. நின்றுவிட்ட தோவென்று தொட்டான் மார்பை
கொஞ்சிடவா கொஞ்சிடவா வந்தான் அங்கே
.. குறிப்பறிந்து நடப்பதற்கு நேரம் நேரும்
வஞ்சியவள் வஞ்சனையே இல்லா நெஞ்சாள்
.. வாடியபூ முகம்சுருக்கித் திரும்பிப் பார்த்தாள்
துஞ்சிவிடும் ஊர்நேரம் வாய்க்கும் என்று
.. தூக்கியகை அசைத்தபின்னே நடந்தாள் முன்னே!
 
மாலையிருள் புணரவரும் போதை நோக்கி
.. மனம்விரைய அத்தினமோ மெதுவாய்ச் செல்ல
சோலையென்று சொலக்கூடா தோப்பின் பக்கம்
.. சுற்றுமுற்றும் பார்த்தபடி தனியே சென்று
மூலையிலோர் பெருமூங்கிற் புதரின் பக்கம்
.. மூளையினக் குழப்பியவா றிருந்த நேரம்
சீலையொலி எழுப்பாத படி நடந்து
.. சேர்ந்தாளைச் சேர்த்தணைத்தான்! இல்லை பேச்சு!

Sunday, August 12, 2012

நிரம்பிய ஏரி நிரப்பிய மகிழ்ச்சி

நிரம்பிய ஏரி நிரப்பிய மகிழ்ச்சி
 
சிக்கராய புரத்துமலை மேலே ஏறிச்
.. செம்பரம்பாக் கத்தேரிக் கலங்கல் கண்டு
மிக்கமகிழ் வுற்றநாளை நினைத்தா லின்பம்!
.. மேற்கினிலே சூரியன்செங் கருமை மேகம்
பக்கத்தே யிருந்தொளியைப் பாய்ச்சி ஏரிப்
.. பரப்பின்மேல் பொன்வண்ணம் பூசிக் கொண்டு
தக்க இடம் எனநினைத்தே தண்ணீர்க் குள்ளே
.. தாவாமல் மிகமெதுவாய் அமிழ்ந்த காட்சி!
 
குன்றடுத்துத் தெரிகின்ற பெரிய ஊராம்
.. குன்றத்தூர் சேக்கிழாரின் பிறந்த ஊராம்
சென்றவ்வூர்த் தெருக்களிலே நடந்து நானும்
.. சிந்தமகிழ் வுற்றநாளை நினைக்கும் நெஞ்சு!
பின்புறத்தில் கீழ்த்திசையில் தெரியும் சிற்றூர்
.. பெருமைமிகு கோவூரின் பசுமைத் தோற்றம்
தென்புறத்தில் மலைமேலே கோயில் நன்று
.. தெரிகிறதே அதைத்திருநீர் மலை என்பார்கள்!
 
சுற்றிலும் என்கண்களுக்கு வயல்கள் தோப்பு
.. சூளைகளின் புகையிடையே மலையம்பாக்கம்
பற்றோடு மொழிவளர்த்தோர் தம்மூர்ப் பேரைப்
.. பைந்தமிழில் வழங்கியதை மகிழ்வேன் எண்ணி
சற்றேதான் தொலைவில்பூ விருந்த வல்லி
.. சார்ந்துள்ள ஊரேசெங் கழுநீர்க் குப்பம்
கற்றவரும் சான்றோரும் வாழ்ந்த ஊர்கள்
.. காற்றுவந்தென் உடல்தழுவும் மகிழ்ச்சி என்றும்!

Saturday, August 11, 2012

போலிகள்

போலிகள்
 
வரலாற்றைப் படைப்பவர்கள் வேண்டி யோரின்
.. வாழ்வை மட்டும் பதியாது மேன்மைப் பண்புக்(கு)
உரியவர்கள் அனைவரது சிறப்பும் கூறும்
.. உண்மையுள்ள உணர்வுடனே எழுத வேண்டும்
தரமான உருவாக்கம் என்றால் மாற்றார்
.. தகுதியையும் மறைக்காமல் குறிக்க வேண்டும்
நிரம்பியுள்ள பொருள்போலி எனத்தெரிந்தால்
.. நிறைமதியோர் குறைகளைய முன்னே நிற்க!
 
தன்னலத்துப் பேராசைப் பெருக்கம் ஓர்நாள்
.. தடம்மாறி தடுக்கிவிழத் தானே செய்யும்!
பொன்பொருளைத் தவறான வழியை நாடிப்
.. பொதிபொதியாய்ச் சேமித்து வைக்கத் தானே
பண்பாட்டுக் காரராக ஒழுக்கம் தன்னைப்
.. பேணாது தம்குடிக்கே இழிவைச் சேர்ப்பர்
முன்னிலையில் நல்லோர்கள் நகைத்தும் நாணா
.. முறைதவறிப் பெருங்குழியில் வீழ்ந்தே சாவார்!
 
போலிகளைப் போற்றிடுவோர் புனித வேடப்
.. பொருத்தத்தில் பொல்லாங்கை மறைக்கப் பார்ப்பர்
கோலெடுத்துக் கூத்தாட வைக்கக் காண்போம்
.. குறுமதியோர் செயலுக்குப் பேச்சுத் தாளம்
வாலசைந்தால் தலைக்குந்தான் அசைவுண் டாக்கும்
.. வழிதவறும் வளர்ச்சிக்குத் தான் தப் பாட்டம்
காலத்தின் ஓட்டத்தில் கயவர் நெஞ்சம்
.. காட்டுகிற கடும்வளர்ச்சிக் கொடுமை என்னே!

Friday, August 10, 2012

அவலக் கூத்து

அவலக் கூத்து
 
புதுக்கவிதை எனச்சொல்லி யாப்பைத் தள்ளும்
.. புன்செயலில் நமையெல்லாம் விருத்தம் என்னும்
மதுவினிலே மனமொன்றி மயங்க வைத்த
.. மாக்கவிஞன் கம்பனுக்கா பெருமை சேர்ப்பார்?
எதுவொன்றும் அளவுடனே அமைந்தால் தானே
.. இனிதாகும்; ஒலிஒளிக்கும் அளவுண் டன்றோ?
முதுமைதனில் இளவயதில் வளர்ச்சிக் கோலம்
.. முறைதவறல் முன்னேற்றம் எனச்சொல் வோமா?
 
உண்பதிலும் உடுப்பதிலும் ஒழுங்கை நாடும்
.. உணர்வுடையோர் உள ஒழுங்கைச் சிதைக்க லாமா?
கண்பதிவில் கவர்ச்சியெனல் அறிவின் மாட்சி
.. காட்டுதலில் நேர்மையுடன் கணித்த லாமே!
நண்பகலில் கோடையிலே நடக்கும் போழ்தில்
.. நடுங்குடுடல் பிணியிணைப்பைப் பேசும் தானே!
புண்படவே ஏசிடுவோர் நாவும் நாளும்
.. புன்மையுற நேர்ந்திடுதல் விந்தை யாமோ?
 
பகற்கனவை நனவென்பார் பலித்தல் கூடும்
.. பாடுபடா துண்ணுமுடல் ஏய்க்க ஓடும்
நகமழுக்கில் தோயாமல் நலங்கள் நாடும்
.. நஞ்சனையார் வஞ்சனையை யிகழும் ஏடும்!
சுகதுக்கம் பொதுவென்றால் உழைப்போர் மட்டும்
.. சோர்வினிலே கிடந்தழிதல் யாரின் சூச்சி?
தகவுடையார் மிகவுடைய தமிழ்நா டென்பார்
.. தக்கவழி காட்டியென யாரைச் சொல்ல?

Thursday, August 9, 2012

பயிற்சியும் பாராட்டும்

பயிற்சியும் பாராட்டும்
 
தடுக்கிவிழும் இடமெல்லாம் கவிஞர் கூட்டம்
.. தழைத்திருக்கும் எல்லாம் மூலிகைகள் தாமோ?
அடுக்கிவைத்தச் சொற்களெலாம் தேடிச் சேர்க்கும்
.. அரும்முயற்சி ஆரம்பம் வளர்ந்தால் நன்று
தொடுத்தகவி சிறப்பென்றே சொல்ல வைக்கத்
.. தொடர்பயிற்சி இயல்பாகித் தொடுமே வெற்றி!
மிடுக்குநடை வாய்க்கவரும் மொழியின் தேர்ச்சி
.. மெருகூட்டும் என்பதைத்தான் மறக்க லாமா?
 
நிலம்சேரும் மழைநீரால் பயிர்கள் வாழும்
.. நெடுவானைத் தொடுமரங்கள் பெயர்ந்தும் வீழும்
பலவானும் பால்குடித்துப் புரையால் சாவான்
.. படிக்கின்ற கருத்துள்ளப் பதிவாய் வாழச்
சிலவேனும் சொந்தமதி செடியின் பூவாய்ச்
.. சுகம்தரவே மணம்பரப்பும் விதமாய் வேண்டும்!
கலப்புமொழிக் கவிதையது புதிய போக்காய்க்
.. காட்டுதலில் முனைப்புறுவான் கற்றுக் குட்டி!
 
கலயத்தைக் காலியாக வைத்தி டாமல்
.. கருத்துகளால் நிரப்பிக்கற் பனையைச் சேர்த்து
நலமாகச் சமைப்பதுவே கலையாம் பாட்டாம்!
.. நாட்டவரும் கேட்டுப்பா ராட்டு வார்கள்!
குலம்பார்த்துப் பாராட்டிக் கொடுப்போர் கொண்ட
.. குணங்கேட்டைக் கொள்கைஎனல் கொடுங்கூற் றாகும்!
வலம்வருங்கால் ஒருகூட்டம் பின்னே செல்லும்
.. வரலாற்றை வற்புறுத்திப் படைத்தல் தீதே!

Wednesday, August 8, 2012

வாசிப்பு

வாசிப்பு
 
செலவழித்துத் தேடுபொருள் தாரா இன்பம்
.. சேர்க்கின்ற அறிவமுதின் திரட்டாய் உன்னுள்
பல அழியாப் பொருள்களுடன் பண்பை யூட்டிப்
.. பக்கத்தில் துணையிருந்து தக்க நேரம்
நலம்விளைக்கும் வளநிதியே! உளம்விரும்பும்
.. நன்மைதரும் அறிவுநூலே! மனமே மாறிச்
சிலபோதே உனைத்தீண்டா திருந்தாலும் நீ
.. சினவாமல் என்சிந்தை உறவா வாயே!
 
தாள்மீது விழிபாய்ச்சித் தகவல் சேர்த்துத்
.. தரமாக எழுதிடவும் மேடை யேறி
நாளெல்லாம் பேசிடவும் நற்கருத்தால்
.. நாடுபுகழ் நல்லறிஞனாக என்னைத்
தோள்சுமக்கப் பொன்னாடை பூவா ரத்தால்
.. துவளாமல் வாழ்த்தொலிகள் முழங்கக் கேட்கும்
ஆளாக்கி வைத்துமகிழ் வூட்டும் நூலே!
.. அறிவாழி, அறவாழி, என்வாழ்வேநீ!
 
கன்னிமரா நூலகத்தில் அறிஞர் அண்ணா
.. கைப்படாத நூலொன்றும் இல்லை என்பார்!
சொன்னயமும் பொருள்நயமும் சொட்டும் வண்ணம்
.. சொக்கவைக்கும் உவமைகளை எழுத்தில் பேச்சில்
பன்மணிசேர் மாலையாக அள்ளி வீசிப்
.. பாசநேரம் பரிமளிக்க அறிவோ டாற்றல்
மின்னலதன் கீற்றாய்ப்பொன் ஒளியைப் பாய்ச்சும்
.. மேனிலையுண் டாக்குபவை நூல்கள் தாமே!
 
பிணியுற்றுப் படுக்கையிலே இருந்த போதும்
.. பெருமிதமாய் தம்கையில் படித்த நூலைப்
பணிவோடு மருத்துவர்முன் நீட்டிக் காட்டிப்
.. படித்திடுவேன் இருநாளில் முற்றும் பின்னர்
துணிந்திடுவேன் அறுவைக்கே என்றார் அண்ணா!
.. தூயவர்க்கு நூற்படிப்பில் ஆர்வம் என்னே!
அணிமணிகள் அலங்காரம் சிறப்பே அல்ல!
.. அறிவுடையோர்க் கழகென்றும் நூல்வா சிப்பே!