Tuesday, November 13, 2012

பெருக்கம்

பெருக்கம்
 
பெருக்கத்தில் நல்லதற்கும் எல்லை வேண்டும்
.. பெய்தமழைப் பெருக்கத்தால் நாடே நாசம்
உருக்கத்தின் அளவுக்கும் வரம்பு தேவை
.. ஊன்கரையும் தன்மையுடன் உளம்சிரிக்கும்!
விருப்பத்தின் வெளிப்பாட்டைப் பேச்சில் மட்டும்
.. வெளிப்படுத்தி வெகுளியெனும் விருதை ஏற்பார்!
சுருக்கத்தின் அடக்கத்தில் சுரந்து வையச்
.. சொத்தாகும் புகழ்ப்பெருக்கம் குறளுக்குண்டு!
 
தசைப்பெருக்கம் விழிகளுக்கு வெறுப்பை நல்கும்
.. தனப்பெருக்கம் இயல்புக்கு மாறாய்ப் போகும்
விசைப்பெருக்கம் விபத்தினிலே வீழ்த்தி வைக்கும்
.. விளைவெதுவும் பெருகிவிட்டால் மலிவாய்ப் போகும்
இசைக்கருவி பெருக்குமொலி பாட்டின் மென்னி
.. இறுக்கிவிடும் ஒப்பனையும் மிகுதி யென்றால்
வசைபாட வாய்ப்பாகும் உச்சம் தாண்ட
.. வளர்விருப்பம் வரலாற்றில் வழுக்கிச் சாய்க்கும்!
 
பெருமிதத்தின் மறுபக்கம் அகந்தையாகப்
.. பின்னணியில் உந்துபடை முந்தும் அன்னார்
கருத்தினிலே கறையாயக் கறைதனக்காய்க்
.. கண்டறியா முறைதனிலே மறைந்திருக்கும்
குறுக்குதலும் எழிலென்று செடிவளர்ப்போர்
.. குள்ளமனம் கண்டுமனம் குமுறுவானேன்?
பொறுத்தலிலோ பொங்கலிலோ மானம் கெட்டுப்
.. போவதுண்டு! கொள்ளளவு மீறின் கொட்டும்!

No comments:

Post a Comment