Wednesday, November 14, 2012

வெளிச்சம் வெளியில் இல்லை

வெளிச்சம் வெளியில் இல்லை
 
இருள்மனத்தான் கண்களுக்கு வெளிச்சம் இல்லை
.. இரவுபகல் எப்போதும் இருட்டே எண்ணம்
அருள்நெஞ்சர் விழியற்றும் வெளிச்சம் காண்பர்
.. அன்பகத்துள் அகிலமே பேரொளிவெள்ளந்தானே?
மருட்டுவதும் மிரட்டுவதும் இருட்டு நெஞ்சே
.. மாண்புறுத்தும் ஒளி உண்மை உள்ளத் தூற்று!
திருடுதலில் தேர்ந்தவர்க்கு வெளியிருட்டே
.. தேவைப்படும் அவர் திறமை வெளிச்சம் காட்டும்
 
வெளிச்சத்தில் இருந்தாலும் உயிர்ச்சத்தென்றும்
.. விடமென்றும் வேறுபாடு சிலர்க்குத் தோன்றா!
ஒளியென்பதறிவுக்குள் உறையுமானால்
.. உண்மையினை அறிந்துணர விழிகள் வேண்டா
களிப்பூட்டும் வெளிச்சத்தை கறைப்படுத்தும்
.. கயவர்தம் காரியங்கள் இருட்டில் என் ஆம்?
ஒளிர்கின்ற கதிருக்குள் ஒளிந்து கொள்ளும்
.. உள்ளங்கள் காரிருளில் ஊரேய்க்காவா!
 
பழக்கமின்றேல் பாசங்கைப் பகலில் கூடப்
.. பார்த்தறிதல் கூர்த்தமதி யோர்க்கும் கட்டம்
அழுதே சாதிக்கும் மன அழுக்கின் சூழ்ச்சி
.. அயர்ந்துறங்கும் நேரத்துக் கனவும் ஏய்க்கும்
தொழத்தக்கோர் கண்மூடித் தூங்கும் போதும்
.. துலங்குமக ஒளிச்சுடரை முகமே காட்டும்
தழலாகத் தகிக்கின்ற நிலைமை சேர்த்தால்
.. தக்கவரின் மனக்கனலே சீற்றம் தானே!

No comments:

Post a Comment