Tuesday, November 20, 2012

விழி! எழு!

விழி! எழு!
 
சாதிமத பேதத்தைச் தகர்க்கும் யுக்தி
.. சமுதாயச் சமத்துவத்தைச் சமைக்கும் சக்தி
நீதிநெறி நேர்மையிவை எவர்க்கும் ஒன்றே
.. நியதிகளும் மரபுகளும் அரண்களாக
சோதனைகள் தொடர்ந்திடினும் மோதி வெல்ல
.. சுயமரியாதைச் சுடராய்ப் பகையைத் தீய்க்க
ஏதுமில்லை எனப்பிறர்முன் கைகள் ஏந்தா
.. இந்நாட்டின் பொற்காலம் இளைஞர் முன்னே!
 
பாரதத்தின் பழம்பெருமை பேசிக் கொண்டே
.. பணியாற்றச் சுணக்கமுறும் பிணிஏற் காமல்
நேரத்தைப் பொன்னாக்க நிமிர்த்து நெஞ்சே!
.. நீபிறந்த மண்ணுக்குன் பங்கை ஆற்று!
பேருக்கும் புகழுக்கும் பேராசைக்கும்
.. பெரும்பொழுதைக் கழிக்காது வீறு கொண்டே
யாருக்கும் இளைத்தவனாய் இருக்க மாட்டேன்
.. எனஎழுவாய்! பயனிலையே செயற்படாது!
 
வழிகாட்டி முன்நடக்கும் வலிவை நெஞ்சில்
.. வளர்காலைப் பொழுதிருந்தே வளர்த்துக் கொள்ள
செழுப்புக்குச் சிந்தனையை செம்மை ஆக்கு
.. செயல்சிறந்தோர் சென்ற வழி ஆய்ந்து செல்க!
அழிப்பதற்குத் துடிக்கின்ற கையடக்கு!
.. அறிவால் ஆம் பயனென்னும் அறுவடைசெய்!
இழிவுக்கும் எளியவரே அடங்கிப் போவார்
.. எனும்நிலையில் ஏய்ப்பவரை வீழ்த்து! வெல்க!

No comments:

Post a Comment