Friday, November 9, 2012

நாடு

நாடு
 
நாடுமொழி மக்களின்மேல் பற்றுள்ளோரே
.. நாடாள்வார் எனும்நிலையில் வாழ்க்கைத் தேவை
ஈடேறும் என்பதிலோர் ஐயம் இல்லை
.. எள்ளளவும் வஞ்சமின்றி பொதுத்தொண்டாற்ற
கேடுகளில் கொழுப்பவராய் இழிந்து வாழக்
.. கிஞ்சிற்றும் நினையாத நெஞ்சம் கொண்டோர்
ஓடுகின்ற புதுப்புனலாய்ச் சுறுசுறுப்பாய்
.. உழைத்தாலே மானிலத்தில் செழுமை ஓங்கும்!
 
மனச்சான்றை மதிப்பவரே மாந்தர் ஆவார்
.. மாண்புறுதல் உரிமைபொது வென்பர் மேலோர்
தனதான்யம் பாக்கியங்கள் வாழ்வோர்க் கெல்லாம்
.. தகுதியினால் நேர்மைவழி வாய்க்க வேண்டும்
இனம்சாதி மொழிஎன்னும் பேதம் நோக்கி
.. எதனுயர்வும் கணிக்கின்ற இழிவில்லாத
குணமுள்ளோர் கூடிவரும் ஓடும் இன்னல்!
 
தனிமனித ஒழுக்கந்தான் சமூக நன்மை
.. தழைத்தோங்கச் சான்றாகும் வீடு வீதி
இனிமையிலே தோயுமெனில் எங்கும் என்பம்
.. இவ்வண்ணம் சிற்றூர்கள் தொடர்ந்து பேரூர்
வினைவல்லார் பொதுநோக்கால் விளையும் நன்மை
.. விரிவானால் அந்நாட்டில் நலங்கள் பொங்கும்
முனைப்பெல்லாம் முன்னேற்றம் தனையே நாட
.. முழுமையுமாய்த் தன்னிறைவு பெறுமே நாடு!

No comments:

Post a Comment