Saturday, November 3, 2012

விடிவெள்ளி

விடிவெள்ளி
 
குவியிருளைக் கொன்றொழிக்கும் விடியலுக்கு முந்தோன்றி
புவியொளிக்குக் கட்டியத்தைப் புகல்கின்ற விண்மீனே
விடிவெள்ளி எனநாமும் விளம்புகின்றோம் விண்நோக்கி!
 
தவிக்கின்ற மக்கள்மனத் தாகத்தை நன்குணர்ந்து
அவலத்தை நீக்க அருந் துணையாவோர் விடிவெள்ளி!
மிகுதுயரை அளிக்கின்ற மேலான வாழ்வினரின்
அகந்தைஅழிந்தேழையரை அணைத்திடுவோன் விடிவெள்ளி!
 
அறியாமை இருளினிலே அழுந்திக் கிடப்பார்க்குச்
சரியான வழிகாட்டும் நெறியாளன் விடிவெள்ளி!
உலகத்தின் நன்மைக்கே உதவிடவே அறிவாற்றல்
பலவகையில் பயனாக்கும் பண்பாளன் விடிவெள்ளி!
 
மக்கள் நலம்நாடி மனம்வாக்கு காயத்தால்
பக்கம்துணையாய்நிற்கும் பற்றாளன் விடிவெள்ளி!
ஏனென்று வினாத்தொடுத்த எழுச்சிச்சிந்தனையாளன்
ஏதன்சு நகரத்துச் சாக்கரடீஸ் விடிவெள்ளி!
 
கோனாட்சிக் கெதிராகக் குரல்கொடுத்துத் தன்னுரிமைக்
கொள்கைவெற்றி கண்டகாந்தி பாரதத்தின் விடிவெள்ளி!
பொதுவுடைமைத் தத்துவத்தைப் புவியெங்கும் பரப்பியநல்
மதிவல்லார் காரல்மார்க்ஸ் மானிலத்தின் விடிவெள்ளி!
 
மூடப் பழக்கங்களின் கேடுகளை எடுத்துரைத்துப்
பீடுபெறப் பகுத்தறிவைப் பரப்பிவந்த ஈவேரா
மாடுகளாய் மந்தைகளாய் மதம்பிடித்தோர் வதைத்திடவே
கேடுகளில் கிடந்தோர்க்குக் கிழக்குத்திசை அம்பேத்கர்
 
புலமையெனில் வாழ்க்கையிலே வளம்சேர்க்க எனப்பாடும்
நிலைமையது நீங்ககவி திலகமெனும் பாரதியார்
என்றிங்கே வானுயர்ந்து எழுச்சிதரும் விடிவெள்ளி
பன்னூறாய் முன்னிருக்க பாதைமாறிப் பறப்பதுவா?

No comments:

Post a Comment