Monday, November 5, 2012

கனவு

கனவு
 
காணுங்கள் கனவென்றால் படுத்துக் கொண்டு
.. கண்மூடி நித்திரையில் காண்பதன்று!
பூணுங்கள் உறுதிநெஞ்சில் பிறந்த மண்ணைப்
.. போற்றுகிற நிலைக்குயர்த்தும் செயல்கள் ஆற்ற!
நாணுகின்ற வினைபுரியும் நினைவை மாற்றி
.. நாட்டுநலம் கூட்டவினை யாற்றும் வன்மை
பேணுங்கள் எண்ணம்சொல் செயல்களாலே!
.. பெருமையெலாம் கூடிவரும் வீட்டில் நாட்டில்!
 
படுத்திருக்கும் குதிரையதைப் பந்தயத்தில்
.. பறக்கவிட எழுப்பமுயல் வதிலும் மேலாம்
அடுத்துநிற்கும் குதிரையினை உசுப்பல் என்போம்!
.. அறிவாற்றல் ஆயத்தம் வேகம் காட்டும்
தடுக்கவரும் எதிர்ப்புகளைத் தாண்டிப் பாயும்
.. தன்மையுறப் பயிற்சிகளில் தரமும் வேண்டும்!
விடும் அம்பின் கூர்வெற்றி கொடித்திடாது
.. வைத்தகுறி சரியாக இருக்க வேண்டும்!
 
படுத்தநிலை யிலோடும் பாதம் உண்டா?
.. பந்தயம் இல்லாதிருந்தும் மனம்தான் ஓடும்!
எடுத்துக்கொள் ளும்செயலில் ஏற்றம் காண
.. எழுச்சிக்கொள் லாதவனால் இயலா தென்றும்!
கொடுத்திருக்கும் வாய்ப்பறிந்தே இயங்கி வெற்றிக்
.. கொடிநாட்டும் வன்மைமனம் உடலுக் கேற்றும்!
மிடுக்கோடு தலைநிமிர்வில் வெற்றி சேர்ந்து
.. மேன்மையுற நம்பிக்கை உயர்த்து வோமே!

No comments:

Post a Comment