Friday, November 2, 2012

தேடல்

தேடல்
 
பகுத்தறிவால் மிருககுணம் பற்றறுக்க வில்லையென்றால்
செகத்தில் உலர்சருகெனவே செத்தொழிதல் மேலலவா?
பின்நின்று சொறிவதற்குப் பெரியவர்கள் தம் முதுகே
என்பேறு என்றிருப்போன் இழிந்தவனே எனல்தவறா?
 
தடம்பற்றி நடவாமல் தம்நலத்தின் அடியொற்றும்
மடம்கொண்டோர் மலிவாக இடம்பிடித்துக் கொள்வதுவோ?
அடம்பிடிக்கும் அறிவாற்றல் அழிவினிலே தொடர்ந்திங்கே
நடமாடும் அரவங்கள் நன்மையுறல் கொடிதன்றோ?
 
கடனாற்றும் நல்லவர்கள் கடனாளி யாய்க்கிடக்க
விடநெஞ்ச வல்லவர்கள் வீதிகளில் ஊர்வலமா?
திடம் உடலில் இருந்தாலும் செயலின்றி மடிவளர்த்தால்
தடையின்றி உள்ளவையும் நடைபோட்டுப் போகாவோ?
 
கொடியவர்கள் எல்லோரும் கொடிபிடித்து நடந்திடக்கீழ்ப்
படிந்தவராய்ப் படித்தவரும் அடியாட்கள் படையினிலா?
விடிவெள்ளி எவரென்னும் விழிப்புணர்வுத் தேடலிலே
முடிவாக விடைகண்டு முன்னேறல் எந்நாளோ?

No comments:

Post a Comment