Tuesday, November 6, 2012

பொய்யும் மெய்யும்

பொய்யும் மெய்யும்
 
மெய்யதன் உறுப்பில் வாயே
.. மெய்யுடன் பொய்யைச் சொல்லும்
ஐயமும் கேட்கும் கெஞ்சி!
.. ஐயமும் தெளிந்து கொள்ளும்!
செய்கையால் விளிக்கும் போது
.. சேதியும் மாறக் கூடும்
பொய்யினை மௌனம் கூடப்
.. புகன்றிடும் புன்மை என்னே!
 
செப்பிடும் உரைகள் யாவும்
.. செம்மையாய் விளங்க வேண்டின்
ஒப்பிடும் உண்மையாக
.. உயர்ந்ததாய் இருக்க வேண்டும்!
தப்பெனத் தெரிந்தால் நாவே
.. தயங்கிடும் உச்சரிக்க
அப்படிச் சொல்லி விட்டால்
.. அப்புறம் பொய்யே வாழ்க்கை!
 
மெய்சொலின் இழப்பு நேரும்
.. மென்னியில் கயிறும் சேரும்
செய்ததைக் கண்ணால் கண்டும்
.. செப்பிட உயிர்க்கா பத்து!
பொய்யிலே பிழைக்கும் கூட்டம்
.. பொறுத்துக் கொள்ளாது மெய்யை
அய்யகோ! மனத்தைக் குத்தி
.. அவலத் திலாழ்த்தும் பொய்யே!
 
பொய்ம்மையைப் புகலும் வாய்தான்
.. புழுத்துத்தான் போகும் என்றோ
மெய்ம்மையைக் கொன்றால் தீமை
.. மேன்மையை அழிக்கும் என்றோ
செய்கையில் போலி ஓங்கி
.. செயம்கொளல் அடுக்கா தென்றே
பொய்ம்மையை இகழென் றாரோ?
.. பொருள்புரிந்தேற்போமாநாம்?
 
கணத்தொறும் நெஞ்சைக் குத்தும்
.. கருவிபொய் உருவிலாமுள்!
குணத்திலே இழந்தோர் என்று
.. கூறுவர் பொய்யர் தம்மை!
பணத்திலே பற்று வைப்போர்
.. பதவியின் பெருமை சாய்த்துப்
பிணமென வீழ்த்தும் கேட்டின்
.. பிறப்பிடம் புல்லர் நாவே!
 
பொய்வழிச் சுருட்டும் காசால்
.. பொன்பொருள் திரட்டும் மாசைச்
செய்பவன் ஒருநாள் அந்தச்
.. சேற்றிலே அழுந்திச் சாவான்!
மெய்க்குரலுக்குச் சொந்தம்
.. மென்மைதான் மெதுவாய்த் தோன்றும்
பொய்யதே உரக்கக் கூவும்
.. போலிக்கே கவர்ச்சி தூக்கல்!
 
பொய்ம்மையைப் புகழச் சூழும்
.. போக்கினர் புரட்டுக் காரர்
மெய்க்குவீண் மெருகு வேண்டாம்
.. மிரட்டிடும் தொனியும் வேண்டாம்
செய்வினைச் சீர்மை சேர்க்கச்
.. சிந்தனைச் செப்பம் செய்வோம்!
நெய்திடத் தகுந்த நூலால்
.. நெசவெனில் சிறக்கும் சேலை!

No comments:

Post a Comment