Thursday, November 15, 2012

சமத்துவம்

சமத்துவம்
 
நாட்டுவளம் யாவர்க்கும் சமமே மக்கள்
.. நாடிநரம் புழைப்பெல்லாம் பொதுமுன்னேற்றங்
காட்டுவதாய் வஞ்சமின்றிக் கட்டுப்பாடாய்க்
.. கடமையுணர்வுடன்செயலில் சிறக்க வேண்டும்
மூட்டை தூக்குவோனுக்கும் உரிமை உண்டு
.. முன்னேற்றம் உழைப்புக்குச் சமமாய் வேண்டும்!
ஏட்டறிவைக் கற்போர்க்குள் பாகுபாடேன்?
.. எல்லார்க்கும் சமச்சீராய்க் கல்வி வேண்டும்!
 
பணிவாய்ப்பில் பிணித்தீர்வில் சமத்துவத்தைப்
.. பாழாக்கும் பணத்துக்கே இடமில்லாத
துணிவான மாற்றங்கள் நடைமுறையில்
.. தூய்மையுடன் நேர்மையுறத் தொடங்க வேண்டும்!
மணிமணியாய் வளரிளைஞர் நாளை நாட்டின்
.. மகத்தான குடிமக்கள் ஆகி ஆக்கப்
பணியினிலே அணிஅணியாய் முன்னேற்றத்தைப்
.. படைத்திடவும் பகிர்ந்திடவும் பழக்கி வைப்போம்!
 
உழவருடன் நெசவாளர் பாண்டம் செய்வோர்
.. உற்பத்தி செய்தொழிலில் உழைப்போர் நாளும்
நிழல்வெயிலென் றில்லாமல் கடமை ஆற்றல்
.. நிறுத்திவிடின் உலகத்தின் நிலை என்னாகும்?
ஒழுங்காக உழைப்போர் எத்தொழில் செய்தாலும்
.. உரிய மரியாதையுடன் உயரவேண்டும்
வழுவுதலும் நழுவுதலும் வழக்கமாகா
.. வழிமுறையே சம்த்துவத்தை வழங்கும் நன்றே!

No comments:

Post a Comment