Thursday, November 22, 2012

பண்பாட்டுப் பொங்கல்

பண்பாட்டுப் பொங்கல்
 
திருவிளையும் நாளெல்லாம் திருநாள் ஏரின்
.. திறத்தாலே நிலம்செழித்து வளம் பெருக்க
அருமுழைப்பைத் தருகின்ற மக்கள் மாக்கள்
.. அளித்தகொடை உயிர்வாழ்வு தன்னை வையம்
அறுவடையின் திருநாளாய்ப் போற்றல் மாண்பு
.. அகமகிழ்ச்சி முகப்பொலிவாய்த் தங்கிப் பொங்கி
விரிகதிரோன் தருவெப்பம் ஒளியும் தந்த
.. விளைவுகளைப் படைத்தின்பம் பொங்கும் பொங்கல்!
 
திருமணத்தைக் கொண்டோரும் எதிர்பார்ப்போரும்
.. தித்திக்கும் கனவுகள் சித்திக்கும் என்று
பெருமகிழ்ச்சி பொங்குகிற உள்ளத்தோடு
.. பேச்சினிலும் பார்வையிலும் புதிய மாற்றம்
உருவாதல் புதிராகப் புதுமையாக
.. உணர்வலையில் நனைந்தவராய் மகிழும் பொங்கல்
செருமுகத்து வீரனைப் போல் தோன்றும் காளை
.. சீற்றத்தை அடக்கிவெற்றி போற்றும் பொங்கல்
 
கொல் ஏற்றுக் கோட்டுக்கும் அஞ்சான் வெற்றிக்
.. கொடியோடு கொடியவளை நோக்கால் தாக்கச்
சில்லென்று குளிர்ந்தவளாய்ச் சிரித்து நாணும்
.. சித்திரத்தை வரையுங்கைத் திறந்தான் உண்டோ?
எல்லோரும் களித்துக் கொண்டாடும் பொங்கல்
.. இல்லார்க்கும் இயலுதவி செய்யும் பொங்கல்
நல்லதமிழ்ப் பண்பாட்டை நாட்டும் பொங்கல்
.. நலமோங்க வளமோங்கப் பொங்குவோமே!
 

No comments:

Post a Comment