Thursday, November 8, 2012

இயல்பு

இயல்பு
 
என்னியல்பைப் பிறர்போற்றத் தேவை யில்லை
.. எதிர்பார்த்தால் அதுவே பாசாங்காய் மாறும்!
என்நெஞ்சின் முழுநிறைவைத் திருடிக் கொள்ள
.. எவராலும் ஆகாது தனிச் சொத்தாகும்!
என்செயலை நேர்மையெனும் உள்ளுணர்வே
.. என்றென்றும் நெறிப்படுத்தும் என்னை என்றால்
என்விழியில் அஞ்சாமைத் தெளிவைக் கூட்டும்!
.. எனைபோற்றல் தூற்றல் ஏதும் மாற்றல் இல்லை!
 
தெளிவடைந்து தேர்ந்தோரைத் திருப்பம் ஏதும்
.. திசைமாற்றி வசைசேர்க்க இசைதல் இல்லை
ஒளிவுமறை வெனல் உண்மை வழியில் நில்லா
.. உரையாடுங் குரலிலுரத் தேயொ லிக்கும்!
வெளிப்புனைவு வேண்டாம் வான் கதிரொளிக்கு!
.. விசையேறும் மணத்துக்கா, காற்றுத் தேர்க்கே!
விளிக்கின்ற குரல் மேவும் விழைவுணர்ந்து
.. விலங்கினமும் நிலையறியும் கலையில் நிற்கும்!
 
சிலபோது நினைவியக்கச் செயல்கள் வெற்றிச்
.. சிலிர்ப்பேற்றும் சிந்தைக்கு நேரும் வாய்ப்பு!
புலர்காலப் போதிசைப்பார் பூபாளத்தை
.. பூபாள இசைகேட்டா புலரும் போது?
நலம்தீது நடப்பெல்லாம் இயல்பாகத்தான்!
.. நடைமாற்றும் பழிப்புக்கா நாக்கு வன்மை!
கலமறிந்து வைக்கின்ற பொருள் மாறாது!
.. கலக்கத்தில் ஆய்வென்றால் கரை ஏறாதே!

No comments:

Post a Comment