Friday, November 16, 2012

பூமிக்குள் இல்லை புதையல்!

பூமிக்குள் இல்லை புதையல்!
 
பூமிக்குள் மட்டுமில்லை புதையல் நெஞ்சம்
.. பொலிவாம்நல் எண்ணங்கள் செயற்புதையல்
சேமித்தால் செலவாகிப் போகாச்செல்வம்
.. செழுமையினும் சிறந்தமதிப் புதையல் சிந்தை
சாமிக்குப் பலிகொடுத்துப் பெறுதல் எல்லாம்
.. சத்தியமாய் வஞ்ச நெஞ்சச் சதிப்புதையல்!
நாமின்று பெற்றுள்ள இலக்கியங்கள்
.. நல்குநய நற்கருத்துப் புதையல்கள்தாம்!
 
பகல்வானின் நீலத்தில் வெள்ளை மேகம்
.. படகினைப்போல் செலுங்காட்சி எழிற்புதையல்
மிகக்கறுத்த மேகத்தூடோடும் மின்னல்
.. மேவுமிடி ஓசையுடன் நீரைக் கொட்டி
அகம்புதைய அச்சமகிழ் போலுணர்வை
.. அளிக்குமழை வனப்பது வான்நீரின் மாட்சி!
தகத்தகாயச் சுடரொளியால் பொன்வண்ணம்சேர்
.. தண்ணீரின் ஆழத்தில் புதையல் என்னே!
 
மண்ணுக்குள் முன்னாளில் புதைந்து போன
.. மாநகர்கள் பொன்வெள்ளி நகைகள் காசு
விண்ணவரின் உருவங்கள் சிலைகள் சிற்பம்
.. வெளிப்பட்டு வரலாற்றுப் புதையல் ஆகும்
கண்டவர்கள் பழங்கால நாகரீகக்
.. காலத்தைக் கணிக்கின்றார் பூமியின் மேல்
எண்ணற்ற வகையினிலே நமக்குத் தோன்றா(து)
.. இருப்பவையே ஏராளம் புதையல் அன்றோ?

No comments:

Post a Comment